

சலனப் படக் காலத்திலேயே நாயக நடிகராகப் புகழ்பெற்றார் இவர். பின்னர் பேசும் படங்கள் வந்த பின் ‘சிந்தாமணி’ என்கிற தமிழ் சினிமாவின் முதல் பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்தார். அந்தப் படத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள், செய்யும் தொழில் ரீதியாக ஒருவரை ஒடுக்குவது ஆகியவற்றுக்கு எதிராகப் புரட்சிகரமான காட்சிகளையும் வசனங்கள், பாடல்களை வைத்து தான் சார்ந்திருந்த சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார். அந்தப் படத்தின் நாயகன் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார். அன்று சினிமாவின் 24 கலைப் பிரிவுகளிலும் இவர் நுழைந்து வராத துறையே இல்லை. இவையெல்லாம் போதாதென்று சினிமா உலகத்தையே கதைக் களமாகக் கொண்ட திரைப்படத்தை தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக எடுத்தார்! அதுவும் எந்தக் காலத்தில் என்கிறீர்கள்?! எல்லோரும் புராணப் படங்களையும் தேசபிமானம் மிகுந்த படங்களையும் எடுத்துக்கொண்டிருந்தபோது ‘விஷ்வமோகினி’ என்கிற அந்தப் படத்தை எடுத்தார். அதுமட்டுமல்ல; தாமே எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்த படத்தில் (லவங்கி - 1946), தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியை காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். அந்த அதிரடிக்காரர், இன்று 119-வது பிறந்த நாள் காணும் ஒய்.வி. ராவ் என்று அழைக்கப்பட்ட எறகுடிப்பட்டி வரத ராவ்.
பிளாக் பஸ்டர்!
சென்னை, கோவை, சேலத்துக்கு இணையாக மதுரையும் தொடக்கக் கால தமிழ் சினிமா தயாரிப்புக்கு நிறையவே பங்களிப்பு செய்திருக்கிறது. மதுரையில் அப்படியொரு குறிப்பிடத்தக்க நிறுவனம், கல்கத்தா சென்று பிரம்மாண்டமான பேசும் படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வந்த ‘மதுரை ராயல் டாக்கீஸ் டிஸ்ரிப்யூட்டர்ஸ்’. பட விநியோகத்திலிருந்து தயாரிப்பில் நுழைந்த இந்த நிறுவனத்துக்காக ராவ் இயக்கி, அதில் வளரும் நடிகராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் என்கிற பாடகரை நாயகனாக நடிக்க வைத்து ‘சிந்தாமணி’ என்கிற மேகா வெற்றியைக் கொடுத்தார். 1937இல் வெளியான அப்படத்தில் கருணை உள்ளம் கொண்ட தாசி, சிந்தாமணியின் கதாபாத்திரத்தில் நடித்தார் மிகச்சிறந்த அழகுக்கும் குரலுக்கும் அந்நாளில் புகழ்பெற்றிருந்த பாடகி அஸ்வதாம்மா. மதுரையிலும் சென்னையிலும் ஓராண்டு காலம் ஓடி வசூலை வாரிக் கொட்டியது படம்.
‘சிந்தாமணி’ படத்தை மதுரையில் திரையிட்டிருந்த ‘சிட்டி’ தியேட்டர் உரிமையாளர்கள், படத்துக்கு கிடைத்த மிதமிஞ்சிய வசூல் தொகையைக் கொண்டு, அந்தப் படத்தின் பெயராலேயே ‘சிந்தாமணி’ என்கிற பிரம்மாண்டமான திரையரங்கைக் கட்டினார்கள். சிந்தாமணியின் வெற்றிக்குப்பின் எம்.கே.தியாகராஜ பாகவதரை எம்.கே.டி என்கிற மூன்று எழுத்துக்களால் அழைக்கத் தொடங்கினார்கள். ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி’ என்கிற பாடல் உட்பட, பாபநாசம் சிவன் இசையமைப்பில் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகின. கிராமபோன் இசைத்தட்டு விற்பனையிலும் ‘சிந்தாமணி’ சாதனை படைத்தது.
முதல் கன்னட பேசும் படம்
ஒய்.வி. ராவ் ‘சிந்தாமணி’யை இயக்கும் முன்பே திரையில் பல சாதனைகளைப் படைத்துவிட்டார்.1934-ல் வெளிவந்த கன்னட சினிமாவின் முதல் பேசும் படமான ‘சதி சுலோச்சனாவை’ இயக்கி சினிமா வரலாற்றில் தன் பெயரைப் பொன் எழுத்துகளால் பொறித்துக்கொண்டார். கோலாப்பூர் சத்ரபதி சினிடோன் என்ற ஸ்டுடியோவில் ஒரேநேரத்தில் 4 கேமராக்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தினார். ஒரு காட்சியை ஒன்றுக்கு மேற்பட்ட கேமராக்களைக் கொண்டு படமாக்கி, எட்டிங் மூலம் அந்தக் காட்சியின் பல கோணங்களைத் தொகுத்துக் காட்டி பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கமுடியும் என்று நினைத்து அதைச் சாதித்த முதல் இயக்குநரான ராவ், மிகச்சிறந்த எடிட்டரும் கூட.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள எறகுடிப்பட்டி என்ற கிராமத்தில் 1903ஆம் ஆண்டு வசதியான பிராமணக் குடும்பத்தில் மே 3-ஆம் தேதி பிறந்தார். நெல்லூர் பிரிட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற ராவ், பள்ளிப் படிப்பில் தேறியபின் 19 வயதில் வேலைதேடி வந்தது சென்னை ராஜதானிக்கு. நல்ல நிறமும் தோற்றமும் கொண்ட ராவை, அப்போது சென்னையில் வெளியாகி வந்த மௌனப்படங்கள் கவரவே, சினிமாவில் நடிக்க முதலில் நாடகங்களில் நடிக்க வேண்டும் என்பதை அறிந்து சில தெலுங்கு நாடகங்களில் பங்கேற்று நடித்தார். 1920களில் தொடங்கி மௌனப் படங்களை தனித்தனியாகவும் இணைந்தும் தயாரித்து வந்த ஆர்.பிரகாஷ், ஏ.நாராயணன் ஆகிய தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது படங்களில் கிருஷ்ணர் வேடம் ஏற்றார். அதன்பின் படிப்படியாக முன்னேறி ஏ.நாராயணன் இயக்கி 1930-இல் வெளியான ‘கருட கர்வ பங்கம்’ என்கிற சலனப் படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.
நடிப்புடன் இயக்கம்
படத் தயாரிப்பு, திரையரங்க நிர்வாகம், படவிநியோகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சிவகங்கை ஏ. நாராயணன், ஹாலிவுட், லண்டன் ஆகிய நகரங்களுக்கு நேரில் சென்று சினிமாவின் அடிப்படைகளை முறையாகக் கற்றுத் திரும்பிப்பின் படங்களை இயக்கிய ரகுபதி பிரகாஷ் ஆகிய இரு ஆளுமைகளின் தயாரிப்பு இயக்கத்தில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தது ராவின் அதிர்ஷ்டம். சினிமா நுட்பங்கள் அனைத்தையும் இவர்களிடம் அறிந்துகொண்டார். அதனால் சினிமா இயக்கத்திலும் ஆர்வம் கொண்டு, தாமே கதாநாயகனாக நடித்து படங்களை இயக்கத் தொடங்கினார்.
இப்படி ராவ், இயக்கி நடித்த முதல் மௌனப் படம் 1931இல் வெளிவந்த ‘போஜராஜன்’. அதன்பின் ‘பாண்டவ நிர்வாணம்’, ‘பாண்டவ அஞ்ஞாத வாசம்’, ‘ஹரிமாயா’ ஆகிய படங்களைத் நடித்து, இயக்கினார். மௌனப் பட யுகத்தில் தன்னுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த ராஜம் என்கிற நடிகையை மணம் புரிந்துகொண்ட ஒய்.வி.ராவ், மனைவியுடன் இணைந்தும் பல படங்களில் நடித்தார்.
சினிமாவைப் பற்றி ஒரு சினிமா
பம்பாய் மௌனப்பட உலகமும் ராவின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டது. என்றாலும் சினிமா பேசத் தொடங்கிபின் ராவ், மேலும் ஆளுமை மிக்க இயக்குநராகத் தன்னை அடையாளம் காட்டியது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில்தான். திரைக்கலைப் பேசத்தொடங்கிய பின்னரும் மௌனப்பட காலத்தின் தொடர்ச்சியாகக் கடவுளர், ராஜா ராணிக் கதைகளையே கட்டிக்கொண்டு அழுதது இவருக்குப் பிடிக்கவில்லை. புராணங்களை நம்பியிருந்த இந்தப் போக்கை அடியோடு மாற்ற நினைத்த ஒய்.வி.ராவ், திரை உலகையே கதைக் களமாக்கி ‘விஷ்வமோகினி’ என்கிற தெலுங்குப் படத்தை இயக்கி வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். கதை விவாதம் தொடங்கி, நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பில் நடிக்கும் நிகழ்வுகள் வரை ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்ற சினிமாவின் பின்னணி ரகசியங்களை இந்தப் படத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கிய ராவ், சினிமா பற்றிய முதல் தென்னிந்திய சினிமாவைத் தந்த பெருமைக்குரியவர்.
ஆண் நடிகர்கள் மட்டுமே நாரதர் வேடம் போட்டுவந்த சினிமாவில், தாம் இயக்கிய ‘சாவித்ரி’ (1941) என்கிற படத்தில் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை நாரதராகக் கதாபாத்திரம் ஏற்க வைத்தார். அதேபோல் மராத்தி, இந்திப் படங்களில் புகழ்பெற்றிருந்த வடஇந்திய கதாநாயகியான சாந்தா ஆப்தேவை இந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கினார். ஏவி.எம்மின் ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் கதாநாயகியாக உயர்ந்த குமாரி ருக்மணியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ராவ். இவர்களது மகள்தான் நடிகை லட்சுமி.
நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், எடிட்டர், தயாரிப்பாளர், பட விநியோகஸ்தர் எனத் தனது பன்முகத் திறமைகளால் தென்னிந்திய சினிமாவுக்கு வலிமை சேர்த்த ஒய்.வி. ராவ் 1973இல் மறைந்தார். அவரது படைப்பாளுமையைப் பறைசாற்ற ‘சிந்தாமணி’ என்கிற ஒரு படம் போதும்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்