இந்தியா 75: மறக்க முடியாத மைல் கற்கள்!

இந்தியா 75: மறக்க முடியாத மைல் கற்கள்!
Updated on
4 min read

முதல் அசைபடம்!

மால்குடி என்கிற கற்பனை ஊரின் மூலம் தென்னிந்திய நடுத்தர வர்க்க வாழ்க்கையை எழுதிய ஆர்.கே.நாராயணின் ‘மிஸ்டர் சம்பத்’ என்கிற நாவல், ‘மிஸ் மாலினி’யாக சுதந்திரத்துக்கு பின் வெளியாகி (26.09.1947) தரமான படம் எனப் பெயர் பெற்றது.

இப்படத்தில் இடைவேளைக்குப் பிறகு, ஓவியர் தாணுவால் தயாரிக்கப்பட்ட ‘சினிமா கதம்பம்’ என்கிற இரு பரிமாண அனிமேஷன் படமும் காண்பிக்கப்பட்டது. இப்படத்தின் மூலம், ‘காதல் மன்னன்’ என்று பின்னாளில் கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசன் சிறு வேடத்தில் அறிமுகமானார்.

முதல் ‘பான் இந்தியா’

முப்பது லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் ‘பான் இந்தியா’ படம், ஜெமினி ஸ்டுடியோவின் ‘சந்திரலேகா’ (1948). முதலில் தமிழிலும் பின்னர் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. நாடு முழுவதையும் ‘பாக்ஸ் ஆபீஸ்’ ஆகப் பார்த்து, திரைப்பட விநியோகத்தில் தனித்தடம் பதித்த முதல் தமிழராக வெற்றியும் பெற்றார் ’சந்திரலேகா’வை தயாரித்து, இயக்கிய எஸ்.எஸ்.வாசன்.

அக்கால கட்டத்தில் 700 படப் பிரதிகள் அச்சிடப்பட்டு திரையிடப்பட்ட ஒரே படம். தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக விளங்கி வந்த டி.ஆர்.ராஜகுமாரியின் பெயரே திரையில் முதலில் போடப்பட்டது. ஒரு கிராமத்துப் பெண்ணின் சாகசங்களே படம். அவ்வகையில் இதுவொரு பிரம்மாண்ட பெண்மையப் படமும்கூட!

முதல் ஆங்கிலப் படம்

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் இருந்த தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகளைப் பற்றி எல்லிஸ் ஆர்.டங்கன் வழியே கேட்டு வியந்தார் ஹாலிவுட் தயாரிப்பாளரான வில்லியம் பெர்க். அவர், டங்கன், டி.ஆர்.சுந்தரம் ஆகியோருடன் இணைந்து ஹாலிவுட், தமிழ் நட்சத்திரங்கள் நடிப்பில், ஹாலிவுட், மாடர்ன் தியேட்டர்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில் முழு நீள ஆங்கிலப் படத்தைத் தயாரித்தார்.

இந்தியா, ஐரோப்பா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்ற அந்தப் படம் ‘தி ஜங்கிள்’ (1952). தென்னிந்தியாவில் தயாரான முதல் ஆங்கிலப் படம். முழுவதும் சிஃபியா டோனில் எடுக்கப்பட்டது.

முதல் சோதனை முயற்சி

பாடல், நடனம், சண்டைக் காட்சிகள் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல், எடுக்கப்பட்ட முதல் தமிழ், இந்தியப் படம் ‘அந்த நாள்’(1954). பிற்காலத்தில் தொடர்ந்து சோதனை முயற்சிகளில் ஈடுபட்ட எஸ்.பாலசந்தரின் துணிச்சலான முதல் சோதனை முயற்சி இது.

நாயகன் கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இறக்கும் காட்சியுடன் தொடங்கும் இப்படம், ஏவி.எம்மின் தயாரிப்பு.

முதல் திரைப்பட இயக்கம்

தெருக்கூத்துக்களாக நிகழ்த்தப்பட்டு வந்த மேடை நாடகங்கள், சபா நாடகங்கள் போன்றவை திரைப்படங்களாகி வந்த நேரத்தில், பாவலர் பி.பாலசுந்தரம் எழுதி, தமிழகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றிருந்த பிரச்சார நாடகமொன்று, தமிழ் சினிமாவின் முதல் சினிமா இயக்கத்தை தொடங்கி வைத்தது.

அதுதான் கலைஞர் மு.கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய ‘பராசக்தி’(1952). திராவிட இயக்க அரசியலுக்குப் பிரச்சார பீரங்கிபோல் முழங்கிய இந்தப் படம், ‘திராவிட சினிமா அலை’யை ஒர் இயக்கமாக உருப்பெறச் செய்தது. தணிக்கையின் கடுமையான வெட்டுகளுக்குப் பின் வெளியான. இப்படத்தின் மூலம் அறிமுகமான வி.சி.கணேசன் தமிழ் சினிமாவின் நடிகர் திலகமாக உயர்ந்தார்.

முதல் படவிழா

இந்திய மொழிப் படங்களின் உள்ளடக்கமும் திரைமொழியும் மாற்றம் பெறத் தொடங்கியதில் சர்வதேசப் படவிழாக்களின் பங்கு, முக்கியமான ஒன்று. இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நான்கு நகரங்களில் இந்தியாவின் முதல் சர்வதேசப் படவிழாக்கள் (IFFI) 1952 இல் நடத்தப்பட்டன.

பின்னர் 1978இல் இப்படவிழாக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இந்தியா பனோரமா’ பிரிவு, இந்திய மொழிகளில் மாற்றுத் திரைப்பட இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிவருகிறது.

முதல் வண்ணம்

பெல்ஜியம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கேவா கலர்’ முறையில் முழுவதும் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய வண்ணத் திரைப்படம் ‘ அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (1956). இம்முறையில் படமாக்கம் செய்ய, தன்னுடைய ஸ்டுடியோ ஒளிப்பதிவாளரான டபிள்யு.ஆர். சுப்பா ராவின் திறமை மீது நம்பிக்கை வைத்தவர் படத்தை இயக்கி, தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரம்.

இந்தப் படத்தின் முலம் ‘கிளப் டான்ஸ்’ என்கிற கேளிக்கை வகைப் பாடலை தென்னிந்திய அளவில் முதல் முறையாக அறிமுகம் செய்தார். ‘சலாம் பாபு’ என்கிற அந்தப் பாடலில் ஆடிய வஹீதா ரஹ்மான் பின்னாளில் இந்திப் படவுலகை ஆண்ட கதாநாயகிகளில் ஒருவரானார்.

முதல் சர்வதேச விருது!

தமிழ்ப் படங்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு, ‘மீரா’, ‘சந்திரலேகா’ படங்களில் தொடங்கியது. ஆனால், ஒரு சர்வதேசப் பட விழாவின் ( கெய்ரோ ஆப்ரிக்க - ஆசியப் படவிழா) போட்டிப் பிரிவுக்குத் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த இசை ஆகிய இரண்டு விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்ந்த முதல் படம் பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘வீரபாண்டியக் கட்டப்பொம்மன்’ (1959).

இப்படம் குறித்தும் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றல் குறித்தும் அறிந்த எகிப்து நாட்டின் அதிபர் கமால் அப்துல் நாசர், இந்தியா வந்தபோது, பிரதமர் நேருவைச் சந்தித்த பின், சிவாஜி கணேசனைச் சந்தித்துப் பாராட்டினார். இது இந்தியாவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத கௌரவம்.

முதல் திரைப்படக் கல்லூரி

இன்று காட்சித் தகவலியல் கல்வி வழங்கப்படாத கலை, அறிவியல் கல்லூரிகள் குறைவு என்கிற நிலை. ஆனால், தமிழ்நாட்டின் முதல் திரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி ‘தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பிலிம் டெக்னாலஜி’ என்கிற பெயரில் 1960இல் சென்னை அடையாறில் தொடங்கப்பட்டது.

இதில் பயின்று வெளிவந்த மாணவர்கள், 1972இல் ‘தாகம்’ என்கிற படத்தை உருவாக்கி வெளியிட்டனர். அப்போது தொடங்கி, தமிழ் சினிமாவுக்கு படைப்பூக்கமும் தொழில்நுட்பத் தேர்ச்சியும் மிக்க எண்ணிறைந்த கலைஞர்களை அளித்துவருகிறது திரைப்படக் கல்லூரி. இக்கல்லூரியின் மாணவரான ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ (1978) படத்தை, தமிழ் சினிமாவின் முதல் முழுமையான பெண்ணிய சினிமாவாக உருவாக்கினார் அப்படத்தின் மூலம் அழியாப் புகழ்ப்பெற்றார்.

முதல் முப்பரிமாணம் - அகண்ட திரை - ஸ்டீரியோ ஒலி!

தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக உருவாகி வெளிவந்தது ‘ராஜராஜ சோழன்’ (1973). தமிழ்த் திரையிசையில் ஸ்டீரியோ ஒலியைப் பயன்படுத்தி முதன்முதலில் ஒலிப்பதிவு செய்தவர் ‘இசைஞானி’ இளையராஜா.

எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ‘ப்ரியா’ (1978) படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஸ்டீரியோவில் நனைத்து எடுத்திருந்தார் ராஜா. தமிழின் முதல் 3டி படமான ‘அன்னை பூமி’ 1985ஆம் ஆண்டிலும் முதல் 70 எம்.எம். திரைப்படமான ‘மாவீரன்’ அடுத்து வந்த 1986ஆம் ஆண்டிலும் வெளியாகின.

(மைல் கற்கள் அடுத்த வாரமும் தொடரும்)

தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in