

உலகில் முதல் முறையாக ‘நான் - லீனியர்’ சிங்கிள் ஷாட் திரைப்படத்தை இயக்கிச் சாதனை படைத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஒரே இடத்தில் போடப்பட்ட 72 ‘செட்’களில் இந்தப் படம் 96 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது. “கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன் மட்டும் இதில் பணிபுரியாமல் போயிருந்தால் ‘இரவின் நிழல்’ சாத்தியமல்ல! இதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்” என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தார் பார்த்திபன். ‘குடைக்குள் மழை’ படம் தொடங்கி பார்த்திபனின் 5 படங்களில் ஏற்கெனவே கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ஆர்.கே.விஜய் முருகனுடன் ‘இரவின் நிழல்’ படத்தில் கலை இயக்கத்தின் பங்கு பற்றி உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
உங்களது சொந்த ஊர், சினிமாவுக்கு வந்த பின்னணி குறித்து சொல்லுங்கள்...
எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள தண்டரை என்கிற கிராமம். எனது மாமா சீனிவாசன் பிரபலமான சிற்பி. சென்னை கவின் கலைக் கல்லூரியில் பயின்றவர். இயக்குநர் சரணும் அவரும் ஒன்றாகப் படித்தவர்கள். தன்னுடைய கலையாளுமைக்காக நிறைய விருதுகளை வாங்கி உள்ளார் .என்னை அவர் தான் வளர்த்தார். அவரது தாக்கத்தால் எனக்குச் சிறு வயதிலிருந்து ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள் என்று ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதைப் பார்த்த அவர், சினிமாவில் கலை இயக்கம் என்று ஒரு துறை இருக்கிறது. அதுதான் உனக்குச் சரியான களம் என்று கூறி என்னைச் சினிமாவில் சேர்த்து விட்டார் .நான் 17 வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டேன். கலை இயக்குநர் மோகன் மகேந்திரனிடம் உதவியாளராக இருந்து சினிமாவுக்கான கலை இயக்கத்தின் தொழில்சார்ந்த பணிகளைக் கற்றுக் கொண்டேன்.
நான் முதலில் பணியாற்றிய படம் ‘சார்லி சாப்ளின்’. அதன் பிறகு ‘குடைக்குள் மழை' ‘அரவான்’, ‘சுறா’, ‘பரமசிவம்’, ‘ஜனா’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘விஐபி’, ‘மாரி’, ‘கோலிசோடா’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘சத்ரியன்’ என்று ‘இரவின் நிழல்’ படத்துக்கு முன் 49 படங்களில் பணி புரிந்துள்ளேன். ‘இரவின் நிழல்’ எனது 50வது ஐம்பதாவது படமான இரவின் நிழல் வரை பணியாற்றி இருக்கிறேன்.
‘இரவின் நிழல்’படத்திலிருந்து முதலில் வெளியேறிவிட்டீர்கள் என்று பார்த்திபன் சொல்லியிருக்கிறாரே..!
ஆமாம்! சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் பார்த்திபன் சார் அவர்களுடன் 20 ஆண்டுகளாகப் பயணிக்கிறேன். அவரது ஐந்து படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய போது கூட முதலில் இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று நான் நினைத்தேன். அவர் நினைப்பதெல்லாம் சாத்தியப்படுமா என்று சில சந்தேகங்கள் எனக்கு இருந்தன, அவை கருத்து முரண்பாடுகளாக மாறின. ‘தலைமுடியால் மலையைக் கட்டி இழுக்கும் இந்த வேலைக்கு நான் வரவில்லை’என்று சொல்லி வெளியேறி விட்டேன். ஒரு கட்டத்தில் அவர் இப்படி சினிமாவில் புதிதாக முயற்சி செய்ய நினைக்கும்போது அப்படி நினைப்பதை சாத்தியப்படுத்திப் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த முயற்சியில் பங்கெடுத்தால் என்ன என்று தோன்றி மீண்டும் வந்து இணைந்து விட்டேன். அப்படித்தான் அவருடன் மீண்டும் இணைந்தேன்.
இரவின் நிழல் படத்தைப் பொறுத்தவரை அது இரண்டு ஆண்டு காலப் பயணம் என்று சொல்ல வேண்டும். அந்தப் படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டது. தானாக அதைத் தேடி வந்த ஆட்களைப் புறந்தள்ளியது என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு ஆண்டு காலம் இயக்குநர் பார்த்திபனுடன் பயணம் செய்து அவர் மனதில் தோன்றிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு ஏராளமான மாற்றங்களையும் திருத்தங்களையும் மேம்பாடுகளையும் கண்ணெதிரே பட்டு உணர்ந்து, அதிலேயே ஊறி ஊறி கதையோடும் காட்சிகளோடும் ஒன்றிப் பணியாற்றிய படம் இது.
இந்தப் படத்துக்காக எத்தனை செட்கள் போடப்பட்டன? செட் போட சரியான இடத்தை எங்கே கண்டுபிடித்தீர்கள்?
இந்தப் படத்துக்காக ஒரே இடத்தில் வரிசையாக 59 செட்கள் போடப்பட்டன. செட்டின் பின்னிணைப்பாக போடப்பட்ட செட்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 72. இதற்காக நாங்கள் இடம் தேடிப் போனபோது சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். அது 60 முதல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். அங்கே மூன்று தொழிற்கூட கூரைகள் இருந்தன. அவை எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அதில் 5 ஆயிரம் தொழில்முறைக் கலைஞர்களை வைத்து செட் அமைத்தேன். அதில்தான், 98 நாட்கள் ஒத்திகை படப்பிடிப்பு என்று நடத்தினோம். அதில் 23 நாள் முழுமையான படப்பிடிப்பு நடந்தது. காளஹஸ்தி கோயில் செட்டில் ஒரிஜினல் கற்சிலைகளை செட் அமைக்கும் முன்பே கொண்டு என்று இறக்கி வைத்துவிட்டு செட் வேலைகளைத் தொடங்கினோம்.
ஒரே ஷாட்டில் உருவாகும் படம் எனப்போது உங்களுக்கான சவால்கள் என்னவாக இருந்தன?
வழக்கம்போல சுதந்திரமாக செட் அமைக்கலாம் என்றால் புகுந்து விளையாடி விடுவோம். ஆனால் இது ஒரே ஷாட் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் படமாக எடுக்கக்கூடிய திட்டம் என்கிற போது அனைவரையும் ஒரு பதற்றமும் நிதானமும் கட்டுப்பாடும் நிர்பந்தமும் தொற்றிக் கொண்டு விட்டது. யார் பிழை செய்தாலும் முழு படமும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் அனைவருக்கும் நிர்ப்பந்தம் உண்டு. அதே சமயத்தில் நிதானத்தையும் இழக்கக்கூடாது.
அதற்கேற்றபடி தான் இந்த செட்களைப் போட வேண்டும். கேமரா முதல் காட்சி ஒளிப்பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து இறுதிக்காட்சி முடியும் வரை தங்கு தடையின்றி அந்தக் கேமரா பயணம் செய்யுமாறு கேமராவின் பயணத்துக்கு ஏற்றபடி ஒவ்வொரு செட்டின் கதவுகளிலும் அகலமாக திறந்து குறுகலாக மூடிக்கொள்ள ஏற்ற வகையில் அமைத்தோம். செட்டில் பல்வேறு வகையான பின்புலங்களையும் நிகழ்விடங்களையும் 1970, 1980, 2000, 2010, 2020 என்று பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த அரங்குகள் இருக்க வேண்டும் என்பது பெரிய சவால்தான். காலம் இந்தப் படத்தில் கபடி விளையாடுவதால் அது கலை இயக்கத்தில் நம்பகமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் நிறையவே மெனக்கெட்டோம்.
செட்களில் பல நகரும்படியாகவும் திறந்து மூடும் படியாகவும் படப்பிடிப்புக்கு ஏற்ற வரையில் வடிவமைப்பது தான் பெரிய சவால். முன்னே நகர்ந்து வளைந்து ஏறக்குறைய வட்டமாக சுற்றி வரும் நிலையில் இந்த அரங்குகளின் அமைப்பு வேலைகளைச் செய்தோம். படப்பிடிப்பு நடக்கும்போது எனக்கு உதவியாக சுமார் 30 உதவியாளர்கள் தேவைப்பட்டார்கள். அவ்வளவு பேருக்கும் ஊதியம் கொடுப்பதும் பெரிய சவாலாக இருந்தது. எனவே சிறப்பு அனுமதி பெற்று கவின் கலைக் கல்லூரி மாணவர்களை உதவியாளர்களாக வைத்துக் கொண்டேன்.
ஒருமுறை செட் போட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் அதில் படப்பிடிப்பு நடத்தலாம் என்கிற நிலை இதற்கு உதவாது. ஒவ்வொரு நாளும் அதில் புதிதாக வேலை இருக்கும். செட் அப்டேட் நடந்துகொண்டே இருக்கும். அதேபோல் பழடைந்த அந்த அந்த ஆஸ்ரமித்தின் முன்னால் மண்டிக்கிடக்கும் கோரைப் புற்களை ஏரியிலிருந்து தினசரி மண்ணுடன் வெட்டி எடுத்து லாரிகளில் ஏற்றி வந்து அப்படியே ஒரிஜினலாக தினசரி வைப்போம். ஏனென்றால் புல் 12 மணி நேரத்துக்குப் பின் வாடிவிடும்.
படத்தில் வரும் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் அவ்வப்போது சேதாரம் ஆகும். உடனே அதைச் சரி செய்ய வேண்டும். இப்படி அனைவருமே துடிப்புடன் இருந்து ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக எடுக்க முடிந்துள்ளது.
பார்த்திபனுக்கு உங்களுக்கும் உள்ள புரிதல் எப்படி இருந்தது?
நான் அவரிடம் 20 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நட்புறவில் இருக்கிறேன். இது எப்படி சாத்தியம் அவர் ஒரு சிக்கலான குணச்சித்திரம். புதிதாக யோசிப்பவர். ‘புத்திசாலித்தனமாகவும் ஏன் கிறுக்குத்தனமாகவும் மாறுபட்ட கோணத்தில் யோசிப்பது அவருக்கு ஒரு நோய் மாதிரி அவரிடம் எப்படி உன்னால் தொடர்ந்து போக முடிகிறது?’ என்று நண்பர்கள் கேட்பார்கள். ஆனாலும் அவர் சினிமாவுக்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிற
அவருடைய இயல்பைப் புரிந்து கொண்டு நான் பயணம் செய்கிறேன்.
கலை இயக்குநர் என்பதைத் தாண்டி ஒரு நடிகராகவும் முகம் காட்டுகிறீர்களே எப்படி?
என்னை முதலில் நடிகனாக்கியவர் விஜய் மில்டன் தான். ‘கோலிசோடா’ படத்தில் ஏற்கெனவே பணியாற்றிய கலை இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்ததால் என்னை உதவிக்கு அழைத்தார் .என்னுடைய அசைவுகளையும் உடல் மொழியையும் பார்த்துக் கொண்டு விட்டு என்னைப் படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு ‘சாணிக் காயிதம்’ வரை சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிகர் ஆனது ஒரு விபத்து போலத்தான். ஆனால் போகப்போக பலரும் சொன்ன கருத்துக்களை வைத்து என்னை நானே மேம்படுத்திக் கொண்டு ஒரு வளரும் நடிகராக இருந்து வருகிறேன். இதுவரை ஏழு படங்கள் நடித்துள்ளேன். இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறேன். பொதுவெளியில் நான் எதிர்கொள்ளும் சக மனிதர்கள் என்னை ‘எங்கோ பார்த்த ஞாபகம்’ என்று சொல்லி விசாரிக்கிறார்கள். இப்போதும் நடிக்க அழைப்புகள் வருகின்றன. ஆனால் மனதளவில் எனக்குப் பிடித்தால்தான் அதில் நடிப்பேன்.
‘இரவின் நிழல்’ கலை இயக்கத்துக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு எது?
குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாதது. படத்தை சிறப்புத் திரையிடம் செய்தபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் படத்தைப் பார்த்தார்கள். பலரும் என்னைப் பாராட்டினார்கள், பெயர் குறிப்பிடாமல் கலை இயக்குநர் என்று பலரும் என்னைப் பற்றிப் பாராட்டிச் சொன்னார்கள். பத்திரிகை விமர்சனங்களிலும் என் பெயர் குறிப்பிடப்பட்டு பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி. ‘இரவின் நிழ’லுக்கு இந்து தமிழ் திசை முதல் விமர்சனம் வெளியிட்டதும் அந்த விமர்சனத்தை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஃபார்வர்டு செய்ததும் மறக்கமுடியாத தருணம்.
திரையரங்குகளில் படம் பார்க்கிற போது பலரும் என்னைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காளகஸ்தி கோவில் செட் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். கலை இயக்கம் என்பது தனியாகத் தெரியக் கூடாது என்பார்கள். ஆனாலும் இப்போது கால மாற்றத்தால் ரசிகர்கள் சினிமா பற்றி தெரிந்தவர்களாக இருப்பதால் அவர்களால் கண்டுகொள்ள முடிகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனைப் போலவே இந்தப் படத்தில் கிம்பல் கேமரா ஆபரேட்டராக இருந்த ஆகாஷின் உழைப்பையும் யாரும் மறந்துவிடக்கூடாது.