

கௌதம் மேனன் - சிலம்பரசன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி எப்போதும் எதிர்பார்ப்பை உருவாக்குவது. ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் இந்தக் கூட்டணி ‘ரிப்பீட்’ அடித்திருக்கிறது.
இதுவரை ஹீரோயிசக் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கும் சிம்பு, நவீன இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் ஓர் உண்மைக் கதைக்கு முதல்முறையாகத் தன்னைக் கதாபாத்திரமாக ஒப்புக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில், 19 வயது பையனுக்கான உடல் தோற்றத்தைக் கொண்டு வந்ததில் தொடங்கி, பொதுவெளியில் சிம்புவின் பொறுப்பான பேச்சுகள் வரை, இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? அவரிடமே கேட்டோம். சிம்பு மனம் திறந்து பகிர்ந்து கொண்டதிலிருந்து ஒரு பகுதி:
“கௌதம் மேனன் - சிம்பு என்றாலே ஒரு ‘கிளாஸ் லவ்’ இருக்கும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். அதற்கு மதிப்புக்கொடுத்து ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்கிற காதல் கதையை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், கரோனாவுக்குப் பிறகு சினிமா ரசனை என்பது முற்றாக மாறிப்போய்விட்டது.
வித்தியாசமான ‘கண்டெண்ட்’களைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறார்கள். இன்றைய ரசனை ‘பொலிட்டிகல் கரெக்ட்னெ’ஸை எதிர்பார்க்கிறது. அதை மனதில் வைத்துத்தான் ‘மாநாடு’ மாதிரியான ஒரு புதிய உள்ளடக்கத்தைத் தமிழில் முயற்சித்தோம். அந்தப் படம் புரியவில்லை என்று ரசிகர்கள் சொல்லவில்லை. அந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிதான் ‘வெந்து தணிந்தது காடு’ நோக்கி என்னை நம்பிக்கையுடன் நகர்த்தியிருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை எடுத்துக்கொண்டு, யாரை வைத்து அந்தக் கதையை அவர் எழுதினாரோ அந்த மனிதரை நேரில் சந்தித்து, அவரிடம் நிறையக் கேட்டறிந்து கௌதம் மேனன் சார் திரைக்கதை எழுதினார். அதன் பிறகே அதில் நான் நடிப்பது சரியாக இருக்கும் என்று என்னைத் தேர்வுசெய்தார்.
பிறகு இந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று ஜெயமோகனிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, ‘சிம்பு இந்தப் படத்துக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். ஜெயமோகன் சார் என்னை வேண்டாம் என மறுக்க என்ன காரணம் சொன்னார் என்று கேட்டேன். ‘இதுவொரு ரியல் லைஃப் கேரக்டர்.
இதில் சிம்பு மாதிரி ஒரு ஸ்டார் நடித்தால், அதில் சிம்புவைத்தான் பார்ப்பார்களே தவிர, 19 வயது கதாபாத்திரத்தைப் பார்க்க மாட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். நான் 19 வயதுப் பையனாக வந்து நிற்கிறேன். போட்டோ ஷூட் செய்து அவரிடம் காட்டுங்கள்.
அதைப் பார்த்துவிட்டு அவர் ஒப்புக்கொண்டால் மட்டும் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். எனது புதிய தோற்றத்தைப் பார்த்துவிட்டு வியந்த ஜெயமோகன், ‘பல நாள் பட்டினி கிடந்த பையன்போல் ஆகிவிட்டீர்கள் சிலம்பரசன்!’ என்றார். ‘ஆமாம் சார்.. இதுபோன்ற கதாபாத்திரத்துக்காக பல நாள் பட்டினி கிடந்தது உண்மைதான்’ என்று அவரிடம் சொன்னேன்.
இந்தப் படம் வெற்றியடையும்போது என்னைப் போன்ற மாஸ் நடிகர்கள் ஹீரோயிசத்தைக் கடைசி இடத்துக்குத் தள்ளிவிட்டு, புதிய முயற்சிகளில் நடிக்க முன்வருவார்கள். ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளிவந்தபோது சசிகுமார் சாரும் ஜெய்யும் புதுமுகங்கள். இந்த ‘ட்ரெண்’டும் ரசனையும் இப்போதுபோல் அப்போது அறிமுகமாகியிருந்தால் அந்தப் படத்தில் அஜித் சாரும் நானும்கூட நடித்திருக்கலாம்.
நவீன இலக்கியம் வாசிக்கிறீர்களா என்று கேட்டீர்கள். இப்போதைக்கு வள்ளலாரை ஆழ்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரது பேரன்பும் கருணையும் என்னை வேறொருவனாக வார்த்திருக்கிறது. எங்கெல்லாமோ தேடியலைந்து இறுதியில் நம் வள்ளலாரிடம் இந்த உலகத்துக்கான ஆன்மிகம் இருப்பதைக் கண்டுகொண்டேன்”.