

சாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றுடன், பிறந்த இடத்தையும் காரணம் காட்டி யார் மீதும் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-வது பிரிவு தடை செய்கிறது. ஆனால், 75 ஆண்டு கால சுதந்திர இந்தியா, இந்த விஷயத்தில் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டியது, கடந்த 2019-ல் வெளியான ‘ஆர்டிகிள் 15’ என்கிற இந்திப் படம்.
அந்தப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தை ‘கனா’ படப் புகழ் அருண்ராஜா காமராஜ் இயக்க, நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். ‘நெஞ்சுக்கு நீதி’ என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் படம் குறித்து நம்முடன் உரையாடினார் இயக்குநர். அதிலிருந்து ஒரு பகுதி..
‘ஆர்டிகிள் 15’ என்கிற தலைப்புக்கு, ‘நெஞ்சுக்கு நீதி’ எந்த விதத்தில் ஈடான தலைப்பு?
இது சமூக நீதியைப் பேசுகிற படம். ஒவ்வொரு தனிமனிதனுடைய மனதுக்கும் என்று ஒரு நியாயம் இருக்கும். ஒருவருக்கு ஏற்புடைய ஒன்றை இன்னொருவர் புறக்கணிக்கலாம். ஆனால், சட்டம் என்பது எல்லோருக்கும் பொது. சட்டத்துக்கு முன் எதுவெல்லாம் சமமோ அதைத் தான் மனதும் ஏற்கவேண்டும். அதுதான் நெஞ்சுக்கு நீதியாக இருக்க முடியும். கலைஞர் மு.கருணாநிதியுடைய சுயசரிதை நூலின் தலைப்பு என்பதாலும் உதயநிதி ஸ்டாலின் இதில் நாயகனாக நடிப்பதாலும் இது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்தத் தலைப்பு அமைந்தது ஆசீர்வாதம்தான்.
சாதிய ஒடுக்குமுறையைப் பேசும் தமிழ்ப் படங்கள், ஒடுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லப் பயந்து பம்மியிருக்கின்றன. ஆனால் ‘ஆர்டிகிள் 15’, சாதிப் பெயர்களைப் பட்டவர்த்தனமாகச் சொன்னது. அந்தத் துணிச்சல் ‘நெஞ்சுக்கு நீதி’யில் காப்பாற்றப்பட்டிருக்கிறதா?
தணிக்கைக் குழு பல விதிமுறைகளை ஒரு புத்தகமாகவே கொடுத்திருக்கிறார்கள். அதைப் பின்பற்றிப் படமெடுக்கும்போதுதான் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து, ரிலீஸ் செய்ய முடியும். இதில் தயாரிப்பாளரின் பணம், நிறைய பேருடைய உழைப்பு என பல விஷயங்கள் இருக்கின்றன. சிலவற்றில் பிடிவாதமாக இருந்தால் ‘ரிவ்யூ கமிட்டி’ என்று தணிக்கைக்கு அலைந்து காலத்தை வீணாக்க வேண்டியிருக்கும்.
அதனால் பலவற்றைத் தவிர்த்திருக்கிறோம். அதேநேரம், எவையெல்லாம் தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்குப் பொருந்தி வந்ததோ, எவையெல்லாம் இங்கே சொன்னால் மக்களுக்குப் பயன் விளைவிக்குமோ அதையெல்லாம் அப்படியேப் பயன்படுத்தியிருக்கிறோம். இந்திப் படத்தை ஒரு க்ரைம் த்ரில்லர் வகைப் படமாகக் கொடுத்திருந்தார் இயக்குநர் அனுபவ் சின்ஹா. ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’யை ஒரு க்ரைம் டிராமா வகைப் படமாக உருவாக்கியிருக்கிறோம்.
உதயநிதி ஏற்றுள்ள கதாபாத்திரம் என்ன? அதில் அவர் எப்படிப் பொருந்தியிருக்கிறார்?
ஐபிஎஸ் முடித்துவிட்டு பணியில் இணையும் காவல் அதிகாரி, முதல் பணி நாளிலேயே பணியிட மாற்றம் பெற்றுக் கதை நடக்கும் ஊருக்கு வருகிறார். அங்கே நடக்கும் ஒரு பெரிய குற்றம், அந்தக் குற்றத்துக்கான காரணங்கள், குற்றத்தின் பின்னணியில் இருக்கும் மனநிலை, குற்றவாளிகள் யாரெனத் தெரிந்தும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றன? அவற்றைச் சாதி மறுப்பாளரான கதாநாயகன் எப்படித் தகர்த்தெறிகிறார் என்பதுதான் உதயநிதி ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் ‘ கேரக்டர் ஆர்க்’.
முதலில் காக்கிச் சீருடை அணிந்து நடிக்கத் தயங்கினார். பிறகு ‘லுக் டெஸ்ட்’ எடுத்துப் பார்த்தபின் ஒப்புக்கொண்டார். முதல் நாள் படப்பிடிப்புக்குப் பின்னர் அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. அதன்பிறகு அவர் பின்வாங்கவே இல்லை. எனக்கு அவருடைய கதாபாத்திரம் எவ்வளவு ‘போல்ட்’ ஆக தேவை என்பதைக் கேட்டு வாங்கினேன். ஒவ்வொரு நாளும் நடிப்பில் முன்னேறிக்கொண்டே போய் அந்தக் கேரக்டராகவே அவர் ஆகிவிட்டார். அவரது அர்ப்பணிப்பு வியக்க வைத்தது. இன்னொரு படத்துக்கு கால்ஷீட் கொடுக்கும்படி அவரிடம் கேட்டிருக்கிறேன்.