Published : 01 Sep 2022 07:09 PM
Last Updated : 01 Sep 2022 07:09 PM

இயக்குநர் பாலா நான் நடிப்பதை எதிர்த்தார்! | ‘டைரி’ ரஞ்சனா பேட்டி!

அருள்நிதி நடிப்பில்,அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'டைரி'. அதில், நள்ளிரவுப் பேருந்து ஒன்றில் பயணிக்கும் பெண்ணாக நடித்து, கவனிக்க வைத்திருக்கிறார் ரஞ்சனா. இயக்குநர் பாலாவின் அண்ணன் மகள். ஆனால், பாலா இயக்கிய எந்தப் படத்திலும் நடித்தவரில்லை. “பாலுமகேந்திரா சாரிடம் ‘வீடு’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த நாட்களிலிருந்து சித்தப்பாவை (பாலா) அறிவேன். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்பியபோது அது நமக்குச் சரிபட்டு வராது” என்று தடுத்தார். இப்போதுவரை நான் சினிமாவில் நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை” என்று உரையாடலைத் தொடங்கினார் ரஞ்சனா.

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..

எனது முழுப் பெயர் ரஞ்சனா நாச்சியார்.பாஸ்கர சேதுபதியின் பரம்பரையில் வந்த குடும்பம் நாங்கள். எம்.எஸ்.சி ஐடி, எம்டெக் ஐடி, சட்டத்துறையில் எல்.எல்.பி (ஹானர்ஸ்)படித்தவள் நான். திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்குச் சிறுவயதில் இருந்து கலையார்வம் உண்டு. முடியாது என்பதே என்னிடம் கிடையாது.எனக்கு முதன் முதலில் சன் டிவியில் 'குலதெய்வம்' என்கிற தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடிப்பை ஒரு கை பார்த்துவிடுவது என்று அதில்தான் முதன் முதலாக நடித்தேன்.சினிமாவில் எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மிஷ்கின் சார். 'துப்பறிவாளன்' படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க வைத்தார்.

‘டைரி’ படத்தில் ரஞ்சனா

சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பது நிறைவைத் தருகிறதா?

‘துப்பறிவாளன்’ படத்தின் கதையின்படி என்னைப் புலன் விசாரணை செய்ய பிரசன்னா வருவார். நான் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். மிஷ்கின் சாரிடம் இந்த ஒரே ஒரு காட்சியில் நடிப்பதால் என்னை யார் நினைவில் வைத்துகொள்ளப் போகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இந்தச் சினிமாவில் எத்தனையோ பேர் ஒரே ஒரு காட்சியில் நடித்து விட முடியாதா என்று பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஒரே ஒரு காட்சி தான் என்றாலும் அடையாளம் கண்டு கொள்கிற மாதிரி வசனத்துடன், குளோசப் ஷாட்டும் இடம்பெறகிறது. இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மெல்ல மெல்ல வளர்வாய்.யோசிக்காதே!’என்றார். அந்த வார்தைகள் என்னைத் தட்டிக்கொடுத்தன. யோசிக்காமல் நடித்தேன். அதைப் பார்த்துவிட்டுத் தான் மித்ரன் இயக்கிய'இரும்புத் திரை'பட வாய்ப்பு வந்தது. நான் ‘இரும்புத்திரை’யில் சிறு காட்சியில் வந்திருந்தாலும் படம் பெரிய வெற்றி. அந்த செண்டிமெண்டில் மீண்டும் எனக்கு 'ஹீரோ'படத்திலும் மித்ரன் சார் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு வரிசையாக ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’, ‘தேவராட்டம்’, ‘ராஜ வம்சம்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ , ‘எதற்கும் துணிந்தவன்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘நட்பே துணை’, ‘அண்ணாத்த’ என்று 5 வருடங்களில் 15 படங்களில் நடித்து விட்டேன்.

'அண்ணாத்த' படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி அமைந்தது?

'அண்ணாத்த 'படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்தான்.பெரியதாக வசனம் பேசி எல்லாம் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் அந்தப் படத்தில் ரஜினிசார் உடன் திரையில் தோன்றியதே பெருமையாக இருந்தது.அவர் கூடவே நான் இருப்பது போன்ற காட்சிகள் நிறைய உண்டு.அதுவே எனக்கு மகிழ்ச்சியளித்தது. மருதாணி பாடல் காட்சியில் ஊஞ்சலில் அவர் அமர்ந்திருப்பார் ஒரு பக்கம் சூரியும் இன்னொரு பக்கம் நானும் இருப்போம்.பாடல் காட்சியில் நான் நிறைய இடங்களில் வருவேன்.போஸ்டர்களில் கூட அவர் அருகில் நான் இருப்பேன்.அதைப் பற்றிப் பலரும் கூறிய போது, சாதித்துவிட்டதுபோல் மகிச்சியடைந்தேன்.படத்தில் நடித்தபோது அவர் அருகில்தான் நான் இருந்தேன் என்றாலும் நான் எதுவும் பேசாமல் அடக்கமாக இருந்தேன்.நான் எதுவும் பேசாமல் இருந்ததும் என்னைப் பார்த்து ‘நீங்க தெலுங்கா?’ என்று கேட்டார்.‘இல்லை சார் நான் பச்சைத் தமிழச்சி. சொந்த ஊர் ராமநாதபுரம்’என்றேன்.ஆச்சரியப்பட்டார்! மற்றபடி நான் அவருடன் பேசத் தயங்கி அடக்கமாக இருந்து விட்டேன்.

'டைரி 'படத்தில் நடித்த அனுபவம் இருந்தது?

இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், ‘டைரி’ படத்தில் ஒரு ஆண் பிள்ளைக்கு அம்மா என்று சொல்லிவிட்டு, 25 மதிக்கத்தக்க இளைஞனை அழைத்துவந்து இவர்தான் உங்களுக்கு மகனாக நடிக்கிறார் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. படம் பார்த்த பிறகுதான் அது ஏன் என்பது புரிந்தது. திரையில் என் கேரக்டரை கண் கலங்கியபடி ரசிகர்கள் பார்ப்பதை நேரில் பார்த்து நானும் கலங்கினேன்.அந்த வகையில் மகிழ்ச்சி.

தற்போது நடித்துவரும் படங்கள் பற்றி கூறுங்கள்..

'மாயன்' என்கிற பெரிய பட்ஜெட் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறேன். தம்பி ராமையாவின் மகன் நடிப்பில் 'லிவிங் டுகெதர் ' என்ற திகில் படமும் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. அதிலும் எனக்கு நல்ல கதாபாத்திரம்.

பாஸ்கர சேதுபதி பரம்பரையில் வந்துள்ளதாகக் கூறும் நீங்கள் 'பொன்னியின் செல்வன் 'படத்துக்கான ஆடிஷனில் கலந்துகொள்ளவில்லையா?

நிறையவே முயற்சி செய்தேன். அதற்காகவே சிலம்பம், சுருள்வாள் வீச்சு, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுத் தயாரான பிறகு தான் அந்தப் படத்தில் வாய்ப்பு கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. நான் கற்றுக் கொண்டது எதுவும் வீண் போகாது,எதிர்காலத்தில் உதவும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் பாலாவிடம் அவரது படத்தில் நடிக்க நீங்கள் வாய்ப்பு கேட்கவில்லையா?

இல்லை. இயக்குநர் பாலா மட்டுமல்ல; ஆர்.கே.சுரேஷ் எனது உறவினர்தான்.இன்னும் சில உறவினர்கள் திரையுலகில் தயாரிப்பில் நிதி உதவி செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் நான் அவர்களிடம் எந்த உதவியும் கேட்டத்தில்லை.பாலா உதவி இயக்குநராக இருந்தபோது 'வீடு' படத்தில் ஒரு காட்சியில் போஸ்ட் மேன் ஆக நடித்திருப்பார்.அவர் வரும் காட்சிகள் சில வினாடிகள் தான் இருக்கும். தான் நடித்திருப்பதாக எங்களை அழைத்துச் சென்று பெருமையாக திரையரங்கில் அந்தப் படத்தைக் காட்டினார்.அப்படி அவர் சினிமாவில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். ஆனால், நான் சினிமாவில் நடிப்பதை ஏற்கவில்லை, எதிர்த்தார்.அதைக் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை; சரிப்பட்டு வராது என்று கூறிவிட்டார்.உறவினர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் அடையாளம் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

திரையுலகில் பிரச்சினைகளைச் சந்தித்தது உண்டா ?

பிரச்சினைகள் எங்குமே இருப்பவைதான் .அதிலும் ஒரு பெண் என்று வந்து கொண்டால் அவளுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
பள்ளியில் படிக்கும் போது, கல்லூரியில் படிக்கும் போது, குடும்பத்தில், திருமணம் ஆன பிறகு, தொழிலில் ஈடுபடும் போது இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதை எப்படிச் சந்தித்து மேலே வருவது என்பது தான் பெண்களுக்கு உள்ள சவால்.அதை எதிர்கொண்டு சமாளித்து தான் மேலே வருகிறார்கள். நானும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கடந்து வந்து கொண்டிருக்கிறேன்.பெண்கள் பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவதில் பயனில்லை. ஒவ்வொன்றையும் எதிர்கொண்டு சமாளித்து மேலே வர வேண்டும்.அப்படித்தான் இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது சவால்களை,தடைகளை, இடையூறுகளைச் சந்தித்து உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x