

நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களாக இருக்கும் பலருடைய சிறுகதைகள், நாவல்கள், படமாகியிருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட படைப்புகளின் திரைப்பட உருவாக்கத்தில் அதை எழுதிய படைப்பாளிகள் அவ்வளவாகப் பங்கெடுப்பதில்லை. அந்த நிலை மெல்ல மாறிக்கொண்டு வருகிறது என்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘சேத்துமான்’ திரைப்படத்தை முன்வைத்துக் கூறலாம். ‘வறுகறி’ என்கிற பெருமாள் முருகனின் சிறுகதைதான் ‘சேத்துமான்’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனே ‘கதை - வசனம்’ எழுதியிருக்கிறார். ‘சேதுமான்’ படத்துக்கு அவர் எழுத முன் வந்தது ஏன்? என்பது குறித்து விரிவாக, மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார். இனி பெருமாள் முருகன் பேசுவதைக் கேட்போம்:
“தமிழில் 35 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் நூலான ‘ஏறுவெயில்’ 1991-ல் வெளிவந்தது. அதை வாசித்த பின் பாலுமகேந்திரா என்னை அழைத்து ‘அதைப் படமாக எடுக்கப்போகிறேன்’ என்று சொன்னார். ஆனால், அது நடக்கவில்லை. அதைப் போல கடந்த 35 ஆண்டுகளில் பல இயக்குநர்கள் என்னைச் சந்தித்து ‘உங்கள் சிறுகதையை, நாவலைப் படமாக எடுக்கவிருக்கிறோம்’ என்று பேசுவார்கள். ஆனால், ஒன்றும் நடந்ததில்லை. அதேபோல், எனக்கு ரூம் போட்டுக் கொடுத்துக் கையோடு எழுதி வாங்கிக்கொண்டு போன பல உதவி இயக்குநர்களும் உண்டு. அப்படியும் எதுவும் படமாகவில்லை. அப்போது உணர்ந்தேன். திரைப்படத் துறையில் இப்படியெல்லாம் இருக்கும் போலிருக்கிறது. நாம் இவ்வளவு உழைப்பைக் கொடுத்து எந்தப் பயனுமில்லாமல்போகிறது என்கிற எண்ணத்தில் இருந்தேன்.
அப்போதுதான் ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர் தமிழ் என்னைப் பார்க்க வந்தார். ‘இவ்வளவு காலம் உதவி இயக்குநராக இருந்தேன். இப்போது தனியாகப் படம் பண்ணப்போகிறேன். உங்களுடைய ‘வறுகறி’ சிறுகதையைப் படமாக்க விரும்புகிறேன்’ என்றார். ‘வறுகறி’ கதையை 2012-ல் எழுதினேன். ‘காலச்சுவடு’ இதழில் பிரசுரமானது. ஆனால், இயக்குநர் தமிழ் மீது எனக்கு தொடக்கத்தில் நம்பிக்கை வரவில்லை. இதற்குமுன் வந்தவர்களைப் போல்தான் இவரும் இருப்பார், பேசி அனுப்பிவிடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், இயக்குநர் தமிழ், ‘இந்தப் படத்துக்கு கதை - வசனம் நீங்கள்தான் எழுத வேண்டும். படத்திலும் கதை - வசனம் என்று உங்களுடைய பெயர்தான் வரும்’ என்று சொன்னார். இதுவரை என்னை வந்து பார்த்துப் பேசியவர்கள், இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதில்லை. அதிலேயே எனக்கு அவர் மீது நம்பிக்கை வந்தது.
அடுத்து இயக்குநர் தமிழ் எனக்குச் சொன்னது, ‘இந்தச் சிறுகதையை நான் எப்படி உள்வாங்கியிருக்கிறேன் என்பதைச் சொல்கிறேன். அது சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சொன்னார். எனக்கு நம்பிக்கை மேலும் வலுத்தது. அடுத்து சில முக்கியமான வசனங்களையும் விவரிப்புகளையும் காட்சிகளாக மாற்றலாம் என்றார். நான் கதையின் மையம் கலைந்துவிடக் கூடாதே என்று கவலைபட்டேன். நான் சொல்லாமலேயே எனது மனதைப் புரிந்துகொண்டு ‘கதையின் மையத்தை ஒருபோதும் மாற்றமாட்டேன்’ என்றார். எனக்கு நிம்மதியாக இருந்தது. பிறகு நான் அவர் எழுதிய ஒருவரிக் கதைக்கு காட்சிகளை எழுதிக் கொடுத்தேன். அவற்றில் நிறைய வசனங்களைக் குறைத்துக்கொண்டார். இப்போது இன்னும் அவர் மீது நம்பிக்கை அதிகரித்தது.
எல்லாம் சரி! படத்துக்குத் தயாரிப்பாளர் இருக்கிறாரா? என்று கேட்டபோது ‘தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்காக என் வீட்டில் 5 லட்சம் கொடுப்பார்கள். நண்பர்களிடமிருந்து 5 லட்சம் திரட்டிக் கொள்ளலாம். ரூபாய் 10 லட்சத்துக்குள் முழுப் படத்தையும் எடுத்துவிடுவேன்’ என்றார். அப்போது எனக்கு அவர் மேல் 100 சதவீதம் நம்பிக்கை வந்துவிட்டது.
இதன் பிறகு ‘நம்மிடம் திரைக்கதை தயாராக இருக்கிறது. இப்போதுதான் தயாரிப்பாளர்களிடம் திரைக்கதையைப் படிக்கக் கொடுக்க முடியும். முதலில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் திரைக்கதையைக் கொடுக்க இருக்கிறேன்’ என்றார். ரஞ்சித் சமகால அரசியல் புரிதலுடன் படங்களை எடுக்கக் கூடியவர். என்றாலும் ‘சேத்துமான்’ திரைக்கதையை எப்படி உள்வாங்கிக்கொள்வார் என்கிற சந்தேகம் இருந்தது. அதேநேரம், ‘மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசிய இரஞ்சித், ‘நான் ஒரு நாவலைப் படமாக எடுக்க இருப்பதாக இருந்தால், பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’யை எடுக்க விரும்புகிறேன்’ என்று பேசியிருக்கிறார் என்று என்னுடைய நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள். அப்படியானால், இந்தக் கதையும் அவருக்குப் பிடிக்கும் என்று நம்பினேன். அதேபோல் அவரிடம் கொடுத்து, அவரும் படித்து முடித்து, தயாரிக்க ஒப்புக்கொண்ட செய்தியை தமிழ் எனக்குத் தெரியப்படுத்தினார். இதன் பிறகு எனக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவில்லை.
படப்பிடிப்பு முழுவதும் எங்களுடைய ஊரான நாமக்கல் மாவட்டத்தில்தான். படத்துக்கான லோக்கேஷன் பார்த்துக்கொடுப்பதில் எனது மாணவர்கள் இயக்குநர் தமிழுக்கு உதவினார்கள். படபிடிப்பைப் பார்க்க நான் ஒருநாள்கூடப் போகவில்லை. என்னை வற்புறுத்திக் கூப்பிட்டுக்கொண்டேதான் இருந்தார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் காட்சிகளை எடுப்பதைப் பார்க்கும்போது இது சரியாக வருமா, இல்லையா என்கிற எண்ணம் எனக்குத் தோன்றலாம். அதை எதிர்கொள்ளவேண்டாம். இயக்குநரைச் சுதந்திரமாக விட்டுவிடலாம் என்று முடிவுசெய்தே போகவில்லை.
பிறகு படம் முடிந்து ‘எடிட்டிங்’கில் இருந்தபோது காட்சிகளைப் பார்த்தேன். உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ‘ஸ்டார் வேல்யூ’ இல்லாத நடிகர்களைக் கொண்டு, அதுவும் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான ஒரு கதையை இவ்வளவு உணர்வுபூர்வமாகப் பண்ணமுடியும் என்று தமிழ் காட்டிவிட்டார்.
கதை நடக்கும் அந்தப் பகுதியுனுடைய இசை, அந்தப் பகுதியினுடைய சத்தம், பன்றியினுடைய உறுமல் எந்தெந்த இடங்களில் எப்படியிருக்கும்? அதாவது அதைப் பிடிக்கும்போது, கால்களைக் கட்டும்போது, அதை வதைக்கும்போதெல்லாம் பன்றியின் கத்தலைப் படம், நேர்த்தி, யதார்த்தத்துடன் கொண்டுவந்திருக்கிறது.
கதையில் இயக்குநர் தமிழ் செய்த மாற்றங்கள் என்றால், நான் கதையை 80-களில் நடப்பாதாக எழுதியிருந்தேன். ஆனால், சமகாலக் கதையாக 2016-ல் நடப்பதுபோல் சித்தரிக்கையில் சின்ன சின்ன விஷயங்களை மாற்ற வேண்டியிருந்தது.
எனது எழுத்துப் பாணி என்பது அரசியலான விஷயங்களை வெளிப்படையாக எழுதாமல் உள்ளார்ந்து வைத்துவிடுவது. படத்திலும் இயக்குநர் தமிழ் அதே பாணியைப் பின்பற்றியிருக்கிறார். இதனால் ‘சேத்துமான்’ ஓர் அசலான படைப்பாகத் தன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறது” என்றார்.