

மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து, மூன்றுமே படுதோல்வி அடைந்திருந்த நிலையில், நான்காவது படத்தைப் பார்த்த ரசிக மகா ஜனங்கள் அவரைக் ‘கனவுக் கன்னி’ என்றார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தபோது அவர் நடித்திருந்த படங்களின் எண்ணிக்கை வெறும் 17 மட்டும்தான். ஆனால், 100 படங்களில் நடித்துவிட்ட உச்ச நட்சத்திரம்போல் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். இவர் நடிக்க வந்தபிறகுதான் ‘கதாநாயகிகளுக்கு ‘செக்ஸ் அப்பீல்’ அவசியமா? அநாவசியமா?’ என்று கேட்டு பிரபல சினிமா பத்திரிகையொன்று தன் வாசகர்களிடம் விவாதம் நடத்தியது.
இன்னும் சில சினிமா இதழ்கள், அவரைக் ‘காந்தக் கண்ணழகி’, ‘தந்த பொம்மை’, ‘ஆடும் குயில் பாடும் மயில்’ என்றெல்லாம் வருணித்து அவருடைய ஒளிப்படங்களை அச்சிட்டு வெளியிட்டன. இத்தனை சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்த உச்ச நட்சத்திரம், தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி என்று மெச்சப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி. மே 5ஆம் தேதி 1922இல்தஞ்சாவூரில் பிறந்தவர். அவருடைய நூற்றாண்டை கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இவருடைய பாட்டி அந்நாளில் பிரபலமான கர்னாடக இசைப் பாடகியாக வலம் வந்த ‘தஞ்சை குசலாம்பாள்’. அவருடைய இரண்டாவது மகளான ரங்கநாயகியின் மகள்தான் ராஜகுமாரி. இவர் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே இவருடைய ஒன்றுவிட்ட சகோதரிகளான எஸ்.பி.எல்.தனலட்சுமி, டி.எஸ். தமயந்தி ஆகியோர் சினிமாவில் நடித்துப் பெயர் பெற்றிருந்தார்கள்.
ராஜகுமாரி முதன் முதலில் நடித்து வெளியான தமிழ்ப் படம் ‘குமார குலோத்துங்கன்’ (1939). இரண்டாவது படம் ‘மந்தாரவதி’. இந்தப் படத்தை இயக்கி வந்த இத்தாலியரான மார்கோனி போர்க் கைதியாகி சிறைக்குச் சென்றுவிட, எஞ்சிய படத்தை பாபுலால் என்பவர் இயக்கினார். மூன்றாவது படம் ‘சூர்யபுத்திரி’. முதல் மூன்று படங்களும் படுதோல்வி அடைந்திருந்த நிலையில், ராஜகுமாரியை திரையில் எவ்வாறு காட்டினால் ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்ப்பார்கள் என்கிற சூட்சுமம் இயக்குநர் கே.சுப்ரமணியத்துக்கு தெரிந்திருந்தது. அவர் ராஜகுமாரியைத் ‘தேவயானி’யாக வார்த்து எடுத்தார். 1941இல் வெளியான ‘கச்சதேவயானி’ ரசிகர்களுக்குப் பைத்தியம் பிடிக்க வைத்தது.
கச்சனுடன் விழுந்த ரசிகர்கள்!
‘குளிர் பசுஞ்சோலை…ஆனந்த நீரோடை..பார்க்கப் பார்க்கத் திகட்டுவதில்லை..’ என்று வி. எஸ். பார்த்தசாரதி இசையில் பாபநாசம் சிவனின் தமிழைப் பாடிக்கொண்டேதான் அறிமுகக் காட்சியில் தோன்றினார் ராஜகுமாரி. குரல் வளம் சுமாராக இருந்தாலும் பாட்டி, அம்மாவிடம் கற்ற சங்கீதம் அவருக்குக் கைகொடுத்தது. அதைவிட, ஒப்பிட முடியாத அவரின் தோற்ற வசீகரம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. ‘குளிர் பசுஞ்சோலை’ பாடலில் சித்தரிக்கப்பட்ட இயற்கையின் அழகு, அப்படியே ராஜகுமாரியின் தோற்றத்துக்கும் சிலேடை அர்த்தம் கொடுத்த சந்தோஷத்தில் திளைத்தார்கள் படம் பார்த்த ரசிகர்கள்.
‘கச்சதேவயானி’ படத்தில், அசுர குரு சுக்ராச்சாரியாரிடமிருந்து போரில் இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மந்திரத்தைக் கற்றுக்கொள்ள பூலோகம் வருகிறான் தேவகுருவின் மகனாகிய கச்சன். வந்த வேலையை மறந்துவிட்டு, அசுர குருவின் மகளாகிய தேவயானியை நந்தவனத்தில் கண்டு, அவளது அழகில் விழுகிறான். கச்சனோடு சேர்ந்து ரசிகர்களும் விழுந்தார்கள். பத்து, இருபது முறை என்று ராஜகுமாரியைக் காண்பதற்காகவே திரும்பத் திரும்ப படத்தைப் பார்த்தார்கள்.
மாஸ் ஹீரோக்களின் நாயகி
15 வாரங்கள் ஓடிப் படம் வெற்றிபெற்றது. இந்த ஒரு படத்தின் வெற்றி டி.ஆர்.ராஜகுமாரியை நட்சத்திரமாக்கியது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் ‘சதி சுகன்யா’, ‘மனோன்மணி’ என இரண்டு படங்களுக்கு ராஜகுமாரியை ஒப்பந்தம் செய்துகொண்டது. ‘கச்சதேவயானி’யில் கொத்தமங்கலம் சீனு கதாநாயகன் என்றால், ‘சதி சுகன்யா’வில் ஹொன்னப்ப பாகவதர். ‘மனோன்மணி’யிலோ பி.யு.சின்னப்பா.
‘மனோன்மணி’யை இயக்கியவர் மாடர்ன் தியேட்டர் அதிபரான டி.ஆர். சுந்தரம். அதில் சேரமான் புருஷோத்தமனின் கனவில் வரும் பாண்டிய நாட்டு ‘மனோன்மணி’யாக நடித்தார் ராஜகுமாரி. சேரமானாக நடித்தவர் பி.யு.சின்னப்பா. ‘உன்றனுக்கோர் இணையாவர் உலகில் இல்லை’ எனத் தொடங்கும் ராஜகுமாரி பாடிய டூயட் பாடலில், சின்னப்பாவின் கனவில் ராஜகுமாரி வருவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ‘மனோன்மணி’க்குப் பிறகு ரசிகர்களின் கனவிலும் வரத் தொடங்கினார் ராஜகுமாரி. பின்னர், 1943இல் வெளியான ‘சிவகவி’யில் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஜோடியாக நடித்து மாஸ் ஹீரோக்களின் கதாநாயகியாக உயர்ந்தார். பாடல், நடனம், நடிப்பு என மூன்றிலும் சோபித்தார். எம்.கே.டிக்கு ராசியான கதாநாயகி என்று பெயர் பெற்றார்.
புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்தபோது எந்தக் கதாநாயகியும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அப்படத்தில் ‘ரம்பா’ என்ற விலைமாதுவின் வேடத்தில் நடித்தார். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ…?’ என்று பாகவதர் பாட… பாகவதர் மீது மன்மத பானம் தொடுத்தபடியே அறிமுகமாகி ஆடத் தொடங்குவார் ராஜகுமாரி. பாடலின் சரணத்தில, ‘நிம்மதி வதனமும் நீள்விழியும் கண்டு. என்மதி மயங்கினேன்’ என்று ராஜகுமாரியின் அழகை வருணித்து பாகவதர் பாடி நிறுத்த, உடன் ‘சுவாமி..!’ என்று பாகவதரைக் கிறக்கமாக அழைப்பார் ராஜகுமாரி. அப்போது ராஜகுமாரிக்கு ஒரு குளோஸ் அப் ஷாட் வைக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்த்த ரசிகர்கள், ராஜகுமாரி தங்களையே ‘சுவாமி...’ என்று அழைத்ததாக நினைத்து உருகிப்போனார்கள். ராஜகுமாரியின் அகலமான விரிந்த கண்களும் தோற்றமும் ரசிகர்களைச் சுண்டி இழுத்தன. ‘கண்களையும் புருவத்தையும் நன்றாகப் பயன்படுத்தி நடிக்கத் தெரிந்த நடிகை’ என்று ‘ஹரிதாஸ்’ படத்துக்கான விமர்சனத்தில் பாராட்டப்பட்டார். அந்தப் படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.
‘சந்திரலேகா’ எனும் சாதனையில்…
இதன்பிறகு ‘விகடயோகி’ உட்பட குறிப்பிடத்தக்க பல வெற்றிப் படங்களில் நடித்தாலும் டி.ஆர்.ராஜகுமாரியின் திரை வாழ்க்கையில் ‘சந்திரலேகா’ அழியாச் சரித்திரமானது. அதில் அவர், சர்க்கஸ் காட்சிகளில் வரும் பார் விளையாட்டில் துணிச்சலாக நடித்ததும் படத்தில் இடம்பெற்ற ஜிப்சி நடனம், முரசு நடனக் காட்சிகளில் ஆடிய அதிரடி ஆட்டமும் அதை ராஜகுமாரியின் படமாக மாற்றியிருந்தன. ராஜாகுமரியின் பெயரையே டைட்டிலில் முதலில் போட்டார் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசன். இந்திப் பதிப்புக்காக பல காட்சிகள் எடுத்துச் சேர்க்கப்பட்டு வெளியான ‘சந்திரலேகா’, ‘ சந்திரா’ என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டு வெளிநாடுகளில் வெளியாகி ராஜகுமாரிக்கு அழியாப் புகழைக் கொண்டுவந்தது.
திரையில் ஈட்டிய செல்வத்தைப் படங்கள் தயாரித்தும், திரையரங்கு கட்டியும் செலவிட்ட டி.ஆர். ராஜகுமாரி, 15 ஆண்டுகள் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துச் சாதனை படைத்தார். தாய் மாமன்கள் உள்ளிட்ட பலருக்கும் தன்னுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைத்து, வீடு கட்டிக்கொடுத்து உறவினர்கள் அனைவரையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட ராஜகுமாரி இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரர் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா குடும்பத்துடன் வாழ்ந்து தனது 77ஆவது வயதில் மறைந்தார். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் ’கூண்டுக் கிளி’ படத்தில் இணைந்து நடிக்க வைத்து படம் தயாரித்த பெருமைக்குரிய டி.ஆர்.ராஜகுமாரி, தனக்கென வாழாத தாரகை!
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in