‘மாஸ் ஹீரோ’ ஆவது என் கையில் இல்லை! - அசோக் செல்வன் பேட்டி

‘மாஸ் ஹீரோ’ ஆவது என் கையில் இல்லை! - அசோக் செல்வன் பேட்டி
Updated on
2 min read

எப்படிப்பட்டக் கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை உயிரோட்டமாக மாற்றிக்காட்டும் திறமை கொண்டவர் அசோக் செல்வன். கடந்த 10 ஆண்டுகளில் உருப்படியான 10 படங்களைத் தாண்டிவிட்ட அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது ‘ஹாஸ்டல்’. அதையொட்டி அவருடன் பேசியதிலிருந்து…

‘மன்மத லீலை’க்கு வரவேற்பு எப்படியிருந்தது?

என்ன எதிர்பார்த்தோமோ அது கிடைத்துவிட்டது. கரோனா லாக் டவுனில் ஓடிடியில் வெளியிடுவதற்காக எடுத்த படம். எதிர்பாராத அதிர்ஷ்டமாக திரையரங்க ரிலீஸ் கண்டது. கருத்து.. கண்டெண்ட் என்று இதுவரை சீரியஸாக நடித்துக்கொண்டிருந்த என்னை, அதிலிருந்து வெளியே இழுத்துப்போட்ட படம். ஒரு நடிகனாக எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதில் விருப்பத்துடன் இருப்பவன் நான். அதை ‘மன்மத லீலை’ மேலும் உறுதிப்படுத்திவிட்டது.

விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து முடித்துவிட்ட பிறகு, ‘மாஸ் ஹீரோ’ ஆகவேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா?

என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ‘மாஸ் படம் பண்ணு.. ஆக்‌ஷன் சப்ஜெக்ட் பண்ணு’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படியெல்லாம் எந்த உந்துதலும் இல்லை. அது என் கையிலும் இல்லை. மசாலா படத்துக்கும் நல்ல கதை வேண்டும். அப்படி வந்தால், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்னை நம்பி முதலீடு செய்ய முன்வந்தால் நிச்சயமாக அதையும் முயன்று பார்ப்பேன். மாஸ் படங்கள் நோக்கி நானாக நகரவேண்டும் என்பதில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடுத்தரக் குடும்பத்துப் பையனாக சென்னைத் தமிழ் பேசி நடித்ததற்கு ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள்?

எதிர்பார்க்கவே இல்லை! ‘இப்பதாம்பா.. நீ ஜோதியில ஐக்கியமாகியிருக்கே.. அப்புடியே புடிச்சுக்கோ!’ என்று பாராட்டினார் ஒரு ரசிகர். சாமானிய ரசிகர்களுக்கு நெருக்கமான கதாபாத்திரம் செய்யும்போது, அதன் வீச்சு அதிகமாக இருக்கும் என்பதை அந்தப் படத்தின் மூலம் உணர்ந்துகொண்டேன். ஆக்‌ஷன், மசாலா படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ.. இதுபோல் எளிய மனிதர்களின் கதாபாத்திரங்கள் கிடைத்தால் ‘மிஸ்’ செய்ய மாட்டேன். இந்த ஆண்டில் எனக்கு நல்லத் தொடக்கமாக அமைந்த அந்தப் படத்துக்கு மனசுக்குள் ஓர் இடம் கொடுத் திருக்கிறேன்.

‘ஹாஸ்டல்’ இதுவரை நடித்த படங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

நான் இதுவரை நடித்த படங்களில் ‘மன்மத லீலை’யில் கொஞ்சம் காமெடி இருந்தது. ‘ஓ மை கடவுளே’ படத்திலும் கொஞ்சம் இருந்தது. ஆனால் ‘ஹாஸ்டல்’ படம் முழுவதும் காமெடிதான். எனக்கு காமெடி வரும் என்று கண்டுபிடித்த இயக்குநர் சுமந்த்துக்கு என் நன்றி. ‘சதுரம் 2’ படம் கொடுத்தவர். மலையாளப் படத்தின் ரீமேக் என்று சொல்லி அந்தப் படத்தை முதலில் பார்க்க வைத்தார். பிறகு கதையைச் சொன்னபோது, தமிழுக்காக அவர் செய்திருந்த மாற்றங்கள் அட்டகாசமாக இருந்தன. இந்தப் படத்தில் முதல் முறையாக ப்ரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்திருக்கிறேன். முதல் முறையாக கானா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். இப்படி இதில் எனக்கு நிறைய ஸ்பெஷல்!

என்ன கதை, வேறு யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

ஹீரோ, பாய்ஸ் ஹாஸ்டலில் இருக்கிறார். அவரது ஹாஸ்டலுக்கு ஹீரோயின் வர விரும்புகிறார். நாயகனுக்கு வேறு வழியில்லை. ஹீரோயின் ஹாஸ்டலுக்குள் வந்தபிறகு நடக்கும் அமளி துமளிதான் கதை. ஹாஸ்டல் வார்டனாக ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் அண்ணன் நடித்திருக்கிறார். நாசர் சார் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்ன கேரக்டர் செய்கிறாரோ அதுவாக உணர வைத்துவிடும் ஆச்சர்யம் அவர். அவருடன் நடிக்கும்போதெல்லாம் நடிப்பின் அடுத்தடுத்த பரிமாணங்களை கண்டுபிடித்துக்கொள்வேன். இந்தப் படத்தில் விடுதியின் பொறுப்பாளராக நடித்திருக்கிறார். இவர்களோடு சதீஷ், யோகி, கிருஷ், ‘அறந்தாங்கி’ நிஷா எனப் பெருங்கூட்டமாக நடித்திருக்கிறோம். ரசிகர்கள் தங்களுடைய நண்பர்களுடன் ஜாலியாக ‘என்ஜாய்’ பண்ணிப் பார்க்க வேண்டிய படம் இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in