சி.ஆர்.சுப்பராமன் | 17 வயதில் இசையமைப்பாளர் ஆனவர்!

சி.ஆர்.சுப்பராமன் | 17 வயதில் இசையமைப்பாளர் ஆனவர்!
Updated on
3 min read

தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீக்‌ஷிதர் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேபோல், தமிழ் இசையின் மும்மூர்த்திகள் என்று முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். மூன்றாவதாக இவ்விரு பாரம்பரிய இசை வடிவங்களின் தாக்கத்துடன் வெகு மக்களின் மனதில் இடம் பிடித்த எழுபதுகள் வரையிலான திரையிசையிலும் மும்மூர்த்திகள் உண்டு! எஸ்.வி.வெங்கட் ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய மூவரும்தான் அவர்கள்.

இந்த மூவரில் சி.ஆர்.சுப்பராமன் இளம் வயதிலேயே, அதாவது 19 வயதில் தொடங்கி 28 வயதுக்குள் இந்த அந்தஸ்தைத் தன்னுடைய இசைத் திறமையால் பெற்ற ஒரே கம்போஸர் இவர் மட்டும்தான். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஒரு குருவாகவும் இருந்து, தனக்குப் பிறகு தன் பெயரைச் சொல்ல மாணவர் பரம்பரையை உருவாக்கியவர் சி.ஆர்.எஸ். அவ்வளவு ஏன்! திரையிசையை ‘மெல்லிசை’ என்று ரசிகர்கள் வகைமைப்படுத்தி அழைக்கக் காரணமாக அமைந்துவிட்ட ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்கிற வெற்றிகரமான இசையமைப்பாளர் இணையை உருவாக்கிய அவர்களுடைய குரு சி.ஆர்.எஸ்.தான்.

‘கிரியேட்டிவ் ஜீனியஸ்’

‘நீல வண்ணக் கண்ணா வாடா’ என்று குழைந்து உருகியழைத்த இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி தொடங்கி, ஜி.கே.வெங்கடேஷ், டி.ஜி.லிங்கப்பா, கோவர்த்தனம், மாண்டலின் ராஜு ஆகியோர் இவரது மாணாக்கர்கள்தான்.

இன்னொரு பக்கம், கண்டசாலா, பி.லீலா போன்ற புகழ்பெற்றப் பாடகர்களை உருவாக்கியவர். “சி.ஆர்.எஸ் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ்” என்று பாராட்டியிருக்கிறார் பன்முகத் திறமைகள் கொண்ட அந்நாள் கதாநாயகியான பி.பானுமதி. “அவருடைய திறமை அளவிட முடியாதது! பாடலுக்குரிய சூழ்நிலையைச் சொல்லிவிட்டால் போதும். சில நிமிடங்களில் மனதைக் கொள்ளைகொள்ளும் ட்யூன்களைக் கொட்டுவார். தெலுங்கு சினிமாவில் நானும் கண்டசாலாவும் இணைந்து பாடாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, எனக்குப் பெரும்புகழைக் கொண்டுவந்து சேர்த்த பாடல்கள் அத்தனையும் சி.ஆர்.எஸ். அண்ணாவுடயவை. கோரஸ் பாட வைத்து, பின்னர் நான் பயம் விலகி அனுபவம் பெற்றதும் பாடகியாக்கி புகழின் உச்சத்துக்குக் கொண்டுவந்து வளர்த்தெடுத்தவர் அவர்தான். அதனால்தான் அவரை என்னைப்போன்றவர்கள் குரு என்கிறோம்” என்று வியந்தும் நெகிழ்ந்தும் கூறியிருக்கிறார் காலம் சென்ற பாடகியான பி.லீலா.

நெல்லைச் சீமையின் மைந்தர்

திருநெல்வேலிச் சீமையில் உள்ள சிந்தாமணி என்கிற சின்னஞ்சிறு கிராமத்தில் வசித்துவந்த ராமசாமி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பராமன். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் சுப்பராமனின் மூதாதையர்கள். இவருடைய இளைய சகோதரர் தான் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர் (கணேஷ்). சிறு வயதிலேயே சுப்பராமனுக்கு இசையில் ஈடுபாடு இருந்ததால், கும்பகோணம் நாகராஜ ராவிடம் கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார் அப்பா. காலையில் கற்றுகொண்ட வர்ணத்தை அன்று மாலைக்குள்ளாக ஸ்ருதிசுத்தமும் ஸ்வரசுத்தமும் குறையாமல் பாடி குருவிடம் பாராட்டுப் பெற்றுவிடுவார். திறம்படச் சங்கீதம் கற்றுத் தேர்ந்ததும் மிருதங்கம் கற்றுகொள்ள விரும்புவதாக தெரிவித்தார் சிறுவனாக இருந்த சுப்பராமன். அதனால், காக்கோட்டை ரங்கு அய்யர் என்பவரிடம் மிருதங்கமும் கற்றுத் தேர்ந்தார். அப்படியும் சுப்பராமனின் இசைத் தாகம் அடங்கவில்லை. 14 வயதுக்குள் ஆர்மோனியத்தைக் கற்றுத் தேர்ந்துவிட்டார்.

ஹெச்.எம்.வி. தன்னுடைய கிராமபோன் இசைத்தட்டுகளுக்காக புகழ்பெற்றிருந்த காலம். தனக்கென்று தனியே ஒரு வாத்திய இசைக்குழுவை சின்னையா என்பவர் தலைமையில் நிரந்தரமாக வைத்திருந்தது. அக்குழுவில் தன்னுடைய பதினாறாவது வயதில் சுப்பராமன் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்றால் அவர் எத்தனை திறமையாக ஆர்மோனியம் வாசித்திருப்பார். மகன் ஹெச்.எம்.வி. இசைக்குழுவில் சேர்ந்தபிறகு, சென்னையின் மயிலாப்பூருக்கு குடியேறியது சுப்பராமனின் குடும்பம். ஹெச்.எம்.வியில் பணிபுரிந்துகொண்டே ஆங்கிலோ இந்தியக் கலைஞர் ஒருவரிடம் பியானோ இசைக்கக் கற்றுக்கொண்டதுடன் மேற்கத்திய கிளாசிக்கல் இசையின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார்.

முதல் வாய்ப்பும் சாதனைகளும்

சுப்பராமனின் தேடலும் இசை மீதான காதலும் அவரை வெகு சீக்கிரமாகவே ஹெச்.எம்.வி. இசைக்குழுவின் துணை இசையமைப்பாளராக உயர்த்தின. திரையிசைக்கும் ஹெச்.எம்.வி. இசைக்குழு வாசித்து வந்த நிலையில், தமிழ்நாடு டாக்கீஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ‘செஞ்சு லட்சுமி’ என்கிற தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு 17 வயதில் தேடி வந்தது. தொடக்கத்தில் சற்று தயங்கினாலும் அந்தப் படத்தின் வசன கர்த்தாவும் பாடலாசிரியருமான சமுத்ரால ராகவாச்சார்யா பாடல்கள் இடம்பெறும் சூழ்நிலைகளை விளக்கி வரிகளைக் கொடுக்க, எழுத்தப்பட்ட வரிகளுக்கு அற்புதமான ட்யூன்களைக் கொடுத்து திரையுலகில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்தார். அறிமுகப் படம் அமோக வெற்றிபெற்றது.

‘செஞ்சு லட்சுமி’ படத்துக்கு இசையமைத்தபோது லத்தீன் அமெரிக்க இசை வடிவங்களை, கர்னாடக இசையுடன் சிறந்த முறையில் இணைத்துப் பாராட்டுகளைப் பெற்றார். இதன்பின்னர் ஹெச்.எம்.வியின் தலைமை இசையமைப்பாளராக உயர்ந்த சுப்பராமனின் இசையில் வெளியான ரெக்கார்டுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைக்க, ‘ஹரிதாஸ்’ வெற்றியடைந்து புகழின் உச்சியில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்துகொண்டிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடிக்கும் ‘உதயணன்’ என்கிற தமிழ்ப் படத்துக்கு இசையமைப்பாளராக அமர்த்தப்பாட்டபோது சி.ஆர்.எஸ்ஸுக்கு வயது 21. ‘லட்சுமி காந்தன் கொலை’ வழக்கில் பாகவதர் கைதாகிச் சிறைக்குச் சென்றதால், அந்த வாய்ப்புக் கைநழுவிப் போனாலும் தன் திறமை மீது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை கொண்டிருந்தார் சுப்பராமன்.

அந்த நம்பிகை வீணாகிவிடவில்லை. 1947-ல் சொந்தப் பட நிறுவனம் தொடங்கி, தன்னுடைய முதல் தயாரிப்பாக ‘ரத்ன மாலா’ என்கிற தெலுங்குப் படத்தை தயாரித்து நடித்த பி.பானுமதி, சி.ஆர்.சுப்பராமனை இசையமைப்பாளராக அமர்த்தினார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுப்பராமனின் திரையிசைப் பயணம் எங்கும் நிற்கவேயில்லை. தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழித் திரைப்படங்களுக்கு அமரத்துவம் மிகுந்த பாடல்களை கர்னாடக சங்கீதத்தில் தோய்த்துக் கொடுத்தார். நாகேஸ்வ ராவ் - சாவித்திரி நடித்த அமர காவியமான ‘தேவதாஸ்’ படத்துக்கு சுப்பராமன் கொடுத்த பாடல்களில் 'கனவிதுதான் நிஜமிதுதான்.. உலகினிலே என யார் சொல்லுவார்..விதி யார் வெல்லுவார்..', ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்…’ ஆகிய பாடல்களைக் கேட்கும் இன்றைய தலைமுறை ரசிகர்கள், ‘இந்தப் பாடல்களின் கம்போஸர் யார்?’ எனக் கேட்பார்கள்.

என்னதான் சாஸ்த்ரீய சுத்தமாக இசையமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு திரையிசைப் பாடல், கர்னாடகச் சங்கீதக் கச்சேரி மேடைகளில் பாடப்படுவதில்லை. ஆனால், இன்றைக்கும் இந்த ஒரு பாடலுக்கு அந்த மேடைகளில் விதிவிலக்கும் அரங்கம் அதிரும் கை தட்டல்களும் உண்டு. அந்தப் பாடல், எம்.எல். வசந்தகுமாரியும் பி.என்.சுந்தரமும் இணைந்து பாடி, ‘மணமகள்’ படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியார் இயற்றிய ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ . அந்தப் பாடலுக்கு இசையமைத்த பிறவி மேதை நம்முடைய சி.ஆர்.சுப்பராமன் தான். மே 18-ம் தேதியான இன்று, சி.ஆர்.சுப்பராமனுடைய 98-வது பிறந்த நாள். அவரது நூற்றாண்டு நெருங்கிவிட்டது. கொண்டாடத் தயாராவோம்.

குறிப்பு: பி.ஜி.எஸ். மணியன் எழுதிய ‘திரை இசை மும்மூர்த்திகள்’ என்கிற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் இக்கட்டுரைக்கு ஊசாத்துணையாக உதவின.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in