

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ‘கடைசி விவசாயி’ உலகத் தரமான ஒரு திரைப்படம் என சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்தப் படத்துக்குப் பிறகு தற்போது ‘டாணாக்காரன்’ மற்றொரு அசலான, ஆனால், சிறந்த கமர்ஷியல் படம் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.
“'லெஃப்ட்… ரைட்...’என்கிற ஒரு கமாண்டை யும் புழுதி பறக்கும் ஒரு மைதானத்தையும் வைத்துக்கொண்டு, ஒரு அறிமுக இயக்குநர் ‘காவல் துறையின் அஸ்திவாரத்தையே மாற்றியமைக்கக் கோரும்’சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகக் காவல்துறையை இதைவிடச் சிறப்பாக ‘லெஃப் அண்ட் ரைட்’ வாங்கியிருக்க முடியாது” என்று ‘டாணாக்கார’னை வியந்து சிலாகித்திருக்கிறார் ஒரு நெட்டிசன்.
‘டாணாக்காரன்’ வெளியாகும் முன்பே, அப்படத்தின் இயக்குநர் தமிழ், ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ‘ஒரு நல்ல நடிகர்’ என்றும் பெயர் பெற்றிருக்கிறார். ‘ஜெய் பீம்’ படத்தில் ராஜாக்கண்ணுவை மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியாக நடித்திருந்தவர் இந்தத் தமிழ்தான். ‘ஜெய் பீம்’ படத்தில் நடிக்கும் முன்பே அவர் ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கி முடித்திருந்தார். இராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர், 12-ம் வகுப்பு முடித்ததும் திரையுலகில் நுழையும் கனவுடன் இருந்தவர், தன்னுடைய மூத்த சகோதரியின் அறிவுரையை ஏற்று, காவல்துறையில் சேர்ந்து, ஒரு காவலராக 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். பிறகு, போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’படத்தில் தொடங்கி உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
போலீஸ் பணிக்குத் தேர்வானதும் மணிமுத்தாறு காவல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிப் பெற்ற தமிழ், காவல்துறையில் தன்னுடைய பணிக்காலத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களின் ஒரு பகுதியையே அவர் ‘டாணாக்கார’னாக உருவாக்கியிருக்கிறார். முதலில் கேங்ஸ்டர் கதையொன்றை எழுதிய தமிழ், வெற்றிமாறனின் அறிவுரையின்படி ‘டாணாக்காரன்’ திரைக்கதையை எழுதி முடித்ததும் 21 பட நிறுவனங்களில் 250 முறை இந்தக் கதையச் சொல்லியிருக்கிறார். 14 கதாநாயகர்களிடம் சொல்லியிருக்கிறார். ‘கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ‘இதெல்லாம் ஒரு கதையா..?’ என்று கேட்டுப் பாதியில் எழுந்துபோன தயாரிப்பாளர்கள் பலர்’ என்று கூறுகிறார் இயக்குநர் தமிழ். இறுதியாக, அந்தக் கதை உருவாக்கப்போகும் விவாதத்தை மிகத் துள்ளியமாக அடையாளம் கண்டுகொண்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இதைப் படமாக்க முன்வந்திருக்கிறார்.
அதன்பிறகு, பட நிறுவனத்தின் ஏற்பாட்டில் விக்ரம் பிரபுவுக்கு முதல் முறை கதை சொல்லும்போதே ‘ஒரே வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்குங்கள்’ என்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்குநர் தமிழுக்கு அடுத்த சவால் தயாராக இருந்தது. ஒரே வாரத்தில் படப்பிடிப்பு எனக் கதாநாயகன் கூறிய நிலையில், அதை இயக்குநர் எப்படிச் சமாளித்தார்? ‘தான் உதவியாளராக பணிபுரிந்து வந்தபோது, தன்னுடன் பணிபுரிந்த ராகவன் என்கிற ஆர்ட் டிபார்ட்மெண்ட் உதவியாளரிடம் ‘நான் இயக்குநர் ஆகும்போது நீதான் கலை இயக்குநர்’ என்று வாக்குக் கொடுத்திருந்த தமிழ், இப்போது ராகவனை அழைத்துப் படம் தொடங்குகிறது எனச் சொல்லி அழைத்திருக்கிறார். இருவரும் ஏற்கெனவே தேர்வுசெய்து வைத்திருந்த கல்லூரி வளாகத்தில் இரவு பகலாக செட் வேலைகளை ராகவனும் அவரது குழுவினரும் செய்துகொடுக்க… ஒரு பக்கம் படப்பிடிப்பு நடக்கும்போதே இன்னொரு பக்கம் செட் வேலைகளைச் செய்து முடித்திருக்கிறார் ராகவன்.
இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களுடன் மொத்தம் 300 பேர் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பயிற்சி பெரும் காவலர்களாக நடித்த புதுமுகங்கள் யாரும் துணை நடிகர்கள் இல்லை. அவர்களில் 90 பேர் போலீஸ் பரேட் பயிற்சி தெரிந்தவர்கள். கதாநாயகன் உட்பட மற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மூலம் உண்மையான போலீஸ் பரேட் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ‘ஃபாஸ்ட் கட்’ என்கிற போலீஸ் கிராப் அடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஓர் அசலான படம் உருவான பின்னணியில் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் விட இந்தப் படம் காவல் துறையில் உருவாக்கப்போகும் மாற்றம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது, தமிழ்நாடு அரசு, ‘டாணாக்காரன்’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதுமுள்ள காவல் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளில் திரையிட உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன், ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் புகார் பெட்டி ஒன்றை வைக்க ஏற்பாடு செய்திருப்பது, இந்தப் படம் உருவாக்கியிருக்கும் மாற்றங்களின் முதல் தொடக்கப் புள்ளி எனலாம்.