

கதையே இல்லாமல் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்கிற வெற்றிப் படத்தை தமிழ் சினிமா நூற்றாண்டுக்குச் சமர்ப்பித்தவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.
அதன் பின்னர் ஒரேயொரு கதாபாத்திரத்தை மட்டும் திரையில் காட்டி, ஏனைய கதாபாத்திரங்களைப் பார்வையாளரின் மனத் திரையில் கற்பனை செய்துகொள்ளும் விதமாக ‘ஒத்த செருப்பு’ படத்தைக் கொடுத்தார். இப்போது..
முதன்மைக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை ‘ஃப்ளாஷ் பேக்’ உத்தியில் கூறும் முழு நீளத் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி ‘இரவின் நிழல்’ ஆகக் கொண்டு வந்திருக்கிறார். இந்த முயற்சி எப்படிச் சாத்தியமானது? ‘இந்து தமிழ் திசை’க்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
கதையை முன்பின்னாக விவரிக்கும் ‘நான் - லீனியர்’ திரைக்கதை உத்தியுடன் ஒரு ‘சிங்கிள் ஷாட்’ படமென்பது உலக சாதனை அல்லவா? இதை ‘கின்னஸ்’ ஏற்றுக்கொண்டதா?
கின்னஸில் ‘சிங்கிள் ஷாட்’டை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். அதில், ‘நான் - லீனியர்’ எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டு ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களால் நம்ப முடியவில்லை. அதை அவர்களுக்கு விளக்கி, பேசிக்கொண்டிருக்கிறோம்.
‘சிங்கிள் ஷாட்’டில் எடுப்பது ரொம்பவும் ஈஸியான விஷயம். உலகம் முழுவதும் பிரபலமான உத்தியும்கூட. அதே சிங்கிள் ஷாட்டில், ‘நான்-லீனிய’ரில் ஐம்பது வயது மனிதரின் வாழ்க்கையை ஃப்ளாஷ் பேக் கதையாகச் சொல்கிறேன். இதற்காக ஓர் உத்தியை இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறேன்.
அந்த உத்தியை முதன்முதலில் நான்தான் கண்டுபிடித்திருக்கிறேன். இதுவரை உலக அளவில் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை. இந்தப் படத்துக்கான ஒத்திகைக்கு மட்டும் 90 நாட்கள் ஆனது. 340 பேரை வைத்து, பழைய மகாபலிபுரம் சாலையில் 64 ஏக்கரில் 58 வகையான அரங்குகள் அமைத்து 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்திருக்கிறேன். சாத்தியமில்லாத ஒன்றை இதில் சாத்தியப்படுத்தியிருக்கிறேன்.
கின்னஸுக்கே விளக்கம் தேவைப்படும்போது, ரசிகர்கள் இதன் பின்னாலுள்ள உழைப்பையும் புதுமையையும் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
புதுமையை எப்போதுமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் நம்முடைய ரசிகர்களை கண்டிப்பாக மதித்தாக வேண்டும். அதே நேரம் இவ்வளவு பிரம்மாண்டமான முயற்சியை அவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டு, வியந்தபடியே படம் பார்க்க வேண்டும். அதற்காக, இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை, அரை மணி நேரம் சுவாரசியமாக விளக்கி, படத்தின் தொடக்கத்திலேயே போட்டுக் காண்பிப்பேன்.
இதில் படத்தைப் பற்றிய கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்துவிடும். படத்தின் மொத்த நேரத்தில் ‘மேக்கிங் ஆஃப் தி பிலிம்’ மட்டும் 30 நிமிடங்கள் வரும். இந்தக் கதைக்குள் இருக்கிற கதாபாத்திரங்கள் பெரிய சஸ்பென்ஸ். அவர்கள் அனைவருமே இந்த அரை மணி நேர ‘மேக்கிங்’குக்குள் வந்துவிடுவார்கள்.
இதுவரை யாருமே இப்படி ஒரு படம் செய்ததில்லை, பார்த்ததும் இல்லை என்கிற மாதிரியான அனுபவத்தை இந்தப் படம் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
முதன்மைக் கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்டங்களையும் சூழ்நிலைகளையும் ஒரே படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு வருகிற சவாலை ஏற்கும் துணிச்சல் எப்படி வந்தது?
வசதி, வாய்ப்புகள் எதுவும் இல்லாததுதான் அந்தத் துணிச்சலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவை இருந்திருந்தால் அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பேன்.
ஆனால் இன்றைக்கு பெடலை அழுத்தி மிதித்தால்தான் காசு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் ரிக் ஷா ஓட்டுகிற ஒரு தினக்கூலியுடைய வாழ்க்கைதான் என்னுடையதும். இன்றைக்கு ஒரு படம் நடித்தால் 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். நான்கு படம் நடித்து அதில் கிடைக்கிற பணத்தை வைத்து சொந்தப் படம் எடுக்கிறேன்.
தவிர பணம் மட்டுமே எல்லாவித சந்தோஷத்தையும் கொடுத்துவிடாது என்று நினைக்கிறவன் நான். எனக்கு எந்தப் பொருளாதார அழுத்தங்களும் கிடையாது. நான் என்னை ஒரு வசதியானவனாக நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரு கலைஞனாக வாழ வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஆசை.
உங்கள் சொந்த வாழ்க்கைக்கும் இந்தப் படத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
என் சொந்த வாழ்க்கைக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பத்திரிகைகளில் வெளிவருகிற செய்திகளைச் சேகரித்து வைத்துக்கொள்வேன். அந்தச் செய்திகளுக்குப் பின்னால் என்ன நியாயம் இருக்கும் என்று ஆராய்ந்து பார்ப்பேன். ஒரு மனிதன் வளர்கிற சூழல்தான் எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருக்கிறது. அதைக் கதாபாத்திரங்களுக்குள் கொண்டு வருகிறேன்.
இரவுக்கு நிழல் இருக்க முடியாது. இந்தத் தலைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
முதலில் ‘மேகத்தை மிதித்தவன்’, ‘தீராத் தாகம்’ எனப் பல தலைப்புகளை யோசித்தேன். இரவுக்கு நிழல் உண்டா, இல்லையா என்று நமக்குத் தெரியாது.
அப்படி இருந்தால் அது அந்த இரவுக்குத்தான் தெரியும். அந்த இரவு என்ன சொல்ல வருகிறது என்பதுதான் ‘இரவின் நிழல்’. கதையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒருவனைப் பற்றி பத்திரிகையில் செய்திகள் வருகின்றன. ‘உங்களுக்குத் தெரிந்தது எதுவுமே உண்மையில்லை’ என்று அவன் வேறு ஒரு செய்தியை உலகத்துக்குச் சொல்கிறான். அதுதான் கதை.
என்னதான் தேசிய விருது பெற்ற கலை இயக்குநரை வைத்து அரங்குகள் அமைத்தாலும் பல நேரம் அது ‘செட்’ என்று தெரிந்துவிடுகிறது. இந்தப் படத்தில் கதைக்களம் முழுவதும் ‘செட்’ எனும்போது அதை எப்படி இறுதி செய்தீர்கள்?
இக்கதையை நான் கமல் சாரிடம் சொன்னபோது, “ இந்தக் கதையை எப்படி ஒரே ஷாட்ல எடுப்பீங்க? எப்படி ஒரே இடத்துல எல்லாத்தையும் கொண்டு வருவீங்க? கடற்கரை, கோயில்னு நிறைய வாழ்விடங்கள் வருதே..! எதற்குப் பக்கத்துல எதைக் கொண்டு வருவீங்க?” என்று கேட்டார்.
அதற்கு நான், ‘இல்லை சார், இதையெல்லாத்தையும் நான் ஒரே இடத்துல கொண்டு வர ஒரு உத்தியைப் பயன்படுத்தப்போறேன்’ என்று நான் கண்டுபிடித்த உத்தியை அவரிடம் கூறியதும் பிரமித்துப் போய்விட்டார்.
அந்தத் உத்தியைப் பற்றி இப்போது வெளியே சொல்லக் கூடாது. படம் பார்க்கும்போது தெரியும். கின்னஸ் சாதனைக்காக அடுத்து ஒரு படம் எடுக்கப் போகிறேன். இந்தப் படம் வெளியாகும்போது அதைக் குறித்துச் சொல்வேன்.
உதவி: ரா. மனோஜ்