மறக்கமுடியாத மைல் கற்கள்

மறக்கமுடியாத மைல் கற்கள்
Updated on
4 min read

இயக்குநரின் மீடியம்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டக் கதாநாயகர்களைப் போற்றும் ஊடகமாக மாறிப்போயிருந்த தமிழ் சினிமாவை, ‘இயக்குநர்களின் மீடிய’மாக மாற்ற முயன்றவர் சி.வி.ஸ்ரீதர். இயக்குநரின் படைப்பாளுமையை வியந்து அனுபவிப்பதற்காக ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை இவரது படங்கள் உருவாக்கின.

இவரது முக்கோணக் காதல் கதைகள், உறவு சார்ந்த பண்பாட்டுப் பழமைகளைக் கொண்டிருந்தாலும் ஆழமான திரைக்கதையமைப்பு, நம்பகமான கதாபாத்திர எழுத்து ஆகிய அம்சங்கள், பார்வையாளர்களை உணர்ச்சிப் பிரவாகத்தில் ஆழ்த்தின.

கையாளும் கதைக்கு வலிமை கூட்டப் புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய ’வெண்ணிற ஆடை’யில் அறிமுகமான ஜெயலலிதா, பின்னாளில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆனார்.

குடும்ப நாடகங்களின் காலம்!

குடும்பக் கதைகளைத் தொடர்ந்து இயக்கி வெற்றிப் படங்களைக் கொடுத்துவந்த பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்கள் அறுபதுகள் தொடங்கி, எழுபதுகள் வரை இரு பத்தாண்டுகளை குடும்ப நாடகங்களின் காலமாக மாற்றியிருந்தார்கள்.

இருவருமே வசூல்ரீதியாகச் சந்தை மதிப்பு கொண்டிருந்த உச்ச நட்சத்திரங்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கி, வெற்றிகளைக் கொடுத்தனர். குடும்ப உறவுகளைச் சுற்றிப் பின்னப்பட்ட, உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க தருணங்களை மிகை நாடகத் தருணங்களாக சித்தரித்தார்கள்.

கதாபாத்திரங்களின் உணர்ச்சி மிகையைக் கூட்ட, எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையையும் கண்ணதாசனின் பாடல்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள். பீம்சிங்கின் மகன்களில் ஒருவரான லெனின், தமிழ்த் திரையுலகின் சிறந்த படத் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் பின்னர் குறிப்பிடத்தகுந்த இயக்குநராகவும் ஆனார்.

நடுத்தர வர்க்கத்தின் குரல்!

எழுபதுகளில் சென்னையில், ‘சர்வர் சுந்தரம்’, ‘நீர்க்குமிழி’, ‘மெழுகுவர்த்தி’, எதிர்நீச்சல்’, ‘நவக்கிரகம்’, ‘நாணல்’ உள்ளிட்ட வெற்றிகரமான சபா நாடகங்களை எழுதி, இயக்கிக்கொண்டிருந்த கே.பாலசந்தரின் திரையுலக நுழைவு, நடுத்தர வர்க்க மக்களின் சமகாலப் பிரச்சினைகளை தமிழ் சினிமாவில் பிரதிபலித்தது.

நடுத்தர வர்க்க மக்களின் நம்பிக்கை, விழுமியங்களை அரவணைத்துக்கொண்டு, குடும்ப உறவுகளுக்கு இடையிலான சிக்கல்களை கதையின் மையமாக்கினார்.

பெண் கதாபாத்திரங்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாகப் படைத்தார். சி.வி.தரைப் போலவே புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதை தீவிரமாகக் கடைப்பிடித்தார். கமல் - ரஜினி எனும் இரும்பெரும் நட்சத்திரங்களை உருவாக்கியவர்.

தன்னுடைய ஆசான்களில் ‘முதன்மையாவர்’ என கேபியைப் பற்றிக் கூறியுள்ள கமல், நட்சத்திர நடிகர் என்பதைக் கடந்து, தமிழ் சினிமாவின் பன்முக ஆளுமையாக உருவெடுத்தார். ரஜினி, வணிக சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஆனபிறகு அவரை வைத்து கேபி படம் இயக்குவதை நிறுத்திக்கொண்டார். நட்சத்திர நடிகர்களால் அழுத்தம் தரமுடியாத இயக்குநராக, தனக்கெனத் தனி பாணியை உருவாக்கியவராக இறுதிவரை விளங்கினார்.

எண்பதுகளின் யதார்த்த அலை!

எண்பதுகளின் தொடக் கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த பல புதிய திறமை யாளர்கள், யதார்த்த வகைத் திரைப்படங்கள் ஓர் அலையாக வெளிவரக் காரணமாக இருந்தனர். அவர்களில் துரை, பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு பிரதானமாக அமைந்தது.

கிராமிய வாழ்வின் சாயலை, அதன் பண்பாட்டு அசைவுகளுடன் அங்கேயே சென்று படம்பிடித்த பாரதிராஜா, வணிகப் பூச்சுடன் தன் படங்களைக் கொடுத்தார். துரை கையாண்ட தீவிர யதார்த்தம், சினிமா மீதான அவரது கலைப் பசியைக் காட்டியது. மகேந்திரனும் பாலுமகேந்திராவும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்கிற புரிதலுடன், கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிப் படிமங்களால் சித்தரிக்க முயன்று வெற்றிபெற்றனர்.

பாடல்களையும் பின்னணி இசையையும் கதை சொல்லலின் ஒரு பகுதியாக மாற்றி அவற்றை ‘மாண்டேஜ்’ காட்சிக் கோவைகளாக மாற்றினர். அதற்கு இளையராஜாவின் வருகை பெரும் வெடிப்பாக உதவியது. தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பு இந்த இருவரையும் யதார்த்த பாதைக்கு அழைத்து வந்ததை இருவருமே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இலக்கியத்தின் வழி உருவான திரைபடங்களின் தாக்கம் பெற்று பாலுமகேந்திராவும் இலக்கியத்தை தழுவி மகேந்திரனும் தங்கள் படங்களைக் கொடுத்தனர். எண்பதுகளின் யதார்த்த அலையின் தொடர்ச்சியை இன்றைக்கும் சேரன், தங்கர் பச்சான், வசந்த பாலன், சீனு.ராமசாமி உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களில் காணமுடியும்.

தொன்னூறுகளின் நவீன யதார்த்தம்!

திராவிட சினிமா, ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் திரைப்படங்களின் வழியாக உந்துதல் பெற்ற மணிரத்னம், ‘பட உருவாக்கம்’ என்பதில் தொழில்நுட்பத்தையும் கதை சொல்லலையும் இணைத்த நவீன யதார்த்த பாணியை அறிமுகப்படுத்தினார்.

அவரது நுழைவின் அடுத்த இரு பத்தாண்டுகளில் திரைப்படத் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துகொண்டு, படங்களைக் கொடுப்பதில் மணி ரத்னத்துக்கு நிகரான மற்றொருவர் என கமல்ஹாசனைக் குறிப்பிடலாம். மணிரத்னம் உருவாக்கிய நவீன யதார்த்த பாணியை, கௌதம் மேனன் தொடங்கி, முடிவுறாத ஒரு போக்காகத் தொட்டுத் தொடரும் இளைய தலைமுறை இயக்குநர் கூட்டம் ஒன்று தமிழ் சினிமாவில் இயங்கியபடியேதான் இருக்கிறது.

மணிரத்னமும் அவர் அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது இசையில் எழுதிய வைரமுத்துவும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழ் சினிமாவின் முகங்களாகக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

புரட்டிப் போட்ட டிஜிட்டல் யுகம்

படச்சுருளில் படமாக்கப்பட்ட காட்சிகளை மிக எளிதாக ‘படத்தொகுப்பு’ செய்ய வேண்டியும், தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகவும் ‘டிஜிட்டல் ஸ்கேனிங்’ செய்யும் ‘டெலிசினி’ எனும் முறை 1996இல் அறிமுகமானபோது தமிழ்த் திரையுலகில் டிஜிட்டல் யுகம் தொடங்கியது.

பின்னர், டிஜிட்டல் கேமராவில் காட்சியைப் பதிவுசெய்யும் ‘சென்சார்’ சாதனத்தின் ‘ரெசொல்யூஷன்’ வளர்ச்சி, படிப்படியாக உயர்ந்து படச்சுருளுக்கு போட்டியாக உருவானபோது டிஜிட்டல் சினிமா பிறந்தது. சில முன்முயற்சிகள் நடந்தபோதும், ஓளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய ‘வானம் வசப்படும்’ (2004) முதல் முழுமையான டிஜிட்டல் படப்பிடிப்பில் உருவாகி வெளியானது.

படச்சுருள் வழியே 2கே ரெசொல்யூஷனில் திரையிடப்பட்டு வந்த மல்டிப் பிளக்ஸ் திரையரங்குகள், பிறகு 4கே ரெசொல்யூஷன் துல்லியம் கொண்ட டிஜிட்டல் திரையிடல் கருவிகளைப் பொருத்திக்கொள்ளத் தொடங்கின. அப்போது, ‘ஒரு திரை’ மட்டுமே கொண்ட திரையரங்குகள் பலவும் வீழ்ந்தன. கூடவே ‘பிலிம் லேப்’களும் மூடப்பட்டன. படச்சுருளுக்கு மாற்றாக டிஜிட்டல் சினிமா இன்னும் முழுமையான துல்லியத்தை எட்டவில்லை.

என்றாலும் அதை எளிதாகக் கையாள முடிவது, ஒரே சீரான அதன் ஒளி நிரவல், தேய்மானம் இல்லாத அதன் ஆயுள், படப்பிடிப்புக்குப் பிறகான ‘டிஜிட்டல் இண்டர்மீடியட்’ தரமுயர்த்தல், கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய துறைகள், தமிழ் சினிமாவை டிஜிட்டல் யுகத்தின் சாத்தியங்களில் உச்சம் தொட வைத்துக்கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் யுகத்தின் புதிய பரிமாணமாக வந்துள்ள ஓடிடி, திரையரங்க சினிமா அனுபவத்தை அசைத்துப் பார்த்து வருகிறது. கைக்குள் அடங்கிய திரையில் கிடைக்கும் காட்சி அனுபவம், பார்வையாளர்களை புதிய பொழுதுபோக்கு வாழ்க்கை முறைக்குப் பழக்கியிருக்கிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சி, திரையுலகின் அனைத்து மட்டங்களிலும் தாக்கத்தை தந்திருப்பதையும் மறுக்க இயலாது.

புத்தாயிரத்தின் சினிமா!

எல்லாக் காலத்திலும் கதாநாயக சினிமாக்கள் பொழுதுபோக்கின் முதல்நிலை வணிக ஊடகமாக விளங்குகின்றன. அவற்றுக்கு மாற்றாக, டிஜிட்டல் யுகத்தின் வசதிகளும் உலக மயமாதலும் புத்தாயிரத்தின் ‘இடைநிலை’ தமிழ் சினிமாக்களின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. உலக அரங்கில், சர்வதேசப் படவிழாக்களில், தற்போதைய ‘இடைநிலை’ தமிழ் சினிமாக்கள் அவற்றின் உள்ளடக்கம், உருவாக்கம் ஆகியவற்றுக்காக பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்று வருகின்றன.

இலக்கியப் பரிச்சயம் கொண்ட வெற்றிமாறன், மணிகண்டன் உள்ளிட்ட பல இயக்குநர்கள், இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான உறவைப் புதுப்பித்திருப்பதுடன், சமகாலத்தின் பிரச்சினைகளை, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை பேசுகின்றனர்.

சுஜாதாவுக்குப் பின்னர் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகள் பலர், தங்களது திரையுலகப் பங்களிப்பை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். தற்போது தலித்திய சினிமா ஒரு புது வகையாக உருப்பெற்றிருப்பதின் பின்னணியில் பா.இரஞ்சித்தின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.

தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in