

புதிய திறமைகளை அறிமுகம் செய்து, தரமான பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் தொடர்ந்து முன்னணியில் இருந்துவருபவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். அவரது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கலையரசன், ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் எம்.ஜானகிராமன் எழுதி, இயக்கியிருக்கும் காதல் - நகைச்சுவைத் திரைப்படம் ‘டைட்டானிக்’. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
இயக்குநர் பாலாவிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு முழுநீள நகைச்சுவைப் படம் எடுத்திருக்கிறீர்களே..!
பாலா சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு உண்டு. அது அவ்வளவாக வெளியே தெரியாது. ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைக்காரர்களை வைத்து தரமான நகைச்சுவையைக் கொடுத்தார். அதேபோல், சுதா கொங்கராவும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
அவரிடமும் பணிபுரிந்திருக்கிறேன். கவுண்டமணி - செந்தில் தொடங்கி கிரேசி மோகன் வரை எல்லா ‘ஜானர்’ காமெடியையும் ஆழ்ந்து ரசிப்பேன். திரை நகைச்சுவை என்பது சிக்கல் நிறைந்ததாக இருக்கக் கூடாது. எளிதாகப் புரிந்துகொண்டு உடனுக்குடன் ரசிக்கும்விதமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்தப் படம்.
‘டைட்டானிக்’ என்கிற தலைப்பு என்ன சொல்ல வருகிறது?
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஒரு ரயில் பயணம். பயண நேரத்தை கடத்தவேண்டுமே என்று அருகருகே உட்கார்ந் திருக்கும் மூன்று ஆண்கள் ஒருவரை யொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்குகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய காதல் கதைகளை மனம்விட்டு பகிர்ந்துகொள்கிறார்கள்.
அந்தக் கதைகளில் காதல் என்ன பாடுபடுகிறது என்பதுதான் கதை. தலைப்புக்கும் கதைக்கும் நல்ல தொடர்பு உண்டு. அதாவது காதல் எல்லோரின் வாழ்விலும் கடந்து போகும். பலரது வாழ்வில் ‘கவிழ்ந்து’ம் போகும். கவிழ்தலில் கொட்டிக்கிடக்கும் அவல நகைச்சுவையை இன்னும் எளிமைப்படுத்தியிருக்கிறேன்.
கதையையும் கதாபாத்திரங்களையும் விட்டு விலகாத நகைச்சுவை வெடிகளாக அவை படம் முழுவதும் வெடித்துக்கொண்டே இருக்கும். படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
யாரெல்லாம் நடிகர்கள்?
கலையரசன் - ‘கயல்’ ஆனந்தி, ராகவ் விஜய் - ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் - ‘ஜாங்கிரி’ மதுமிதா ஆகிய மூன்று ஜோடிகள் காதலர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு சேத்தன் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். இயக்குநர் பாலாஜி மோகன், ‘விக்ரம்’ புகழ் காயத்ரி இருவரும் ’கெஸ்ட் ரோல்’களில் வந்து செல்கிறார்கள்.