

‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ படங்களைத் தொடர்ந்து சீனு.ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘மாமனிதன்’. விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, “பாடல் கம்போஸிங், பாடல் வரிகள் தேர்வு, பின்னணி இசைக் கோப்பு உள்ளிட்ட எந்தப் பணியையும் பார்வையிட, படத்தின் எழுத்தாளர், இயக்குநர் என்கிற முறையில் என்னை இசைஞானி அழைக்கவில்லை” எனக் கூறி வருத்தத்துடன் கண்கலங்கினார் சீனு ராமசாமி. அது பற்றியும் படம் குறித்தும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி
மலையாள சினிமாவில் மாஸ் படங்கள் இருந்தாலும் கதைப் படங்கள்தான் அவர்களது அடையாளம். தமிழ் சினிமாவில் பிடிவாதமாக கதை மதிப்பு மிக்க படங்களை எடுப்பவர் நீங்கள். உங்களது 15 ஆண்டு சினிமா பயணத்தில் கதைப் படங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
எண்பது, தொண்ணூறுகளில் பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற சிறந்த கதைப்பட இயக்குநர்களுக்கு இருந்த வாய்ப்பு இப்போது சுத்தமாக இல்லை. நல்ல கதைப் படம் எடுத்துவிட்டு இரண்டாவது வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இயக்குநர்களை இன்று நான் பார்க்கிறேன். இன்று கதைப் படங்களுக்கு அவற்றின் தயாரிப்பு நிலையிலேயே பெரும் போராட்டம் இருக்கிறது.
கதைப் படங்களை புதுமுகங்களை வைத்து எடுத்தால், அவற்றைப் பார்க்க பார்வையாளர்கள் முன்வருவதில்லை. எனவே, அவர்களைச் சுண்டி இழுக்கக்கூடிய ஆர்ட்டிஸ்ட் இருந்தால்தான் கதைப் படம் பண்ணமுடியும் என்கிற நிலை. ஆனால், எண்பதுகளில் மாஸ் படங்களில் நடித்துக்கொண்டே ரஜினியும் கமலும் கதைப் படங்களில் நடித்தார்கள். கமல் அப்போது பாரதிராஜா, பாலசந்தர் இயக்கத்திலும் நடித்தார், எஸ்பி.முத்துராமன் இயக்கத்திலும் நடித்தார்.
ரஜினி மகேந்திரன் இயக்கத்திலும் நடித்தார், எஸ்பி.முத்துராமன் இயக்கத்திலும் நடித்தார். மலையாளத்தில் மம்முட்டியும் மோகன்லாலும் அன்று தொடங்கி இன்று வரைக்கும் இரண்டு வகைப் படங்களிலும் நடிக்கிறார்கள். தமிழில் இப்போது அப்படிப்பட்ட இரண்டு முன்னணிக் கதாநாயக நடிகர்கள் உண்டென்றால் அவர்கள் விஜய்சேதுபதியும் சூர்யாவும் மட்டும்தான்.
விஜய்சேதுபதி இன்று இந்தியா அறிந்த ஒரு நடிகர். உங்களுடைய மாணவராக அவரது இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எந்தப் பின்புலமும் இல்லாமல், சினிமாவை ஒரு கனவாக வரித்துக்கொண்டு வரும் இளைஞர்களுக்கு விஜய்சேதுபதியின் வெற்றி என்பது நம்பிக்கை தரும் சங்கநாதமாக இருக்கிறது.
நடிப்புத் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்புடன் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அணுகினால் மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து வெற்றிபெற முடியும் என்பதை எடுத்துக்காட்டிவிட்டார் விஜய்சேதுபதி.
அதனால்தான் விஜய்சேதுபதி என்கிற பெயர் இன்று கோடிக்கணக்கான மனங்களில் பிரியத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். இந்திய அளவில், உலக அளவில் இன்னும் பெரிய உயரங்களை அவர் தொடவேண்டும் என விரும்புகிறேன்.
‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதியைப் பார்வையாளர்கள் எப்படி உணர்வார்கள்?
அவரைத் தங்களது வீட்டில் இருக்கும் ஒருவராக உணர்வார்கள். நமது வீடுகளின் கொல்லைப்புறங்களில் துளசியும் தும்பைச் செடியும் இருக்கும்.
நொச்சியும் திருநீற்றுப் பச்சிலையும் இருக்கும். குப்பைமேட்டில் குப்பைமேனி மண்டிக்கிடக்கும். வீட்டின் வேலியில் தூதுவளையும், கண்டங்கத்திரியும் பிரண்டையும் கொடியாகப் படர்ந்து கிடக்கும். இவையெல்லாம் நம் அருகிலேயே கண்கண்ட மூலிகைகளாக இருக்கும்.
ஆனால், இவற்றை அறிந்தும் அறியாதவர்கள்போல், ஏதோவொரு மருந்தைத் தேடி எங்கோ போய்க்கொண்டிருப்போம். இங்கே நான் மூலிகைகள் என்று குறிப்பிட்டது நம்மைச் சுற்றியிருக்கும் மாமனிதர்களைதான். சக மனிதனின் துயரத்தைப் பார்த்து கண்ணீர் வடிப்பவன் சிறந்த மனிதன்.
கண்ணீரைத் துடைத்து அவனது முகத்தில் புன்னகையை மலரச் செய்பவன் மாமனிதன். விஜய்சேதுபதி இதில் கண்ணீரா, கண்ணீரைத் துடைப்பவரா என்பதை ‘மாமனிதன்’ பார்த்து பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ தொடங்கி, உங்களது படங்களில் கதை நிகழும் களத்தை ஒரு கதாபாத்திரம்போல் பதிவுசெய்வது ஏன்?
ஏனென்றால்.. கதை மாந்தர்கள் வாழும் நிலப்பரப்பு என்பது அவர்களது வாழ்வுடன் புவியியல் ரீதியாக சார்பையும் தொடர்பையும் கொண்டது. அதனால்தான், கதை நிகழும் களத்தை ‘லொக்கேஷன்’ என்று மறந்தும் நான் சொல்வதில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்காத ஒன்று. கதாபாத்திரங்கள் வாழும் நிலமும் அங்கு பேசப்படும் வழக்கு மொழியும் அங்குள்ள வட்டாரப் பழக்க வழக்கங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.
எனது படங்களில் நிலப்பரப்பு என்பது ஏதோ ஒன்று அல்ல; அது கதை சொல்லும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். செயற்கையாக உருவாக்கப் படுவது ஒருபோதும் கதைக்களமாக இருக்க முடியாது.
என்னுடைய கதை மாந்தர்களின் வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் விழுந்த நிலப்பரப்பாக கதைக் களம் இருக்கும்போது, அது திரைமொழியை உண்மையின் அருகில் வைத்து கௌரவம் செய்துவிடுகிறது. பார்வையாளர்களும் அந்த நிலப் பரப்பில் இரண்டரை மணிநேரம் வாழ்ந்துவிட்டு வருவார்கள்.
‘மாமனிதன்’ படத்தின் கதைக் களம், அது விரிந்திருக்கும் நிலப்பரப்பு எது?
மேற்குத் தொடர்ச்சி மலையும் அது தரும் மழையும் இயற்கை அன்னை, தமிழர்களுக்கு அளித்த மாபெரும் கருணை. அது நம்மை இந்த நிலத்தில் ஈரம் மிக்கவர்களாக வைத்திருக்கிறது. தமிழர்களின் பண்டைய மரபுகள் அனைத்தும் இந்த மலைத்தொடருடன் நெருங்கியத் தொடர்புகொண்டவை. கதையின் நாயகன் ராதாகிருஷ்ணன் இம்மலைத்தொடரின் குறிஞ்சி நிலப்பகுதியில் வாழும் ஒருவன். அவனுடைய ஊர் பண்ணைபுரம். நான் மிகவும் நேசிக்கின்ற இசைஞானி இளையராஜாவை பிரசவித்த ஊர்.
‘மாமனிதன்’ பத்திரிகையாளர் சந்திப்பில், நீங்கள் வருத்தப்பட்டுப் பேசியது வைரல் ஆனது. அதன் பிறகாவது இளையராஜா உங்களை அழைத்துப் பேசினாரா, சமாதானப்படுத்தினாரா?
அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததுமே கேரளத்துக்கு படத்தின் புரமோஷன் வேலைகளுக்குக் புறப்பட்டுவிட்டேன். அதனால் தமிழ்நாட்டிலிருந்து வந்த எந்த அழைப்பையும் கடந்த நான்கு நாட்களாக நான் எடுத்துப் பேசவில்லை. மனம் அவ்வளவு காயப்பட்டிருந்தது. யார்தான் இளையராஜாவின் ரசிகனாக இருக்க மாட்டார்கள். நான் சிறு வயது முதலே அவருடைய ஆத்ம ரசிகன்.
அவருடைய ஒரு ரசிகன், இலக்கிய வாசகனாகி, திரைப்பட இயக்குநராகி, அவரது இசையில் படம் இயக்கும் வாய்ப்பு அமையும்போது அது என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான தருணம். ஆனால், இசைக்கோப்பு, பாடல் வரிகள் தேர்வு என எதற்கும் எனக்கு அழைப்பில்லை எனும்போது மனம் நொறுங்கிப்போனது.
எதிர்காலத்திலாவது அவருடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை அவர் எனக்குத் தரவேண்டும் என்கிற ஏக்கத்தை வலியுறுத்தவே என் மனக்காயத்தைத் திறந்து காட்டினேனே தவிர, ராஜா சார் மீது ஒரு புகாராகவோ குற்றச்சாட்டாகவோ நான் சொல்லவில்லை. இப்போது ராஜா சாரின் முழுப் பங்களிப்புக்குப் பிறகான முழுப் படத்தையும் பார்த்தபிறகு அவர் மீதிருந்த வருத்தமெல்லாம் பனியெனக் கரைந்துவிட்டது.