Published : 16 Sep 2022 04:27 AM
Last Updated : 16 Sep 2022 04:27 AM

10-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’ | திரைத் துறையினர் பார்வையில்...

வாழ்க்கையை ரீவைண்ட் செய்யும் வாய்ப்பு!

- பன்முகக் கலைஞர் சிவகுமார்

இரண்டாயிரமாண்டு வரலாற்றில், மனித இனம் எண்ணிறந்த படிப்பினைகளைப் படிக்கல்லாகக் கொண்டு மேலேறி வந்திருக்கிறது. இப்போது, ‘கரோனாவுக்கு எதிரான போர்’ என்று உலகம் முழுவதும் குறிப்பிடுகிறார்கள். கரோனாவை எதிர்மறையாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், வாழ்க்கை மீது பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியது மட்டுமல்ல; வாழ்வின் நிலையாமையை உணர்த்தி, சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ முயலவேண்டும் என்கிற மனமாற்றத்தைக் கரோனா கற்றுக்கொடுத்திருக்கிறது.

சிவகுமார்

மிக மிக முக்கியமாக, ஓடிக்கொண்டே இருந்தவர்களை ஒரே இடத்தில் சில காலம் நிலையாக உட்கார வைத்து, கடந்து வந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க அவகாசம் கொடுத்திருக்கிறது. வாழ்ந்த வாழ்க்கையை ‘ரீவைண்ட்’ செய்து பார்க்க வாய்ப்பளித்திருக்கிறது. இப்படி ‘ரீவைண்ட்’ செய்து பார்ப்பதும் அதை எழுத்தாக, பேச்சாக, இலக்கியமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் சமூகத்துக்கு ஒரு மனிதன் விட்டுச் செல்லும் சிறந்த கொடை. ஏனென்றால், வாழ்கையைப் பேசும் எழுத்திலிருந்துதான், வாழ்வின் முதல் படிக்கட்டில் அடியெடுத்து வைக்கும் அடுத்த தலைமுறைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையும்.

என்னை நான் ரீவைண்ட் செய்து பார்ப்பதும் அதை சமூகத்திடம் பகிர்ந்துகொள்வதும் எனக்கு எப்போதும் ஒரு பயிற்சி. கரோனா காலத்தில் இன்னும் கூடுதலாக என்னை ரீவைண்ட் செய்து பார்த்தபோது, அவை அத்தனையையும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்து தமிழ் திசை களம் அமைத்துக் கொடுத்தது.

அந்த வரிசையில், என்னுடைய 4 வயது முதல் 16 வயது வரையில் எனது பால்யம் தொடங்கி பதின்மம் வரையில், கிராமத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையையும் கேள்விப்பட்ட விஷயங்களையும் ‘கொங்கு தேன்’ என்கிற தலைப்பில் தொடராக எழுதினேன். அதன்பின்னர், ஓர் ஓவியனாக ஏழு ஆண்டுகள் வாழ்ந்து தீர்த்த காலத்தில், இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து, பல்வேறு முக்கிய இடங்களுக்குச் சென்று ‘ஸ்பாட் பெயிண்டிங்’ வரைந்த நாட்களை நினைவு கூர்ந்து, அப்போது எங்கெல்லாம் பயணித்தேன், எதையெல்லாம் வரைந்தேன், எந்த இடத்தில் அமர்ந்து வரைந்தேன், எப்போது வரைந்தேன், அந்தப் பயணத்தில் எவ்வளவு செலவு செய்தேன், எப்படிச் சமாளித்தேன் என்பது வரை எனது அனுபவங்களையெல்லாம் ‘சித்திரச்சோலை’ என்கிற தொடராக 33 அத்தியாயங்களில் பதிவு செய்தேன்.

மூன்றாவதாகத் திரையுலகில் நான் சந்தித்த ஆளுமைகள், மனிதர்கள் பற்றியும் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் ‘திரைப்படச்சோலை’ என்கிற தலைப்பில் 50 வாரங்கள் பதிவு செய்தேன். இந்த மூன்று தொடர்களுக்குப் பிறகு நான்காவதாக நான் கையிலெடுத்த கடமை என்று ‘திருக்குறள் கதைகள்’ தொடரைச் சொல்வேன். சுமார் இரண்டாண்டு காலம் அத்தொடரை இடைநிறுத்தாமல் எழுதி முடிக்க இந்து தமிழ் திசையே காரணமாக அமைந்தது. திருக்குறளைப் படித்தறியாதவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் கதைகளை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில் இத்தொடர் வெளியானபோது அத்தொடருக்கு வாசகர் கொடுத்த வரவேற்பை மறக்கவே முடியாது.

அந்தத் தொடரும் நூலும் சென்று சேர்ந்த வேகத்தில், 18வது ஈரோடு புத்தகத் திருவிழாவில், திருக்குறள் 100 நூலில் உள்ள வாழ்க்கைக் கதைகள் அனைத்தையும் மேடையில் இடைவிடாது நான்கு மணி நேரம் உரையாற்றி அரங்கேற்றும் விழா கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவையனைத்துக்குமே இந்து தமிழ் திசை அடுத்தடுத்து எனது தொடர்களை வெளியிட்டு அளித்த ஊக்கம் முதன்மையானது என நம்புகிறேன். அதற்குக் காரணமாக இருந்த இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே.அசோகனுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் என்றும் எனது நன்றி.

அன்புடன்
சிவகுமார்

-----------

நானும் ஓர் அங்கமாக இருப்பது என் பாக்கியம்!

“ஒருமுறை என்னோட ஃபிரெண்ட்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ, ‘நண்பா.. ‘இந்து தமிழ்’ நாளிதழ்ல இருந்து இன்டர்வியூ கேட்குறாங்கடா?’ன்னு சொன்னேன். அதுக்கு அவன், ‘என்ன மாதிரியான இன்டர்வியூடா’ன்னு கேட்டான். ‘என்னோட லைஃப் ஹிஸ்ட்ரியைத் தொடராக் கேட்குறாங்கடா?’ன்னு சொன்னேன். அதுக்கு அவன், ‘டேய்.. ‘தி இந்து’ எவ்ளோ பாரம்பரியமான நாளிதழ்! அவங்க தொடங்கியிருக்கிற ‘இந்து தமிழ்’ நாளிதழை நானும் பார்த்தேன். இவ்ளோ பெரிய நிறுவனத்துல உன்னோட லைஃப் ஜெர்னியப் பத்தித் தொடரா கேட்குறாங்களா!?’’ன்னு ஆச்சர்யமாக் கேட்டான். அவன் நம்பவே இல்லை! இப்படி ஒரு சுவாரஸ்யத்தோடத்தான் ‘இதுதான் நான்’ தொடரை இந்து தமிழ் திசை நாளிதழ்ல எழுதத் தொடங்குனேன்..

பொதுவாவே, நான் பேட்டி கொடுக்கிறதுக்கு அவ்வளவா ஒப்புகிறது இல்ல. காரணம், எனக்கு நினைவுகளைத் திரும்பி பார்க்குறது பிடிக்காது. சில சமயம் மனசுக்கு அது கஷ்டத்தை கொடுத்துடும்னு நினைப்பேன். ஆனா, பாரம்பரிய நிறுவனத்துல இருந்து என்னை மதிச்சுக் கேட்டதும் சம்மதிச்சேன்.

பிரபுதேவா

‘இதுதான் நான்’ தொடரை எப்படி தொடங்கப்போறோம்னு இருந்தப்போ, ‘நீங்க பேசப்பேச அப்படியே அதுவா வளரும்!’னு ஆசிரியர் குழு சொல்ல, எழுதத் தொடங்கினேன். வாரா வாரம் தொடர் வெளியானபிறகு, எவ்ளோ பெரிய ஜாம்பவன்கள் எல்லாம் படிக்கிறாங்கன்னு புரிஞ்சது. நான் வெளியில போகும்போது அவ்ளோ பேர் படிச்சுட்டு மனம் விட்டு பேசினாங்க. முக்கியமா என்னோட அம்மா, அப்பா நான் எழுதுறது தெரிஞ்சதும் அப்படி சந்தோஷப்பட்டாங்க.

எனக்கு இந்த தொடர் எப்படி இருந்தால் நல்லாருக்கும்னு நினைச்சேனோ அதை முழுமையா கொண்டு வர்றதுல, ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆசிரியர் குழு எனக்கு பக்கபலமா இருந்தாங்க. இந்த வார்த்தை இப்படியே நான் சொன்னதுபோலவே இருக்கட்டுமேன்னு நான் சொன்னா, என்னோட அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அனுமதிச்சாங்க. கிட்டத்தட்ட ரெண்டு வருஷ பயணம். இது புத்தகமாகவும் வந்திருக்கு. இனி, காலம் முழுக்க இருக்கப்போகுது.

இப்போக்கூட இந்த தொடரை ‘இன்டர்வெல்’னு சொல்லித்தான் நிறுத்தியிருக்கேன். திரும்ப என்னோட 60, 70வது வயசுல நான் மீதமுள்ள அனுபவங்களைக்கூட எழுதத் தொடங்கலாம். அந்த உணர்வோடதான் இந்தத் தொடரை எழுதினேன். ஒரு மரியாதைக்குரிய நாளிதழ்ல என்னோட தொடர் வெளிவந்து எனக்கும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாதது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு நானும் ஒரு அங்கமாக இருப்பது என் பாக்கியம்”

- நடிகர் பிரபுதேவா

-----------------------

வாசகர் மனதில் நெருக்கம் காட்டும் இந்து தமிழ் திசை

144 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். அப்படிப்பட்ட ‘தி இந்து’ குழுமத்திலிருந்து கடந்த 2013, செப்டம்பர் 16ஆம் தேதி வெளியான இந்து தமிழ் திசை நாளிதழை வணங்குகிறேன்.. பாராட்டுகிறேன்.. வாழ்த்துகிறேன்.

‘வாராது வந்த மாமணிபோல்’ என்றொரு சொற்றொடர் தமிழில் உண்டு. அது இந்து தமிழ் திசை நாளிதழுக்கு சர்வ நிச்சயமாகப் பொருந்தும். பல ஆண்டுகளாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் அதன் குழுமப் பத்திரிகைகளும் இதழியல் துறையில் மிக உயர்ந்தத் தரத்தைப் பேணி வருகின்றன. அந்தப் பாரம்பரியத்திலிருந்து துளியும் விலகிவிடாமல், நம்பகத் தன்மைக்கும் உண்மைக்கும் முதலிடம் கொடுத்துச் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது இந்து தமிழ் திசை. அதன் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்பி.முத்துராமன்

இந்து தமிழ் திசைக்கும் எனக்குமான நேரடி உறவு ‘சினிமா எடுத்துப் பார்’ என்கிற கட்டுரைத் தொடர் மூலம் உருவானது. எனது நீண்ட நெடிய திரைப் பயணத்தை 75 வாரங்கள் தொடராக எழுதினேன். தொடர் வெளியானபோது உலகெங்கிலுமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வழியாக தமிழ் மக்கள் பேசியதையும் இன்னும் பேசிக்கொண்டிருப்பதையும் எண்ணி வியக்கிறேன். அத்தொடர் பின்னர் இந்து தமிழ் திசை பதிப்பகத்தால் புத்தக வடிவம் பெற்று, விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது.

மகா கலைஞன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலை வாழ்வைப் போற்றும் வகையில் இந்து தமிழ் திசை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட ‘சிம்மக்குரலோன் 90’ பிறந்த நாள் நிகழ்ச்சி உட்பட அதன் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதையும் மறக்க முடியாது.

உழைப்பால் உயர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 45 ஆண்டு காலத் திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் ‘சூப்பர் ஸ்டார் 45’ என்கிற பெயரில் கடந்த 2020இல் இந்து தமிழ் திசை வெளியிட்ட சிறப்பு மலர், ஒரு சிறந்த தகவல் பெட்டகம். இதைப் போலவே இந்து தமிழ் திசையின் தீபாவளி, பொங்கல், சித்திரை மலர்களின் ஆக்கமும் நேர்த்தியும் என்னைப் போன்றவர்களை எப்போதும் வாசிப்பின்பால் ஆழ்ந்திருக்கச் செய்கின்றன. இந்து தமிழ் திசையின் இந்த அரிய பணி அறிவுத் துறையில் வைர விழா கண்டு, பொன்விழா நோக்கி முன்னேறி, நூற்றாண்டைக் கடந்து செல்லட்டும் என வாழ்த்துகிறேன்..

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மந்தர்தம்

உள்ளத்தனைய உயர்வு

- இயக்குநர் எஸ்பி. முத்துராமன்


------------------

அறப்பணி தொடரட்டும்..


சமூகத்தில் நல்லவை அரிதாகவே நிகழும். அவ்வாறு நிகழ்ந்தவற்றில் ஒன்றுதான் இந்து தமிழ் திசையின் வரவு. தொழில்களில் முதன்மையான தொழிலாக அரசியல் மாறிய பின், ஊடகத்துறை அதன் கண்ணியத்தையும் மாண்பையும் இழந்ததனால் அறச் சிந்தனையை இழந்தது.

அரசியல்வாதிகளின் ஆதரவின்றி ஊடகப் பணியைச் சமரசமின்றி நடத்திக்கொண்டு வரும் ஊடகங்கள் அருகிக்கொண்டே வருவதைக் குறித்து இந்த சமூகமே கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்து குழுமத்திலிருந்து ‘இந்து தமிழ்’ என்கிற பெயருடன் அறப்பணியை தொடங்கியபோது சோர்ந்து கிடந்த படைப்பாளிகள் ஊக்கமும் நம்பிக்கையும் பெற்றனர். நாங்கள் வெளியிடுவதைத்தான் நீங்கள் வாசிக்க வேண்டும் எனும் வகையில் எழுதாத சட்டமாக்கி நாளிதழ்கள் நடத்தி வந்த வேளையில் வாசகர்களையே அவர்களின் கருத்துகளை பதிவு செய்து தமிழுக்கு புதிய திசையை உருவாக்கி இன்று ‘இந்து தமிழ் திசை’யாக உயர்ந்து நிற்கின்றது.

தங்கர் பச்சான்

எந்த மாதிரியான செய்திகள் செய்தியாக்கப்பட வேண்டும், அவை என்னென்ன வகையில் மக்களுக்குச் சென்றடைய வேண்டும், எவை எவை குறித்த பார்வை கூர்மையாக்கப்பட வேண்டும் என்பதை செய்து மக்களின் மனதில் இடம்பிடித்த நாளிதழ் இந்து தமிழ்திசை. நாளொன்றுக்கு நான்கு நாளிதழ்களை வாங்கி வாசித்து வந்த நான் ஒரு கட்டத்தில் ஒன்றுகூடத் தேவையில்லை எனும் முடிவெடுத்து வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். அவ்வேளையில்தான் என்னை இந்து தமிழ் திசை இழுத்துக்கொண்டது. பொழுது புலர்ந்து நாளிதழ் கைக்கு வரும் வரை பொறுமை காக்க வேண்டியிருந்தது. புரட்டி முடித்துத் தூக்கி வீசிய நாளிதழ் போன்றல்லாமல் எதிர்காலத்துக்கு உதவுமே என எண்ணிப் பாதுகாக்க வேண்டியதாகிவிட்டது.

தங்களுடைய வளர்ச்சிக்காக மட்டுமே தொடங்கப்படும் ஊடகங்கள் போல் அல்லாமல் சமூகத்தின் வளர்ச்சிக்காகவே தொடங்கப்பட்டிருப்பதை என்னைப் போன்றே பலரும் உணர்ந்தனர். இயற்கைச் சீற்றத்தால் மக்கள் இடர்களில் தவித்து வந்த வேளைகளில் இந்து தமிழ்திசை தன் பணியாக எண்ணிக் களத்தில் இறங்கி நேரடியாக மக்களுக்கு உதவியது. தானே மற்றும் கஜா புயல்களை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் சிக்கித் தவித்த வேளைகளில் களத்தில் இறங்கித் தனித்து செயல்பட்டு வந்த நான் இந்து தமிழின் செயல்பாட்டைக் கண்டு வியந்து என்னையும் அதனுடன் இணைத்துக் கொண்டேன்.

செய்திகளை வெளியிடுவது மட்டும் தங்களின் வேலையில்லை. இதுபோன்ற பணிகளும்தான் என்பதை பிற ஊடகங்களும் உணர்ந்துகொண்டு உதவும் வகையில் ஆற்றிய பணி என்றும் மறையாதது. எனது கருத்துக்களும் இந்து தமிழ் திசையின் கருத்துக்களும் ஒன்றிணைந்து போனதாலேயே தமிழகம் தோறும் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டேன்.

ஒவ்வொரு துறை சார்ந்த ஆளுமைகள், படைப்பாளிகள் தங்களின் கருத்துக்களை சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள தொடர் கட்டுரைகள் வெளிவந்த வேளைகளில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்து தமிழ்திசை போல் எவ்வித சமரசத்திற்கும் உட்படாத நான் சில நிபந்தனைகளை விதித்து அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தொடர் கட்டுரைகள் எழுதுவேன் எனக் கூறினேன். அதன்படியே எனது கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அனுமதி தந்தபொழுது மலைத்துப் போனேன். அதன்பின் நான் மக்களுடன் சொல்ல நினைப்பவற்றைச் சிறிதும் ஒளிவுமறைவின்றி ‘சொல்லத் தோணுது’ எனும் பெயரில் ஒரு ஆண்டு முழுவதும் 50 வாரங்கள் தொடர் கட்டுரைகள் எழுதினேன்.

எனக்கு வாக்களித்ததுபோல் இறுதிவரை நான் எழுதித் தந்த ஒரே ஒரு சொல்லைக்கூட மாற்றாமல் வெளியிட்டபொழுது பல கட்டுரைகள் அரசியல் வட்டத்தில் சலசலப்பையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்தின. நான் துணிச்சலுடன் எதையும் எழுதலாம். ஆனால் அதை வெளியிட எத்தனை ஊடகங்களுக்கு துணிச்சல் இருக்கின்றது.

என்னைப் போன்றே ஒவ்வொருவருக்கும் சொல்லத் தோன்றியதை வெளியிடும் ஊடகங்கள் வாய்க்க வேண்டும். அதேபோல் அதனை செவிமடுத்து கேட்கும் அரசும் அமைய வேண்டும். எக்காலத்துக்கும் தேவைப்படும் சமூகப்பணியை, அறப்பணியை செய்து வரும் இந்து தமிழ்திசை பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றதை என்னால் நம்பவே முடியவில்லை. உருண்டோடும் ஆண்டுகளில் எவையெல்லாமே மக்களின் நினைவுகளிலிருந்தும், பார்வையிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அனைத்துத் துறைகளிலும் தனது பதிவை ஆழப் பதிந்து முன்னேற்றப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ள இந்து தமிழ் திசையின் ஊழியனாக என்றும் என்னை உணர்கின்றேன்.

அனைத்தையும் கூரிய கண்கொண்டு பார்க்கும் தமிழ்திசை தற்போதுள்ள தன்னையும் அடிக்கடிப் பரிசோதித்து அறப் பணிகளை தொடர்ந்து செய்து இயங்க வேண்டும் என குடிமகன்களில் ஒருவனாக வாசகர்களில் ஒருவனாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்போடு
தங்கர் பச்சான்

--------------

தமிழில் எழுத வைத்த நாளிதழ்!

தனஞ்ஜெயன்

இந்து தமிழ் திசை தொடங்கி அதற்குள் பத்தாவது ஆண்டா என வியப்பாக இருக்கிறது! அதன் தரம், அதில் எழுத வேண்டும் என்கிற ஆவலைப் பெருகச் செய்தது. அப்போது, ஆங்கிலத்தில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த என்னை தமிழில் எழுத வைத்தது இந்து தமிழ் திசை. 2016இல் திரையுலகின் போக்குகள், ஆளுமைகள், படைப்பாளிகள் குறித்து பலதரப்பட்ட விஷயங்களை 52 வாரம் நடுநிலையுடன் எழுதிட முழுச் சுதந்திரம் அளித்தது. இந்து டாக்கீஸில் வெளியான எனது கட்டுரைகளுக்கு வாசகர்களிடமிருந்து வரும் எதிர்வினைகளே அவ்வளவு தரமாக இருக்கும்.

நான் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ‘வெள்ளித் திரையின் வெற்றி மந்திரங்கள்’ என்கிற தலைப்பில் இந்து தமிழ் திசை பதிப்பகமே நூலாக வெளியிட்டது. என் வீட்டுக்கு வந்தால், இந்து தமிழ் திசையில் வெளியான கட்டுரைகளின் சேகரிப்பை பெரிய பெரிய ஃபைல்களாகப் பார்க்கலாம். எடுத்தோம் படித்தோம் என்று தூக்கிப்போட்டுவிடும் பத்திரிகை அல்ல இந்து தமிழ் திசை.. படித்தபின் அதைப் பாதுகாக்க வைத்துவிடுகிறது.

- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

------------

வாசிப்பைக் கடந்த பிணைப்பு!

பாண்டிராஜ்


இப்போதுதான் தொடங்கியதுபோல் இருக்கிறது. அதற்கு பத்தாம் ஆண்டில் அடிவைக்கிறது என்றால் இந்து தமிழ் திசை இளமை குன்றாமல் இருக்கிறது என எண்ணிக்கொள்கிறேன்.

அதில் வெளிவரும் இலக்கியக் கட்டுரைகள் அதற்கு முன் எந்த நாளிதழும் செய்யாத முயற்சி. இலக்கியம் என்றில்லை அரசியல், சினிமா, ஆன்மிகம், மகளிர், சிறார், பள்ளி மாணவர்களுக்கான பகுதிகள் என எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் அதில் தனித்துவமும் தரமும் இருப்பதால் அவற்றை விரும்பி வாசிப்பேன்.

எனது ஒவ்வொரு படத்துக்கு மட்டுமல்ல, மற்ற இயக்குநர்களின் முக்கியமான படங்களுக்கும் இந்து தமிழ் திசையில் எப்படி விமர்சனம் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஆவலாகக் காத்திருந்து படிக்கிறேன்.

இந்த வாசக உறவு, இந்து தமிழ் திசையில் ‘ப்ளாஷ் பேக்’ என்கிற தொடரை நான் எழுதியபோது பெரும் பிணைப்பாக மாறியது. அந்தத் தொடர் புத்தகமாக வெளிவந்து அதன் வழியாகவும் எனக்கு எண்ணற்ற நண்பர்களை இந்து தமிழ் திசைப் பெற்று தந்ததுள்ளது. அது ஒரு பத்திரிகை மட்டுமே அல்ல; அதைக் கடந்த பிணைப்பை இந்த கணம் வரை தக்க வைத்திருக்கிறது இந்த தமிழ் திசை. அதற்கு காரணமாக இருக்கும் அதன் ஆசிரியர் கே.அசோகனுக்கும் எனது தொடரை ஒருங்கிணைத்த பத்திரிகையாளர் மோகன் மகராஜனுக்கும் இந்த இனிய தருணத்தில் நன்றி கூறுகிறேன்.

- இயக்குநர் பாண்டிராஜ்

------------

எதிர்காற்றில் ஒரு பயணம்!

சீனு ராமசாமி

அறத்துக்கு எதிரான செயல்களை சுட்டிக்காட்டுவது ஒரு வகை; அதேநேரம் அறமான செயல்களை செய்வது ஒருவகை. இவை இரண்டையும் செய்து காட்டிக்கொண்டிருக்கும் பத்திரிகை இந்து தமிழ் திசை.

சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, வேளாண்மை, உடல்நலம் ஆகியவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவம் என்னை எப்போதுமே இப்பத்திரிகையை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.

நான் கூர்ந்து அவதானித்த இன்னொரு அம்சம், அது குற்றச் செய்திகளைக் கையாளும் விதம். இன்று கைபேசித் திரைவரை குற்றச் செய்திகள் ஆக்கிரமித்துக்கொண்டு மனித மனதில் ரத்த வாடையை வீசச்செய்துகொண்டிருக்கும் வேளையில், சமூகத்துக்குத் தீங்குதரும் குற்றச் செய்திகளை அது புறந்தள்ளி வருவதைப் பார்க்கிறேன். தைரியாமாக நம் பிள்ளைகளின் கைகளில் இப்பத்திகையைக் கொடுக்கலாம்.

வியாபார நோக்கமில்லாமல் அறிவுப்பூர்வமான தளத்தில் இயங்குவது எதிர்காற்றில் மிதி வண்டி மிதிப்பதுபோல் கடினமானது. அதில் பத்தாவது ஆண்டை தொட்டு நிற்பது பெரும் சாதனை. இப்பயணம் நூறாண்டு காண வேண்டும் என விரும்புகிறேன்.

- இயக்குநர் சீனு ராமசாமி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x