Published : 11 Mar 2016 09:09 AM
Last Updated : 11 Mar 2016 09:09 AM

மறக்கப்பட்ட நடிகர்கள் 3: தென்னகம் கொண்டாடிய திறமை! - குசலகுமாரி

தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்கலாம். நடிகர் திலகம் சிவாஜியின் அறிமுகம், திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்த்த திரைப்படம் எனப் பல பெருமைகள் அதற்கு உண்டு.

அந்தப் படத்தின் முதல் காட்சி டி.டி குசலகுமாரியின் எழிலார்ந்த குளோஸ்-அப் முகத்துடன்தான் தொடங்கும். 'வாழ்க வாழ்கவே… வளமாய் எமது திராவிட நாடு வாழ்க வாழ்க வாழ்கவே' என்ற பாடலுக்கு விழிகளை அழகாய் உருட்டி, கச்சிதமாய் அபிநயங்கள் பிடித்தபடி குசலகுமாரி ஆடும் பரத நாட்டியம் ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

நாற்பதுகள் தொடங்கி அறுபதுகள் வரை இருபதாண்டு காலம் தனி நடனங்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பரத நாட்டியத்துக்கு சினிமாவில் வரவேற்பு இருந்தது. பின்னணிப் பாடகர்களின் வரவால் சொந்தக் குரலில் பாடத் தெரிந்தால்தான் சினிமாவில் நிலைக்கலாம் என்ற நிலவரம் மாறியது. அழகுடன் அற்புதமாக நடனமாடத் தெரிந்தால் கதாநாயகி ஆகும் அதிர்ஷ்டம் தேடி வரத் தொடங்கியது.

அதிலும் வழுவூர் ராமையா பிள்ளையின் மாணவிகள் என்றால் தனி மவுசும் மரியாதையும். அவரிடம் நடனம் கற்ற லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, குமாரி கமலா, ஈ.வி. சரோஜா, சாயி சுப்புலட்சுமி, எல். விஜயலட்சுமி என்று பல பெண்கள் திரைப்பட நடனங்களில் தோன்றி, பின்னாளில் முன்னணி நட்சத்திரங்களாக மின்னினார்கள்.

கதாநாயகிகளுக்குக் குவியும் கூட்டத்தைப் போலவே இவர்களது நடனங்களைப் பார்க்கத் திரையரங்கு வரும் லட்சக் கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். குசலகுமாரி ஐம்பதுக்கும் அதிகமான படங்களில் நடனமாடி, பிரபலமான நடன நட்சத்திரமாகப் புகழ்பெற்ற பிறகே கதாநாயகியாக உயர்ந்தார். அதற்கும் முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக சுமார் நூறு படங்களில் நடித்தவர்.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு

டி.டி. குசலகுமாரியின் பெயரில் இருக்கும் முதல் டி. தஞ்சாவூரைக் குறிக்கிறது. இரண்டாவது டி. அவரது அம்மா தமயந்தியைக் குறிக்கிறது. ‘விகட யோகி’ உட்பட அவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். 06.12.1937-ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்த குசலகுமாரிக்கு மூன்று வயதிலேயே அறிமுகமானது பரதக் கலை. ஐந்து வயதாக இருக்கும்போது சென்னையில் குடியேறியது அவரது குடும்பம்.

சென்னை வித்யோதயா தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே 6 வயது சிறுமியான குசலகுமாரிக்கு சினிமா வாய்ப்பு வந்துவிட்டது. டி.ஆர்.ரகுநாத் இளங்கோவன் இணைந்து இயக்கிய ‘மகாமாயா’ 1944-ல் வெளியானது. பி.யு. சின்னப்பா பி. கண்ணாம்பா இணைந்து நடித்து வெளியான இந்தப் படத்தில் இவர்களது மகளாக நடித்து ‘யார் இந்தக் குழந்தை?” என்று கேட்க வைத்தார் குசலகுமாரி. அந்தப் படத்தில் ‘பேபி டி.டி. குசலாம்பாள்’ என்று டைட்டில் போடப்பட்டாலும் பின்னாளில் அவர் நடன மங்கையாக அறிமுகமானபோது அவரது பெயருடன் தன் பெயரின் பாதியைப் பாசமுடன் இணைத்தவர் டி.ஆர். ராஜகுமாரி.

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்று கொண்டாடப்படும் டி.ஆர். ராஜகுமாரி குசலகுமாரியின் அத்தை. அத்தையை விடச் சிறப்பாக நடனமாடத் தெரிந்தவர், அழகான பொலிவான தோற்றம், கவர்ந்து ஈர்க்கும் புன்னகை, சொன்ன நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவது, குசலகுமாரி நடனமாடிய படங்களின் தொடர் வெற்றி என்று அழகும் அதிர்ஷ்டமும் அவரைப் பிரபல நட்சத்திரமாக்கியது.

குசலகுமாரி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஜெமினி படநிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துக்கொண்டிருந்த ‘சந்திரலேகா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் டி.ஆர். ராஜகுமாரி. பள்ளி விடுமுறையில் அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அத்தை ராஜகுமாரியுடன் கிளம்பிவிடுவார் குசலகுமாரி. சந்திரலேகா செட்டில் குசலகுமாரியைக் கண்ட பட அதிபர் எஸ்.எஸ்.வாசன் அப்படியே அவரது முகத்தை மனதில் இருத்திக்கொண்டார். பிறகு பிறகு ஜெமினி பட நிறுவனம் ‘அவ்வையார்’ படத்தைத் தொடங்கியபோது குமாரி அவ்வையாராக நடிக்க குசலகுமாரியைத் தேர்வு செய்தார்.

அந்தப் படம் வெளியாகி வெற்றிபெறும் முன்பே ‘பாரசக்தி’ படம் குசலகுமாரியைப் புகழடையச் செய்துவிட்டது. பாரசக்தியைத் தொடந்து சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யில் சிவாஜியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஏழைப் பெண் ‘சொக்கி’யாகத் துடிப்பான நடிப்பைத் தந்து ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் 16 வயதில் கதாநாயகியாக உயர்ந்த குசலகுமாரியின் நடிப்புக்கும் நடனத்துக்கும் கிடைத்த வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் இடம்பெற்ற போட்டி நடனத்தில் குமாரி கமலாவுடன் இணைந்து இவர் ஆடிய ஆட்டம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

கேரளமும் ஆந்திரமும் கொண்டாடிய கலைஞர்

கூண்டுக்கிளியைத் தொடந்து ‘கள்வனின் காதலி’ படத்தில் சிவாஜிக்குத் தங்கையாக நடித்தார் குசலகுமாரி. அடுத்து வெளியான ‘நீதிபதி’ படத்தில் கே.ஆர். ராமசாமியின் தங்கையாக நடித்தார். படம் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் என்றாலும் பிரபல கதாநாயகர்களுக்குத் தங்கையாக நடித்துவிட்டால் கதாநாயகி வாய்ப்பு எட்டாக்கனியாக மாறிவிடும் என்ற எழுதப்படாத சட்டம் குசலகுமாரியையும் பாதித்தது.

ஆனால், தெலுங்கில் என்.டி.ராமராவ், ரங்காராவ் நடித்த ‘ராஜூபேடா’ படத்தில் அறிமுகமான குசலகுமாரியை அங்கே ‘குசலகுமாரிகாரு’ என்று கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். அந்தப் படம் அங்கே சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற, தெலுங்கில் வரிசையாக நடிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால், ஏற்கெனவே பல தெலுங்குப் படங்களை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதால் அதில் தன்னால் நடிக்க முடியாமல் போனதை இந்த 79 வயதிலும் பசுமையுடன் நினைவுகூர்கிறார்.

“ சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையுமே அண்ணே அண்ணே என்றுதான் அன்போடு அழைப்பேன். அவர்களும் என் மீது உடன்பிறந்த தங்கைபோல் பாசத்தைக் கொட்டுவார்கள். ஆனால், கூண்டுக்கிளிக்குப் பிறகு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தும் என்னால் நடிக்க முடியாமல் போனது எனக்குப் பெரிய இழப்புதான்” என்று கூறும் குசலகுமாரி கேரள ரசிகர்களின் மனதிலும் பெரும் புகழுடன் இடம் பிடித்திருக்கிறார்.

அங்கே பிரேம் நசீர் ஜோடியாக இவர் நடித்த ‘சீதா’ 200 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். அடுத்து இவர் நடித்த ‘மரியக்குட்டி’ ஜனாதிபதி விருதை வென்ற படம். கலைமாமணி, கலைச்செல்வம் விருதுகளால் கவுரவம் செய்யப்பட்ட செல்வி குசலகுமாரி தற்போது சென்னை நந்தனத்தில் தனது ஒரே தம்பி டி.டி. சேகருடன் வசித்துவருகிறார். “அவ்வையார் படத்தில் குமாரி அவ்வையாகத் திருமண மறுப்புக் காட்சியில் நடித்தது என் மனதில் இன்னும் நீங்காத காவியமாக இடம்பெற்றது.

அதனால்தானோ என்னவோ எனக்குத் திருமணம் மீது நாட்டமே இல்லாமல் போய்விட்டது. என் தம்பி சேகரின் குடுப்பம்தான் எனது குடும்பம். அவனை வளர்த்து ஆளாக்குவதிலேயே என் வாழ்க்கையைச் செலவிட்டேன். என் தம்பியும் என் மீது தாயைப் போல் பாசம் கொண்டவன்” என்று நெகிழ்ந்துபோகிறார் குசலகுமாரி.

படங்கள் உதவி: ஞானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x