

நாயன்தாராவை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று சொல்ல வைத்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் வசூல் வெற்றியாக அமைந்த ‘டாக்டர்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் நெல்சன் திலிப்குமார். தற்போது, விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி முடித்துவிட்டு தன்னுடைய ‘ஹாட்ரிக்’ வெற்றிக்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பும் அவரது மடியில் வந்து விழுந்திருக்கிறது.. பெருமகிழ்ச்சியில் இருக்கும் நெல்சன் இந்து தமிழ் திசைக்காக அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி…
உங்கள் படங்களில் இடம்பெறும் பல கதாபாத்திரங்கள் மற்றவர்களைக் கலாய்க்கும் மனநிலையிலேயே இருக்கின்றன. அது முழுக்க உங்களுடைய குணம் என்கிறார்களே.. அது உண்மைதானா?
சத்தியமாக இல்லை. சிவகார்த்திகேயனாக இருந்தாலும் ரெடின் கிங்ஸ்லியாக இருந்தாலும் அவர்கள் இருவருமே நெருக்கமான நண்பர்கள் என்பதால் அவர்களை நெருக்கமாக கவனித்து, அவர்களிடம் இருக்கும் சில இயல்பான குணாதிசயங்களைப் பார்த்து அதற்கு ஏற்ப சில விஷயங்களை கேரக்டரில் சேர்ப்பேன்.
இன்னொன்று.. என்னோடு பேசுகிறவர்கள் என்னைக் கலாய்க்கிறார்களா இல்லையா என்பதையே எனக்குக் கண்டுபிடிக்கத் தெரியாது. சில சமயம் நம்மைக் கலாய்க்கிறார்களோ என்று நினைத்துகொண்டு நானும் அப்படிப் பேசிவிடுகிறேன். நான் எழுதும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அந்த பாதிப்பு இருப்பதை எல்லோரும் ரசிக்கிறார்கள். மற்றவர்கள் மனம் புண்படாத வகையில் கலாய்ப்பது முக்கியம்.
நெல்சன் படம், விஜய் படம், ரஜினியை இயக்கவிருப்பவரின் படம் என்று ‘பீஸ்ட் மீது எதிர்பார்ப்பு குவிந்திருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
நீங்கள் சொல்வதையெல்லாம் தாண்டி, விஜய் சார் படம் பண்றோம், முதல்ல அவரோட ஆடியன்ஸை திருப்திபடுத்துறமாதிரி இருக்க வேண்டும் என்கிற நோக்கம்தான் முதன்மையானது. அதேநேரம், இதுவரை விஜய் சார் பண்ணிய படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் படத்தை வடிவமைத்தோம். இதில் என்னுடைய ஸ்டைல் பெரிதாக இருக்காது. இது முழுக்க விஜய் சார் படம்தான். அமைதியாக.. அலப்பறை இல்லாத ஒரு கேரக்டரை தொடர்ந்து கவனித்தோம் என்றாலே அவங்க கொஞ்சம் ‘டெரர்’ என்று தெரியவரும். அப்படியொரு ஷட்டிலான டெரர் கேரக்டர்தான் பீஸ்ட். இதில் ஆக்ஷன் 60% காமெடி 40% என்று பேலன்ஸ் செய்திருக்கிறோம். இரண்டுமே கதைக் களத்துக்கானதாக மட்டுமே இருக்கும்.
எந்த விதத்தில் விஜய்க்கு ‘பீஸ்ட்’ வித்தியாசமான படம் என்று சொல்கிறீர்கள்?
விஜய் சார் படம் என்றாலே நான்கு பாடலாவது இருக்கும். ஆனால், இதில் இரண்டு பாடல்கள்தான். அவருக்கு அறிமுகப் பாடல் கிடையாது. ‘அரபிக் குத்து’ கூட ஒரு செட் பாடல்தான். மாலில் கதை நடப்பதால் 80 சதவீதக் காட்சிகளில் விஜய் சார் ஒரே உடையில்தான் வருகிறார். நண்பர்களிடம் கதையை விவாதிக்கும்போதே.. ‘ஒரே நாள்.. ஒரே இடம்.. ஒரே காஸ்டுயூம் என்றால் விஜய் சார் எப்படி ஒத்துக்குவார்..?’ என்றார்கள். சொல்லிப் பார்ப்போம். வேண்டாம் என்றால் வேறு கதைக்குப் போய்விடலாம் என்றேன். ஆனால், விஜய் சார் பாதிக் கதையைத்தான் கேட்டார். ‘பிரில்லியண்ட்..!’ என்றார். இரண்டாவது கதை சொல்வதற்கான அவசியமே ஏற்படவில்லை.
‘ஒரே நாள்.. ஒரே இடம்’ எனும்போது இந்தப் படத்தை உருவாக்குவதில் என்னவெல்லாம் சவால்கள் இருந்தன?
ஒரு அதி நவீன மால்தான் கதைக் களம் எனும்போது விஜய் மாதிரியான ஒரு பெரிய ஸ்டாரைக் கொண்டுபோய் பிரபலமான மால் எதிலும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது. நாங்களும் டெல்லி வரை போய் பல மால்களைப் பார்த்தோம். எல்லா இடங்களிலும் ஏகப்பட்ட கூட்டம். இது கதைக்கு ஆகாது என்று தெரிந்தபிறகு 6 மாதம் செலவழித்து நிஜ மாலை எப்படிக் கட்டுமானம் செய்வார்களோ அப்படியே செய்தோம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் மட்டுமே மால் செட் சாத்தியமானது.
செல்வராகவன் எப்படி படத்துக்குள் வந்தார்?
‘சாணிக் காயிதம்’ படத்தில் செல்வராகவன் சார் நடிக்கிறார் என்று தெரிந்ததும் எடக்கு மடக்காகப் பேசும் வட இந்திய அதிகாரி கேரக்டருக்கு அவரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவு அணுகினோம். உடனே ஒப்புக்கொண்டார். அவரது கேரக்டர் ரொம்பவே ஆர்வமூட்டும் விதமாக வந்துள்ளது. ‘ஸ்லாம் டாக் மில்லியனர்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டர் வரும். அந்த கேரக்டரின் தாக்கத்தில் உருவானதுதான் மாதவ் சிங் கேரக்டர்.
யோகி பாபு நடிப்பில் 2019-ல் வெளியான ‘கூர்கா’ படத்தின் காப்பி என்று ‘பீஸ்ட்’ படத்தை கலாய்த்து வருவதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?
அந்தப் படத்தின் இயக்குநர் சாம் ஆண்டனை எனக்கு நன்றாகவே தெரியும். கதை சொல்லும்போதே ‘கூர்கா’ படம் பற்றி சொன்னார்கள். அதில் ரெடின் கிங்ஸ்லியும் நடித்திருந்தார். அப்போதே அவர் என்னை அழைத்துபோய் படத்தை காட்டினார். பின்னர் மீண்டும் எல்லோரும் படத்தைப் பார்த்தோம். ’பிரேக்கிங் பேட்’ வெப் தொடர் பற்றியும் சொன்னார்கள். அந்தத் தொடர் எனக்கும் பிடித்த ஒன்றுதான். விமானக் கடத்தல், இதுபோல் வணிக வளாகங்களை சுற்றி வளைத்து அங்கே வந்தவர்களைப் பிணையக் கைதிகளாக வைக்கும் கதைகளைக் கொண்ட படங்கள் உலகம் முழுவதும் வந்துள்ளன. இதுவொரு ஜானர். ‘கூர்கா’வின் கதையோ, திரைக்கதையோ இதில் இருக்காது. இந்தப் படம் தரும் அனுபவமே வேறாக இருக்கும்.
மாலுக்கு வந்த பொதுமக்களை சமூக விரோதிகள் கடத்தி பிணையக் கைதிகளாக வைப்பதும் கதாநாயகன் அவர்களை மீட்பதும் என்று ட்ரைலரிலேயே மொத்தக் கதையையும் சொல்லிவிட்டீர்களே..?
ஒரே இடத்தில் நடக்கும் கதையை ‘ஓபன் பிளே’ ஆக சொல்லி ரசிகர்களைத் திரையரங்குக்கு அழைப்பதுதான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை சரியாக இருக்கும் என்பதால் அப்படிச் செய்திருக்கிறோம். இந்தக் கதையை சர்ப்பிரைஸ் என்ற பெயரில் மறைப்பதுதான் காமெடியாக ஆகிவிடும்.
ட்ரைலரில் ‘காவி’ வண்ணம் கொண்ட பேனர் ஒன்றை விஜய் கிழிப்பதுபோல் ஷாட் வருவது சர்ச்சையானதே?
அய்யய்யோ…! காவிக் கலரையோ .. வேறு யாரையுமோ படத்தில் காயப்படுத்தவில்லை. அதில் எந்த குறியீடும் கிடையாது. அந்தக் காட்சி எடுக்கப்பட்ட நாளில் செட்டில் அடர்த்தியான ஆரஞ்ச் கலரில் பிளக்ஸ் பேனர் இருந்தது. காவி வண்ணம் இன்னும் மென் தன்மையுடன் இருக்கும்.
‘பீஸ்ட்’ படத்தின் மேக்கிங் பார்த்துவிட்டுதான் ரஜினி உங்களிடம் கதை கேட்க அழைத்தாரா?
‘கோலமாவு கோகிலா’ பார்த்துவிட்டு ரஜினி சார் என்னை அழைத்துப் பாராட்டினார். உடனே அவரைச் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டேன். பிறகு ‘டாக்டர்’ படத்துக்கும் பாராட்டினார். ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் விஜய் சார் என்னிடம் ‘ரஜினி சார் கதை கேட்டுக்கொண்டிருக்கிறார் நீங்கள் ஏன் போய் கதை சொல்லக் கூடாது?’ என்று கேட்டார். நான் ‘ரஜினி சார் அளவுக்கா?’ என்று யோசித்தேன். ஏனென்றால் அப்போதுவரை என்னிடம் கதை கிடையாது. ஆனால் விஜய் சார் என்னை விடவில்லை. ‘யோசிச்சுப் பண்ணுங்க.. உங்களால முடியும்’ என்று சொன்னார். அதன்பிறகு தான் ரஜினி சாருக்காக கதை ரெடி பண்ணி சொன்னேன். அவரும் ஓகே சொன்னார்.
அந்தப் படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானதே?
சினிமாவில் தற்போது உயர்ந்த இடத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். ரஜினி சார் படத்தில் மகனாக நடிப்பாரா.. சூழ்நிலை ஒத்துவருமா என்பது இப்போதைக்கு தெரியாது. ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும்போது இன்னும் பல விஷயங்கள் முடிவாகும். அப்போது தெரியவரும்.
அனிரூத் எப்படி உங்கள் படங்களுக்கு மட்டும் இத்தனை கொண்டாட்டமான பாடல்களை கம்போஸ் செய்கிறார்?
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் அவரது ஸ்டுடியோவில்தான் கிடப்பேன். ‘இவனுக்கு ட்யூன் கொடுக்காவிட்டால் இங்கிருந்து போகமாட்டான்’ என்று தெரிந்து வைத்திருப்பவர். ஒரு வகையில் நான் டேரா போட்டுவிடுவேனோ என்று என்னைப் பார்த்து அவருக்கு பயம் உண்டு. நான் சூழ்நிலையச் சொல்லி கேட்பேன். எனக்கு என்பதால் அவர் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா எபெக்ட்’ போடுவார். ட்யூண் வந்ததும் ‘பிடிச்சிருக்கா?’ என்று கேட்பார். ட்யூன் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை என்றால் ‘உங்க மனசாட்சிக்கே அது தெரியுமே?’ என்று கலாய்பேன். புரிந்துகொண்டு வேறு ட்யூன் கொடுப்பார். அல்லது அந்த ட்யூனையே வேறுமாதிரி மாற்றி ‘அடடே!’ என்று சொல்லும்விதமாகக் கொடுத்துவிடுவார்.