பத்து ஆண்டுகளின் ரத்தினங்கள்!

பத்து ஆண்டுகளின் ரத்தினங்கள்!
Updated on
4 min read

பேசாப் பொருளைப் பேசி, பொதுவெளியில் உரையாடலை ஊக்குவித்த படங்கள், 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவந்திருக்கின்றன. ‘திரைப்படம் இயக்குநரின் மீடியம்’ என உணர வைத்த அப்படைப்புகளைப் பற்றிய சுருக்கமான பார்வை இது:

2011 - ஆரண்ய காண்டம்: சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என இரண்டு தேசிய விருதுகளால் அங்கீகரிக்கப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. படம் வெளியானதே தெரியாமல் போனதால், படத்துக்கு விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு பார்வை யாளர்கள் தேடத் தொடங்கியபோது அது பெட்டியில் முடங்கியிருந்தது.

புரிதலில் சிக்கலற்ற ‘நான் - லீனியர்’ திரைக்கதை, அதில், தேய்வழக்குகளை உதறிய கதாபாத்திர வார்ப்பு, நட்சத்திரத் தேர்வு, படமாக்கம், பின்னணி இசையைப் பயன்படுத்திய விதம் என பல தளங்களில் கட்டுடைத்தலை நிகழ்த்தியது இந்த ‘கேங்ஸ்டர்’ படம்.

2012 - அட்டகத்தி: புறநகர் சென்னையின் வாழ்க்கை, அங்கே அதிகமாய் வாழும் பூர்வக்குடி மக்கள், அவர்கள் பேசும் அசலான வட்டார வழக்கு, அவர்களது இசையான ‘கானா’ பாடல்கள் ஆகிய அம்சங்களோடு, பெரும் திருப்பங்களை நம்பி யிருக்காத எளிய திரைக்கதை வழியே வசீகரித்த மண்ணின் சினிமா ‘அட்டக்கத்தி’ அறிமுக நடிகர்களை கதாபாத்திரமாக உலவ வைத்து, அவற்றை ‘கேண்டிட்’ தன்மைகொண்ட ஒளிப்பதிவு மூலம் உயிர்ப்புடன் சித்தரித்து இயக்குநராக அறிமுகமானர் பா.இரஞ்சித்.

2013 - சூது கவ்வும்: அவல நகைச்சுவைத் திரைப்படம் என்கிற வகையை முயற்சித்து, ‘சூது கவ்வும்’ மூலம் ஆராவாரமான வெற்றியைப் பெற்றார் அறிமுக இயக்குநர் நலன் குமரசாமி. ஞாயிற்றுக்கிழமை தொழிலுக்கு விடுமுறைவிட்டு, இதய சுத்தியுடன் வகுத்துக்கொண்ட நியதிகளைக் கடைப்பிடித்து, ஆள் கடத்தல் செய்யும் தாஸ் என்கிற நடுத்தர வயது முதன்மைக் கதாபாத்திரம் தமிழ்ப் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிது.

அதை ஏற்று நடித்த விஜய்சேதுபதி நட்சத்திரமாக உயர்ந்தார். தாஸின் கடத்தல் அணியில் இணைந்துகொண்டவர்கள், அவரது கற்பனையில் வந்துபோகும் ஷாலு என நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியில் சஞ்சரித்த கதாபாத்திரங்களை எழுதிய விதம், சமகாலத்தின் வாழ்க்கையைப் பிரதிபலித்த அவல நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் ஆகியன, திரைக்கதையில் மலிந்திருந்த தர்க்கப் பிழைகளை மீறி, கால ஓட்டத்தில் இன்று அது ஒரு ‘கல்ட் கிளாசிக்’ படமாக மாறிவிட்டது.

2014 - ஜிகர்தண்டா: முதல் படம் எடுக்க வேண்டும் என தவிக்கும் ஓர் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே திரைக்கதையின் அணுகுமுறையாக மாறுவதுதான் ‘ஜிகர்தண்டா’ வழங்கிய ஆச்சரியம்!

மையக் கதாபாத்திரம் என்கிற ஒன்று இல்லாமல், நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போனதன் மூலம் கதைக் களத்தில் நிகழச் சாத்தியமுள்ள சம்பவங்களையே ‘மாஸ்’ தருணங்களாக சித்தரித்துக் காட்டினார் கார்த்திக் சுப்பராஜ். எல்லாக் கதாபாத்திரங்களையும் ஏதோ ஒரு விதத்தில் பகடி செய்ததுடன் எதற்கும் எந்தப் பீடமும் கொடுக்காமல் ஆகிவந்த படிமங்களை உடைத்தெறிந்த கெத்தும் இந்தப் படத்துக்கு உண்டு.

2015 - காக்கா முட்டை: மாநகரக் குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஏங்குகிறார்கள். அவர்களது ஏக்கத்தின் வழியாக, வளர்ச்சி என்கிற பெயரால் உலகமயமாதல் கொண்டுவந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகிவற்றைத் துளிப் பிரச்சாரமும் இல்லாமல், தூய்மையான எள்ளல் வழியாகவே ஒரு மௌன சாட்சியாக நின்று பதிவு செய்திருந்தார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் மணிகண்டன்.

படத்தின் இறுதியில் பீட்சாவைச் சாப்பிட்டபின் ‘நம்ம ஆயா சுடுற தோசையே பரவாயில்லடா; இது அவ்ளோ கேவலமா இருக்கு!’ என்று அச்சிறுவன் பீட்சாவைத் திட்டுவதுபோல் தோன்றினாலும் அது திறந்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டது. நம்மிடமிருக்கும் சுயசார்பும் எளிமையுமே சிறந்தது எனச் சொல்லாமல் சொன்னது.

2016 - விசாரணை: ‘அதிகார வர்க்கத்தின் அடியாள்’, ‘ஏவல் துறை’ என்றெல்லாம் காலம்தோறும் காவல் துறை மீது வைக்கப்பட்டு வரும் கடும் விமர்சனத்தின் பின்னால் இருக்கும் உண்மையை உரசிக் காட்டிய படம். ஏதுமற்ற எளியவர்கள் என்றாலும் எண்ணிறைந்த செல்வமும் செல் வாக்கும் கொண்டவர்கள் என்றாலும் அதன் அத்துமீறல் கழுத்தை இறுக்கும்போது யாரும் தப்ப முடியாது என்பதை, நேரடி சாட்சிபோல் விரியும் காட்சிகள் வழியே பார்வையாளர்களைப் பதைபதைக்க வைத்தப் படைப்பு.

காக்கிச் சட்டை அணிந்த சாகச நாயகன் படங்களை வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து, காவல் துறையின் மனசாட்சியைக் ‘குறுக்கு விசாரணை’ செய்த புத்தாயிரத்தின் முக்கியப் படைப்பு. ‘ஜெய் பீம்’, ‘ரைட்டர்’ தொடங்கி இன்றைய ‘ஆதார்’ வரையிலான படங்களுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த படம்.

2017 - அறம்: விண்ணுக்குச் செயற்கைககோள்களை ஏவிக்கொண்டிருக்கும் நாட்டில், மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றுக் குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க உருப்படியான கருவிகள் இல்லையே என்கிற வேதனையை, ஏழை எளிய விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று அறச்சீற்றத்தோடு பேசிய படம். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடிப்படையான குடிநீர், சாலை வசதியின்மை, அரசியல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ஆகியவற்றை ஒரு பெண் மையக் கதாபாத்திரத்தின் குறுக்கீட்டுடன் உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருந்தார் இயக்குநர் கோபி நயினார்.

“நான் அரசாங்கம்னா, மக்கள்னு நினைக்கிறேன். நீங்க அரசாங்கம்னு எதைச் சொல்றீங்க?” என மாவட்ட ஆட்சியர் மதிவதனி கேட்கும் கேள்வி, ஓட்டுப் போட்டுவிட்டால் ஆள்பவர்கள்தான் அரசாங்கம் என்றாகிவிட்ட அமைப்பில், ‘இல்லை மக்கள்தான் அரசு’ என்கிற உண்மையைப் பொட்டில் அறைந்து சொன்ன படைப்பு.

2018 - பரியேறும் பெருமாள்: சாதியின் பெயரால் ஒரு பகுதி மக்கள் பல விதங்களில் ஒடுக்கப்படுவதை, அதிலிருந்து மீண்டெழுந்து சுயமதிப்பைக் காத்துக்கொள்ள கல்வி உதவும் எனத் திடமாக நம்பும் ஒரு கிராமத்து இளைஞனின் கல்லூரி வாழ்க்கையை, அதிர வைக்கும் காட்சிகள் வழியே காட்டிய படம் ‘பரியேறும் பெருமாள்’.

சாதியும் அதன் மீதான பற்றும் அது உருவாக்கிய செருக்கும் ஆதிக்க சாதி மனிதர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதைச் சித்தரித்த விதம், புத்தாயிரத்தின் அழுத்தமான தலித்திய சினிமாக்களில் ஒன்றாக இப்படத்தை ஆக்கியது. உண்மையிலிருந்து எழுந்த கதையை வன்முறையை நோக்கி நகர்த்தாமல், மனிதத்தை நோக்கி நகர்த்தி நம்பிக்கையூட்டியது மாரி செல்வராஜின் இயக்கம்.

2019 - டுலெட்: ஒரு விளிம்பு நிலை சினிமாக் கலைஞனின் குடும்பம் வாடகை வீடு தேடி அலையும் கதை. மேலோட்டமாக அப்படித் தோற்றமளித்தாலும் உலகமயமாதலின் விளைவு, சாமானிய மனிதர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கும் கதையாக, கட்டிடங்களால் எழுந்து நிற்கும் நவீன சென்னையின் கதையாக, கோடிக்கணக்கான வீடற்றவர்களின் கதையாக, தமிழ்க் கல்வியின் கதையாக, நேயமற்ற வீட்டு உரிமையாளர்களின் கதையாக, படைப்பு சார்ந்த உழைப்பை நம்பிப் போராடுபவர்களின் கதையாக, மிக எளிய குடும்பங்களில் வளரும் குழந்தைகளின் கதையாக எனப் பல கண்ணிகளைக் காலகட்டத்தின் சாட்சியம்போல் ஒரே களத்தில் இயல்பாக பின்னியிருந்தது செழியன் இயக்கத்தில் வெளியான ‘டுலெட்’.

பாடல்கள், பின்னணி இசையின்றி, களத்தின் இயல்பான ஒலிகளும் ஒளிப்பதிவும் என இயக்குநரின் படைப்பாக்க அணுகுமுறையால் தமிழில் ஓர் உலக சினிமா சாத்தியமானது.

2020 - சூரரைப் போற்று: ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எழுதுபவர்களுக்கு வலுவான கோணமும் அணுகுமுறையும் அவசியம். முக்கியமாகப் படமாக்கப்படுபவரின் வாழ்க்கையிலிருந்து எதை மட்டும் எடுத்துக்கொள்வது என்கிற தேர்விலும் தெளிவு வேண்டும். அதில் தனித்து நின்றது ‘சூரரைப் போற்று’. ஏர் டெக்கான் நிறுவனத்தைத் தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் தொழில் வாழ்க்கை, சாகசங்களும் பரிசோதனைகளும் நிறைந்தது.

அதிலிருந்து, ‘சாமானியர்களுக்கும் விமானப் பயணத்தை மிகக் குறைந்த கட்டணத்தில் சாத்தியமாக்க வேண்டும்’ என்கிற ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டதால், திரைக்கதையின் இலக்கு தெளிவானது. இதனால், முதன்மைக் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் உணர்வைப் படம் வழங்கியதில் தாக்கம் தரும் ‘பயோபிக்’ படமாக உயர்ந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in