

பிறந்த குழந்தையாக சினிமா தவழ்ந்துகொண்டிருந்த காலம் அது. 1892-ல் ‘கினடோஸ்கோப்’ (Kinetoscope) என்கிற ஒளிப்பதிவுக் கருவி மூலம் பிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள் முதல் சலனத் துண்டுத் படத்தைப் பதிவுசெய்தனர். அதைப் பாரிஸ் நகரத்தில் 1895, டிசம்பர் 28-ம் தேதி திரையிட்டியபோது ‘சினிமா’ எனும் தன்னிகரற்ற கலை பிறந்தது. அதிலிருந்து சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து, 1905, ஏப்ரல் மாதம், ஈஸ்டர் திருநாளுக்கு முதல்நாள் திருச்சியில் தென்னிந்தியாவின் முதல் சலனப் படத்தைத் திரையிட்டார் 24 வயதே நிரம்பிய தமிழ் இளைஞர் ஒருவர். ‘இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சரிதம்’ (Life of Jesus) என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்தச் சலனப் படம்தான் தென்னிந்தியாவில் முதன்முதலில் பொதுமக்களின் பார்வைக்காகத் திரையிடப்பட்ட படம் அது.
சாமிக்கண்ணு வின்சென்ட், பிரிட்டிஷ் ரயில்வேயில் டிராஃப்ட்மேனாக இருந்தவர். ‘இயேசுவின் வாழ்க்கை சரிதம்’ உள்ளிட்ட ஐந்து சலனக் குறும்படங்களைப் பல ஆசிய நாடுகளில் திரையிட்டுவந்த பிரான்ஸ் நாட்டின் சினிமா எக்ஸிபிட்டரான டுபாந்த் என்பவர், தன்னுடைய இந்தியப் பயணத்தில் திருச்சி வந்தபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதனால் தனது திரையிடல் கருவி, குறும்படங்கள் ஆகியவற்றை அங்கேயே விற்றுவிட்டு நாடு திரும்ப முடிவு செய்தார். திருச்சியில் பணியாற்றிவந்த சாமிக்கண்ணு வின்செண்ட் இதைக் கேள்விப்பட்டு, அவரிடமிருந்து 1905-ம் வருடம் பிப்ரவரி மாதம் அவற்றை வாங்கிக்கொண்டார். வாங்கிக் கொள்வதற்கு முன், திரையிடல் கருவியை இயக்கவும் அதைப் பழுது நீக்கவும் கற்றுக்கொண்டார்.
திருச்சியில் ‘ஈஸ்டர் ஈவ்’ திரையிடலுக்குப் பின், சொந்த ஊரான கோவை, உறவினர்கள் மிகுந்திருந்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் ஐந்து சலனக் குறும்படங்களையும் திரையிட்டார். ஒவ்வொரு திரையிடலுக்கும் மக்கள் தந்த வரவேற்பைக் கண்டு, தன்னுடைய அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாட்டின் பல சிறு நகரங்களுக்கும் பயணம் செய்து, மக்களிடம் சினிமா எனும் அதிசயக் கலையை அறிமுகப்படுத்தினார். பின்னர் கேரளத்தின் மலபார், வடஇந்தியாவின் முக்கிய நகரங்கள், ஆப்கானிஸ்தான், ரங்கூன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் சுற்றித்திரிந்து வெற்றிகரமான எக்ஸிபிட்டராகப் பொருளீட்டினார்.
பின்னர், சொந்த ஊரான கோவைக்குத் திரும்பி, அங்கே தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கை, டவுன் ஹால் அருகே கட்டி, அதற்கு ‘வெரைட்டி ஹால்’ என்று பெயரிட்டு 1914-ல் திறப்பு விழா நடத்தினார். காலப்போக்கில் வெரைட்டி ஹால் ‘டிலைட் தியேட்டர்’ என பெயர் மாறியது. சாமிக்கண்ணு தனது சகோதரர் ஜேம்ஸ் வின்செண்ட்டையும் சினிமாத் திரையிடல் தொழிலில் இணைத்துக்கொண்டு கோவையில் பல திரையரங்குகளைக் கட்டினார்கள்.
சினிமாவை அதிகமாக நேசித்த சாமிக்கண்ணு, புதிய தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் விரிவாக்கம் செய்யவும் தவறவில்லை. ஆயில் இன்ஜின் ஒன்றை வாங்கி அதன் மூலம் தனது திரையரங்குக்கான மின்சாரத்தை உற்பத்திசெய்து பயன்படுத்தினார். பின்னர், அதே முறையில் மின் உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியதன் மூலம் கோவைக்கு மின்னொளியைக் கொண்டுவந்த சாதனையையும் செய்தார். கோவையின் முதல் மின்சார அச்சகத்தை நிறுவியதோடு ‘ஜனநேசன்’ என்கிற காங்கிரஸ் ஆதரவு பத்திரிகை ஒன்றையும் நடத்தினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, திரைப்படமே அவரை ஆக்கிரமித்திருந்ததால் படத் தயாரிப்பாளராக மாறினார். அன்று திரைப்படங்களைத் தயாரிக்க கல்கத்தா செல்ல வேண்டியிருந்த நிலையில், அங்கு சென்று கல்கத்தாவின் பயனியர் ஸ்டுடியோவில் ‘சம்பூர்ண ஹரிச்சந்திரா’ என்கிற தலைப்பில் முழுவதும் தமிழ் வசனங்கள், பாடல்கள் அடங்கிய தமிழ்ப் படத்தை தயாரித்து 1935-ல் வெளியிட்டார். அடுத்து, இவர் தயாரித்த ‘வள்ளித் திருமணம்’ தமிழ் சினிமாவின் முதல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களிலும் தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி. ராஜலட்சுமி நடித்திருந்தார். சாமிக்கண்ணு விண்சென்ட்டின் திரையுலகச் சாதனைகள் எப்போதும் உரிய தருணங்கள் தோறும் நினைவுகூரப்பட வேண்டியது, அந்த மகத்தான ஆளுமைக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும். இன்று அவருடைய 80-வது நினைவு தினம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in