

நவம்பர் 11: லியனார்டோ டிகாப்ரியோ பிறந்த தினம்
கட்டுரைக்கான தலைப்பைக் கண்டு நீங்கள் மிரளத் தேவையில்லை. மலர்ப் படுக்கையாய் இருந்த பூமியை உலைக் கலனாக மாற்றிய பெருமை மனித இனமாகிய நமக்கே உண்டு. மத, இனத் தீவிரவாதம், எண்ணெய் வளத்துக்கான போர், தண்ணீருக்கான போர், வேலையின்மை, வறுமை என எதுவொன்றையும் விட இன்று உலகம் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினை ‘பருவநிலை மாற்றம்’(Climate change). வரலாறு காணாத வறட்சி, ஐந்து ஆண்டுகளில் பொழிய வேண்டிய மழை ஐந்து மணிநேரங்களில் பேய் மழையாய்க் கொட்டிப் பேரழிவைக் கொண்டுவருவது, தீவு தேசங்களைச் சுழற்றிப்போடும் சுனாமிகள், எப்போது வேண்டுமானாலும் தோன்றும் புயல்கள் எனப் பருவநிலை மாற்றத்தின் பக்கவிளைவுகளைத் தனி மனிதர்களாய் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம்மைப் போன்ற ஒரு திரைப்பட நடிகனால் இதற்காக என்ன செய்துவிட முடியும் என்று காதலிகளோடு திரிந்துகொண்டிருக்கவில்லை இவர். சுமார் 2 ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் (இந்தியா உட்பட) தனது படக்குழுவுடன் பறந்து சென்று, பருவநிலை மாற்றத்தால் பூமி எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை ‘பிஃபோர் த ஃப்ளட்’ என்ற விலைமதிக்க முடியாத ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஆஸ்கர் நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ.
முழுமையான ஆவணம்
தனது சொந்தப் பணத்தில் இந்த ஆவணப் படத்தைத் தயாரித்து, கடந்த அக்டோபர் 30-ம் தேதி உலக சமுதாயத்தின் முன்னால் வெளியிட்டிருக்கிறார். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கான சாட்சியங்களை நேரடிக் காட்சிகளாய் கண் முன் நிறுத்துகிறது இந்த ஆவணப் படம். இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, மாணவர் களாலும் இயற்கை ஆர்வலர்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டுவரும் இதை, டிகாப்ரியோ ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக எடுக்கவில்லை. கார்ப்பரேட்டுகளின் காலடியில் விழுந்து கிடக்கும் உலக அரசியல்வாதிகளின் மனசாட்சியை நோக்கி சவுக்கைச் சுழற்றியிருக்கிறார். வளர்ந்து கொழித்துக் கிடக்கும் பணக்கார நாடுகளின் கோரமான தொழில் முகத்தை விலக்கிக் காட்டியிருக்கிறார்.
ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தில் பருவநிலை மாற்றம் பற்றிய தெளிவான அறிமுகத்துடன், அதன் பின்னணிக் காரணமாக இருக்கும் புவிவெப்பமாதல் அதிகரிப்புக்கு நேரடி சாட்சிகளாக விரியும் காட்சிகள், அதைத் தீவிரமாகக் கண்காணித்துவரும் பல்வேறு நாடுகளின் அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பசுமைப் போராளிகள், பாதிக்கப்பட்டவர்கள், உலகத் தலைவர்கள் ஆகியோரின் பேட்டிகள் இப்படத்தில் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக டிகாப்ரியோ மேற்கொண்ட பயணங்கள் நம்மை ஆர்க்டிக்கிலிருந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நழுவலான பேட்டிவரை இழுத்துச் செல்கின்றன. இன்னுமொரு ஊழிப் பெருவெள்ளத்தை இந்த பூமி சந்திக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு முன் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உலகத் தலைவர்களும் உலக மக்களும் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த ஆவணப் படம் பொட்டில் அறைந்து சொல்லிக் காட்சிகள் வழியே நம்மை உறையச் செய்துவிடுகிறது. இயற்கையின் மீதும் பூமியின் மீதும் இத்தனை காதலை வெளிப்படுத்தியிருக்கும் டிகாப்ரியோவை நாம் அறிந்துவைத்திருப்பது காதல் மன்னன் ‘ஜேக் டாஸன்’ ஆகத்தான்.
காதல் மன்னன்
‘டைட்டானிக்’ படத்துக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு வெளியே லியனார்டோ டிகாப்ரியோவை யாரும் அறிந்திருக்க வில்லை. வாலி ஹாலிவுட்டில் பாடலாசிரியராக இருந்திருந்தால் ‘நெற்றியில் விழும் முடியழகா... நீலக்கண் விழியழகா’ என்றெல்லாம் லியனார்டோ டிகாப்ரியோவின் அழகை வருணித்துப் பாடியிருப்பார். ஹாலிவுட்டில் பிறந்து, வளர்ந்து 14 வயது முதல் நடிக்கத் தொடங்கிய டிகாப்ரியோ டைட்டானிக் படத்துக்கு முன்பு, வில்லியம் ஷெக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவி உருவான ‘ரோமியோ ப்ளஸ் ஜூலியட்’ படத்திலேயே தன்னை ஒரு காதல் மன்னன் என்று காட்டினார். ஆனால், துணிவும் துடுக்குத்தனமும் கலந்த இளம் ஓவியனாக எதிர்பாராமல் ‘டைட்டானிக்’ கப்பலில் பயணித்து, ஒரு மகத்தான காதல் காவியத்தைத் தன் மரணத்தால் எழுதும் ஏழை இளைஞனாக உலகப் பார்வையாளர்களிடம் சென்றுசேர்ந்த ஜாக் டாஸன் கதாபாத்திரம்தான் அவரை ஹாலிவுட்டின் வசூல் நாயகனாகவும் மாற்றியது.
உலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கோர்ஸஸியின் இயக்கத்தில் ஐந்து முறை நடித்து அசத்தியவர். உலக ரசிகர்களுக்கு மசாலா பிரியாணி கிண்டும் ஹாலிவுட்டில் இயங்கினாலும் தரமான கற்பனைகளுக்கும் மறைக்கப்பட்ட வரலாறுகளுக்கும் திரைவடிவம் தரும் கிறிஸ்டோபர் நோலன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், க்வென்டின் டரான்டினோ, கிளின்ட் ஈஸ்ட்வுட் என உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களின் தேர்வாக இருப்பவர் டிகாப்பிரியோ. தன் அழகால் தேவதைகளை மயக்கிவிடும் காதல் மன்னன் கதாபாத்திரங்களின் வழியே ஹாலிவுட்டில் புகழ்பெற்றாலும் அவர் தன் அழகைக் கடந்து நடிப்பில் உச்சம் தொட்டது தன் நடிப்பின் அனைத்து சாத்தியங்களையும் அள்ளிக்கொட்டிய விதவிதமாக கதாபாத்திரங்களின் வழியேதான்.
ஆஸ்கர் மேடையை ஊடகமாக்கியவர்
அப்படிப்பட்டவருக்கு 17 வயதில் சிறந்த துணை நடிகருக்காகக் கிடைத்திருக்க வேண்டிய ஆஸ்கர் விருது, ஐந்து முறை சிறந்த நடிகருக்காகப் பரிந்துரைக்கப்பட்டபோதும் பெரும் போராட்டத்துக்குப் பின் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான ‘தி ரெவனன்ட்’ படத்துக்காக அவருக்குக் கிடைத்தது. கரடியால் தாக்கப்பட்டு, பனி உறைந்த அட்லாண்டிக் வனத்தில் தன்னந்தனியாக உயிருக்காகப் போராடி, தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் போராடும் 19-ம் நூற்றாண்டு வேடனாக ஹக் கிளாஸ் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியதற்காக விருது அறிவிக்கப்பட்டது. அப்போது மொத்த ஆஸ்கர் அரங்கும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது, அதற்கு முன் நடந்திராத நிகழ்வு. அந்த மேடையை வெறும் சம்பிரதாய நன்றி சொல்லும் மேடையாக ஆக்கிவிடாமல் அதன் முக்கியத்துவம் உணர்ந்து, ‘பருவநிலை மாற்றத்தை’ கவனப்படுத்தும் ஊடகமாக மாற்றிக் காட்டி புவிவெப்பமாதலின் விழிப்புணர்வில் மேலும் சூடேற்றினார் டிகாப்ரியோ.
கடந்த பிப்ரவரி மாதம் அந்த மேடையில் நின்ற டிகாப்ரியோ ஆஸ்கர் ட்ராபியைத் தன் தலைக்குமேல் தூக்கிக் காட்டி ஆரவாரிக்காமல், இந்த விருதை விட மேலான ஒன்றில் என் கவனம் குவிந்திருக்கிறது என்பதைக் காட்டும்விதமாகப் பேசினார்… “ எங்களின் 'ரெவனன்ட்' படமே இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு பற்றியதுதான். நமது பூமியின் வெப்பநிலை கடந்த 2015-ல்தான் மிக அதிகம். பூமியின் பருவநிலை மாற்றம் என்பது உண்மையானது. அது நம் கண்முன்னால் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல; உலகின் அனைத்து உயிரினங்களும் தற்போது எதிர்கொண்டுவரும் மிகப் பெரிய அச்சுறுத்தல் இதுவே. இதைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. சுற்றுச்சூழலை நாசம் செய்பவர்களுக்கு எதிராக மவுனம் காத்துவரும் தலைவர்களை ஆதரிக்காதீர்கள். நமக்காக, ஆதிக்குடிகளுக்காகப் பேசும் தலைவர்களை, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்காகப் பேசும் தலைவர்களை நாம் ஆதரிப்போம்” என்று பேசியபோது ஆஸ்கர் அரங்கம் அதிர்ந்தது.
ஆஸ்கர் உரையோடு அடங்கிவிடாத டிகாப்ரியோ தனது அற நிறுவனத்தின் மூலம் காடுகள், உயிரினங்கள், துருவப் பிரதேசங்களைக் காக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் மில்லியன் டாலர்களில் நன்கொடை அளிக்கவும் தவறவில்லை. நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் தனது ‘பிஃபோர் த ஃப்ளட்’ ஆவணப்படத்தை வெளியிட்டு “நாம் எதிர்கொண்டுவரும் சமகால அச்சுறுத்தல்களில் முதன்மையானது புவிவெப்பமாதல். நவம்பர் எட்டாம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், இந்தப் பிரச்சினைக்குக் காதுகொடுக்கும் தலைவர் யாரென்பதை மனதில் வைத்து நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால்தான், இப்படத்தை இப்போது வெளியிட் டுள்ளேன்” என்று கூறி, அரசியலைக் கண்டு தொடை நடுங்கும் நட்சத்திரம் தானல்ல என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார் டிகாப்ரியோ.
பள்ளிப் பருவம் முதலே இயற்கை மீதான தனது நேசத்தை வெளிப்படுத்திவந்திருக்கும் டிகாப்ரியோ, ஐ.நா.வின் காலநிலை மற்றும் அமைதிக்கான தூதராகவும் இருந்துவருகிறார்.
நமது தேசத்தின் வரைபடத்தில் டிகாப்ரியோ போன்ற நடிகர்கள் அடுத்த தலைமுறையிலாவது தோன்றுவார்களா?