

புத்தாடை, கங்கா ஸ்நானம், இனிப்பு, பட்டாசு இவற்றோடு ஒரு புதுப் படத்தைத் திரையரங்கு சென்று பார்த்தால் மட்டுமே தீபாவளி கொண்டாட்டம் நிறைவடையும் என்று நினைப்பவர்கள் தமிழர்கள். திரைப்படத்தின் மீதான இந்தக் காதல் சமீப ஆண்டுகளாக மாறியிருக்கிறது. பண்டிகை நாட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. தியேட்டர் கட்டணமே இதற்கு முதல் காரணம் என்று கூறப்பட்டுவருகிறது.
ஆனால், திரையரங்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டி அரசிடம் வைத்த கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும், கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அவர்களது மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று அதை மறுபரிசீலனை செய்யுமாறும், அரசு பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்வதாகவும் அறிவித்திருக்கிறது.
திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா என்று பல தரப்பினரிடமும் கேட்டபோது கொதித்துப்போனார்கள்.
உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே சினிமா
“மாநகர மால் மற்றும் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் என்றாலும் சாதாரண தியேட்டர் என்றாலும் அதில் ஏ/சி இருந்துவிட்டால் ரூ. 120 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட சின்னக் குடும்பம் தியேட்டருக்கு வரவேண்டும் என்றால் குறைந்தது 500 ரூபாய் வேண்டும். இதன் காரணமாகத்தான் படம் தொலைக்காட்சியில் வந்தால் பார்த்துக்கொள்வோம், இல்லாவிட்டால் இண்டர்நெட் பிரிண்ட் வரட்டும் என்று காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள் எளிய நடுத்தரவர்க்க மக்கள். இந்த விலையே அவர்களுக்கு மலைப்பாக இருக்கும்போது இரண்டு மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் நிலை வந்தால், அதன்பிறகு திரையரங்கில் சினிமா பார்ப்பது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிற பொழுதுபோக்காக மாறிவிடும்” என்கிறார் பத்திரிகையாளர் தமிழன்பன்.
ஆனால், பெரிய கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் மூன்று நாட்களுக்கு முந்நூறு முதல் ஐநூறு ரூபாய்வரை கொடுத்து ரசிகர்கள் படம் பார்க்கத் தயாராக இருக்கும்போது, ஏன் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கேட்கிறார் பெயர் கூற விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர். “தங்கள் அபிமான நாயகன் நடித்த படத்தை உடனே பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கும் அவரது ரசிகர்களின் உணர்ச்சிகரமான ஆர்வத்தை, உடனடியாக பணமாக்கிவிட வேண்டும் என்ற தவறான கலாசாரம் உருவானதே திரையரங்கிலிருந்துதான்.
பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போதும் மால் தியேட்டர்களும் மல்டிபிளெக்ஸ்களும் 120 ரூபாய்க்கு மேல் வசூலிப்பதில்லை. ஆனால், எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராத 70% திரையரங்குகளை வணிகவரித் துறையால்கூடக் கண்காணிக்க முடிவதில்லை. என்னைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கும் படத்தை நேரடியாக ஒப்பந்த முறையில் வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கும் சரியான வசூல் கணக்கு காட்டப்படுவதே இல்லை” என்கிறார் பிரபல விநியோகஸ்தர்.
திரையரங்கம் அல்ல, உணவகம்
வாரம் ஒரு படமாவது திரையரங்கில் பார்த்துவிடுவதாகக் கூறும் ஐடி ஊழியர் பாலாஜி கண்ணனின் கருத்து மால் திரையரங்குகளுக்கு எதிராக இருக்கிறது. “சென்னை வடபழனியில் உள்ள ஒரு மால் திரையரங்குக்கு சமீபத்தில் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நான்கு பேருக்கு 480 ரூபாயுடன் டிக்கெட் கட்டணம் முடிந்துவிட்டது. காருக்கு நான்கு மணி நேரத்துக்கு 160 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்தினேன். திரையரங்குக்குள் சென்று அமர்ந்த பிறகு, இன்ப அதிர்ச்சியாக ஒவ்வொரு சீட்டுக்கும் 250 மில்லி தண்ணீர் பாட்டில் இலவச இணைப்பாக வைத்திருந்தார்கள்.
அதற்குப் பிறகு வந்ததுதான் பெரிய அதிர்ச்சி. ரெஸ்டாரண்ட் பேரர்போல உடையணிந்திருந்த ஒரு இளைஞர் வந்து என்னிடம் மெனு கார்டைக் கொடுத்து என்னென்ன வேண்டும் என்று ஆர்டர் எடுக்க ஆரம்பித்தார். மனைவி குழந்தைகள், மாமியார் என எல்லோரும் 1,200 ரூபாய்க்கு ஆர்டர் செய்துவிட்டார்கள். நாம் வந்திருப்பது திரையரங்கா இல்லை ஹோட்டலா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஆர்டர் பெறுவதையும், படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே உணவை அவர்கள் விநியோகிப்பதும் என்று சினிமா பார்க்கிற அனுபத்தைக் குலைத்துவிட்டது. வீட்டிலிருந்தும் வெளியிலிருந்தும் தின்பண்டங்களை எடுத்துவந்தால் தியேட்டர் உள்ளே அனுமதிக்க அரசாங்கம் ஆணையிட வேண்டும்” என்கிறார் பாலாஜி.
அடிப்படை வசதிகள் எங்கே?
சென்னைக்கு வெளியே சினிமா பார்ப்பவர்களில் 40% பேர் எளிய மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினசரி ரூ. 200 முதல் ரூ. 300-க்குள் வருமானம் ஈட்டும் உதிரித் தொழிலாளர்கள். இவர்களுக்கு 30 ரூபாய் 50 ரூபாய் என்பதே அதிகக் கட்டணம். விலைவாசி உயரும்போதெல்லாம் இவர்களது கூலியோ வருமானமோ உயர்வதில்லை. இவர்களைப் போன்ற எளிய மக்களுக்காக முன்பெல்லாம் திரையரங்குகளில் குடிக்கத் தண்ணீர் இருக்கும். இன்று குடிநீர் வைக்கப்படுவதில்லை. கழிவறைகள், இருக்கைகள் பராமரிக்கப்படுவதில்லை. ஏசிக்கான கட்டணத்தை வாங்கினாலும் சரியாக ஏசி போடுவதில்லை. இவ்வளவு சிக்கல்களை வைத்துக்கொண்டு, ‘மின் கட்டணமும், திரையரங்க ஊழியர்களின் பஞ்சப்படியும் உயர்ந்துவிட்டது’ என்ற காரணத்தைக் கூறி டிக்கெட் கட்டணத்தை உயர்த்த நினைப்பது சரியல்ல” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு.
விரைந்து செயல்பட்ட அரசு
தமிழ்நாடு சினிமா தியேட்டர் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, டிக்கெட் கட்டணம் வசூல் செய்வதில் உண்மையாக நடந்துகொள்ளாத திரையரங்குகள் மீது விசாரணை நடத்த அரசின் வணிக வரித்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் பொதுநல வழக்கு மூலம் நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், “வணிக வரித்துறை தனது பணியை முறையாகச் செய்யவில்லை” என்று கடுமையாகச் சுட்டிக்காட்டியதுடன், “கூடுதல் கட்டண வசூலைத் தடுக்கக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த உத்தரவுக்குப் பிறகு திரையரங்குகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல் உதவி ஆணையாளர், வணிக வரித்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இனி அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளைப் பற்றி 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என இந்தத் தனிப்படை தெரிவித்திருக்கிறது.
திரையுலகும் திருந்த வேண்டும்
திருட்டு விசிடியை ஒழிப்பதில் திரையுலகம் காட்டும் ஆர்வத்தை அதிகக் கட்டணம் வசூலிப்பதை ஒழிப்பதிலும் காட்டவேண்டும். ‘எனது படத்துக்கு பிளாட் ரேட்டில் டிக்கெட் விற்காதீர்கள்’ என்று இதுவரை எந்தப் பெரிய நடிகரும் வாயைத் திறந்து பேசியதே கிடையாது. தயாரிப்பாளர்களும் அப்படித்தான். மக்கள் எப்படியும் போகட்டும்
சினிமாத் துறை வாழ்ந்தால் போதும் என்ற மனப்பான்மை திரையுலகிலிருது ஒழியும்போதுதான், திரையரங்குகளை நாம் ஒழுங்குபடுத்தமுடியும்” என்று திருச்சியைச் சேர்ந்த சினிமா ரசிகர் விவேக வீரன் கூறுவதும் கவனிக்க வேண்டிய கருத்தே.