

ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழ்ந்து வரும் 8 வயது மகன். ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சிலிண்டரை அவனிடமிருந்து ஒருவர் பிடுங்க முயலும்போது, அவனுடைய தாய் என்ன செய்தாள் என்கிற கதையுடன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது ‘ஓ2’. வரும் 17ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷுடன் உரையாடினோம்..
உங்களைப் பற்றி...
நான் சென்னைப் பையன். தாத்தா காலத்திலிருந்து வண்ணாரப்பேட்டையில்தான் வாசம். பள்ளி இறுதி வகுப்பு முடித்ததுமே சினிமா என்று முடிவு செய்தேன். அதனால், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் ‘விஸ்காம்’ படித்து முடித்தேன்.. எனது ஒரு குறும்படம் ஒன்றைப் பார்த்தபின் ‘என்னிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துகொள்.’ என்றார் இயக்குநர் வெங்கட் பிரபு சார். மிகப்பெரிய வாய்ப்பு அது. அவரிடம் ஒரு படம் வேலை செய்துவிட்டு சொந்தப் பட முயற்சியைத் தொடங்கினேன். 12 வருடத் தேடல், முயற்சிகளுக்குப்பின் இப்போது ‘ஓ2’ எனக்கான முதல் அடையாளம்.
படத்தின் கதையை வெளிப்படையாகச் சொல்லிவிட்டீர்கள்.. ‘சஸ்பென்ஸ்’ போய்விடும் என்று நினைக்கவில்லையா?
நிச்சயமாக இல்லை. திரைக்கதை, அதன் ‘ட்ரீட்மெண்ட்’, ‘மேக்கிங்’ இவைதான் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும். ஒரு அம்மா, தனது குழந்தையை எப்படிப்பட்டச் சூழ்நிலையிலும் காப்பாற்றுவாள். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பதுதான் சுவாரசியமே. அதுதான் இந்தப் படத்தின் பலம். ஒருவரிக் கதையைச் சொல்வது பார்வையாளர்களை ஈர்க்கும்.
நயன்தாரா இந்தக் கதையை எதற்காக ஒப்புக்கொண்டார்?
அவரிடம் கதையைச் சொல்லி முடித்தபின், ‘உங்களுக்குக் கதையில் பிடித்த விஷயம் என்ன?’ என்று கேட்டேன். ‘தாய்மை. இயற்கையாக நடக்கும் ஒரு சூழ்நிலையில் ஒரு சாமானியத் தாய் எப்படிக் கதாநாயகியாக மாறுகிறாள் என்பதைச் சொன்ன விதம்’ என்றார். இந்தக் கதைக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற இமேஜும் அவரது ஸ்டைலான நடிப்புத் திறனும் தேவைப்பட்டன. அது கிடைத்துவிட்டதாலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்ததாலும் இது பெரிய படமாகிவிட்டது.
தயாரிப்பாளர் தரப்புடன் ஒரு முதல் பட இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படியிருந்தது?
மிகவும் நெகிழ்ச்சியான அனுபவம். எஸ்.ஆர்.பிரபு சாராக இருக்கட்டும் அவருடைய குழுவினராக இருக்கட்டும், அந்த நிறுவனத்தின் ‘டீம் ஒர்க்’ என்னை பிரம்மிக்க வைத்துவிட்டது. எந்த மாதிரியான கதைகளை இன்றைய பார்வையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமாக நல்ல கதைகளை நம்புகிறார்கள். ‘புரோடக்ஷன் டிசைன்’ தொடங்கி, ஹாலிவுட் பாணியில் நேர்த்தியான தொழில்முறையைப் பின்பற்றுகிறார்கள். பல இடங்களில் மூச்சு முட்டக் கதை சொல்லிக்கொண்டிருந்த என்னிடம் ‘திரைக்கதையை டைப் செய்து புத்தகமாகக் கொண்டுவாருங்கள்' என்று கேட்டு வாங்கி அனைவரும் படித்தார்கள். அங்கு எனக்கு முதல் பட வாய்ப்பு அமைந்ததை அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன்.