

காட்சிகளால் கண்களைக் கைது செய்யும் கலை திரைப்படம். அது கண்டறியப்பட்டு, துண்டுச் சலனப் படங்களாக தவழ்ந்துகொண்டிருந்த ஆண்டுகளில் காண்பதற்கு ஓர் அதிசயம்! எந்த உணர்ச்சியும் இல்லாதத் துண்டு சலனப் படங்களை எத்தனை ஆண்டுகள்தான் பார்க்க முடியும்! அப்போதுதான் பேசாப் படமாக இருந்த சலனப் படங்களுக்குள் கதைகள் நுழைக்கப்பட்டன. கதை மாந்தர்கள் உடல்மொழி கொண்டு பேசியும் அவர்கள் பேசும் வசனங்களை ‘போட்டோ கார்டுக’ளில் எழுதி இடைசெருகலாகக் காட்டியும் கதையைப் புரிய வைத்தனர். பேசும் படமாக மழலைச் சொல் உதிர்க்கும் முன்பு, சலனக் கதைப் படமாக நடை பழகிய காலத்திலேயே அதற்கு கதை என்கிற அமுதூட்டிய தாய் தான் நாடகக் கலை!
தமிழ்த் திரையுலகம் என்றில்லை; உலகம் முழுவதுமே நாடக மேடை கண்ட கதைகளைத் தான், சலனக் கதைப் படங்களின் காலம் எடுத்தாண்டது. இந்த தாய் - பிள்ளை உறவு, பேசும் படமாக துள்ளியெழுந்து, வண்ணம் பூசிக்கொண்ட காலம் வரையிலும் தொடர்ந்தது. அதன் பலனாக ‘தாயைப் போல் பிள்ளை; நூலைப்போல் சேலை’ என்கிற பழம்பெருமையில் சிக்குண்டு கிடந்தது. அதே நேரம், பிள்ளையின் இளமை வசீகரமாக இருந்தாலும் தாயின் ஆற்றல் குறையவே இல்லை. திரைப்படம் காண டூரிங் திரையரங்குகளுக்குச் சென்ற ரசிகர் கூட்டத்தை விஞ்சும் விதமாக, நாடகக் கொட்டகைகளில் கூட்டம் நெருக்கியடித்தது.
அங்கே நடப்பது புராண நாடகமாக இருந்தாலும் சமூக நாடகமாக இருந்தாலும் கதையின் போக்கில் ஒரு குறுக்கீடாக நடிகர்கள் சுதந்திர எழுற்சிப் பாடல்களைப் பாடியபோது, அடிமைத் தளையில் சிக்குண்டிருக்கிறோம் என்பதை ரத்தம் கொதிக்க உணர்ந்தார்கள். அரிச்சந்திரா நாடகத்தில் அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாஸனையும் அடிமைகளாக வாங்கிய வீரபாகு என்கிற கதாபாத்திரம், அதன் குணாதிசயத்துக்கு முரணாக, ‘வேண்டும் விடுதலை.. வேண்டும் விடுதலை.. வெள்ளைப் பரங்கியர் எங்கள் ஆண்டையரா?’ எனப் பாடிய அதிசயத்தை தமிழ் நாடக மேடை நிகழ்த்தியது. நாடகப் பாங்கின் விதியை மீறினாலும் சுதந்திரப் போராட்டக் களத்தில் நாடகம் ஓர் ஆயுதமாக உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தது. அப்போதுதான் நாடகக் கலைஞர்கள் மீது பெருஞ்சுமையாக அழுத்திக்கொண்டிருந்த ‘கூத்தாடிகள்’ என்கிற இழிநிலை விலகத் தொடங்கியது.
பல ஐரோப்பிய நாடுகளில் நாடகக் கலை ஓர் அரங்கக் கலையாக வளர்ந்து நின்ற 15ஆம் நூற்றாண்டு தொடங்கி, தெருக்கூத்தாக நீர்த்துப்போயிருந்த தமிழ் நாடகம் மீட்சி பெறத் தொடங்கியிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமே, ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்கிற பார்வை நாடகக் கலைஞர்கள் மீது மண்டிக் கிடந்தது. அதையும் உயர்குடிச் சமுகம் அவர்களைப் புறக்கணித்து, ஒதுக்கி வைத்திருந்ததையும் தமிழ் நாடகத்தைச் சீர்திருத்த வந்த முன்னோடிகள் பெரும் சாட்சிகளாக நின்று பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்றில்லை; உலகம் முழுவதுமே அப்போது இதுதான் நிலை. உலகை அடிமைப்படுத்தி ஆண்ட இங்கிலாந்து, உலகுக்குப் பாராளுமன்ற ஆட்சி முறையின் முன்மாதிரியைக் காட்டிய இங்கிலாந்து, 1572இல் ஒரு சட்டம் இயற்றியது. ‘நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்களை கைது செய்து, சாட்டையால் அடித்து சிறையில் அடைக்கலாம்’ என்பதுதான் அந்தச் சட்டம். தரம் தாழ்ந்த மனித உணர்ச்சிகளை நாடகங்களில் சித்தரிக்கும் நாடக ஆசிரியர்களுக்கும் அதை மேடையில் நடிக்கும் நடிகர்களுக்கும்தான் இந்தத் தண்டனை என்றது.
இதுபோன்ற கடும் அடக்குமுறையிலிருந்து மீண்டெழுந்த மகா கலைஞர்கள் நாடக உலகில் உலகெங்கும் தோன்றினார்கள். அவர்கள் தான் எண்ணற்றப் படைப்புகளை நாடக உலகத்துக்குக் கொடுத்து, அதைத் திரையுலகுக்கும் அள்ளித் தந்தார்கள். இந்தக் ‘கொள்வினை கொடுப்பினை’யின் வரலாற்றில் எத்தனை சாதனைக் கலைஞர்கள்..! எத்தனை ஆச்சரியமான நிகழ்வுகள்…! எத்தனை அற்புதமான படைப்புகள்…! அத்தனையையும் ‘நாடகமே திரை’யில் வாசிக்கத் தயாராகுங்கள்.
(திரை விலகும்)
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
ஓவியக் குறிப்பு: இக்கட்டுரையில் வெளியாகியிருக்கும் ஓவியம் ரவிவர்மா வரைந்தது. தன்னுடைய மனைவி சந்திரமதியையும் மகன் லோகிதாஸனையும் வீரபாகுவிடம் அடிமையாக விற்கும் காட்சி.
நன்றி: விக்கி காமன்ஸ்
| வெள்ளையர்களை பாடல்களால் வெளுத்த விஸ்வநாத தாஸ்! எந்த புராண, இதிகாச நாடகமென்றாலும் அவற்றில் தேசபக்திப் பாடல்களை நுழைத்துவிடுவார். அப்போதுதான் நாடக மேடைக்கு மின் ஒளி விளக்குகளும் ஒலிவாங்கியும் ஒலிப்பெருக்கியும் வந்திருந்த நேரம். ஒலிப்பெருக்கியில் நடிகர்களின் குரலையும் பாடலையும் கேட்க கட்டுக்கடங்காத கூட்டம். சிவகங்கையில் நடந்த ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் முருகப்பெருமான் வேடத்தில் விஸ்வநாததாஸ் நடித்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வண்ணம், தேசத்தைக் கொள்ளையடிக்கும் வெள்ளை ஆட்சியாளர்களை விமர்சிக்கும் விதமாக, ‘கொக்கு பறக்குதடி பாப்பா... வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா.. கொக்கென்றால் கொக்குகொக்கு... அது வர்த்தகம் செய்ய வந்த கொக்கு... நமது வாழ்க்கையைக் கெடுக்கவந்த கொக்கு... அக்கரைச் சீமைவிட்டு வந்தே... இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா!’ என்று பாடியவுடன் மக்கள் பலத்த ஆரவாரம் செய்தனர். ‘வள்ளித் திருமணம்’ என்றில்லை, எந்த புராண இதிகாச நாடகமாக இருந்தாலும் ‘வெள்ளைக் கொக்கு’ பாடலை விஸ்வநாததாஸ் பாட, ஊருக்கு ஊர் அவர் பங்கேற்கும் நாடகங்களில் கட்டுக்கடங்காத கூட்டம். மக்கள் இவரிடம் தேசப் பக்திப் பாடல்களையும் கதராடைப் பாடல்களையும் பாடும்படிக் கேட்கத் தொடங்கினர். இவருக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட திரையுலகினர், மக்களை திரைக்கு ஈர்க்கும் உத்திகளில் ஒன்றாகவும் தேசபக்திப் பாடல்களை படங்களில் வைக்கத் தொடங்கினார்கள். |