திரை முன்னோட்டம்: களம் - இன்னொரு ‘மாயா’?

திரை முன்னோட்டம்: களம் - இன்னொரு ‘மாயா’?
Updated on
2 min read

வாரா வாரம் பேய்ப் படங்களின் ஆராவாரம் தமிழ் ரசிகர்களைக் கலங்கடிக்கிறது. முன்னணி நட்சத்திரங்கள் விரும்பிப் பேய்வேஷம் போட்டாலும், உப்புச்சப்பில்லாத புராதன பேய்க் கதையாக இருந்தால் வந்த வேகத்தில் நிராகரித்துவிடுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் ‘மாயா’ போன்ற தரமான பேய் மற்றும் திகில் படங்களைக் கொண்டாடியிருக்கிறார்கள். ‘மாயா’ படத்தின் கதை, திரைக்கதை விறுவிறுப்பாகவும் கிராஃபிக்ஸ், இசை, சிறப்புச் சப்தம், படமாக்கம் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஹாலிவுட்டின் திகில் பட இயக்குநர் எரிக் படத்தைப் பாராட்டினார். ரசிகர்களும் மிகப் பெரிய வெற்றிப் படம் ஆக்கினார்கள்.

தற்போது கோலிவுட்டில் ‘மாயா’படத்துக்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘களம்’திரைப்படம். இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்த இயக்குநர் வெங்கட்பிரபு அதைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார். டிரைலரைப் பார்ப்பதோடு மட்டும் நில்லாமல் அதை இணையத்தில் பகிர்ந்துவருகிறார்கள் நெட்டிசன்கள். எத்தனை சிறந்த பேய்ப் படமாக இருந்தாலும் யூ/ஏ சான்றிதழ் தரும் தனிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர், கதாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூன்று பேரையும் பாராட்டியிருப்பதோடு, படத்துக்கு ‘யூ’சான்றிதழ் வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் ‘களம்’ படம் விற்பனையாகாமல் இருக்குமா? படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதன், “ மிகத் தரமான ஹாரரை எடுத்திருக்கிறீர்கள். நான் முந்திக்கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறி, தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார்.

‘களம்’எனத் தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அப்படி என்னதான் கதைக்களம்? இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ராபர்ட் ராஜிடம் கேட்டபோது “ கதைக் களத்தைச் சொல்லிவிட்டால் இந்தப் படத்தை ஒவ்வொரு நொடியும் ரசிப்பதற்கு அதுவே முட்டுக்கட்டையாகிவிடும். பூர்வஜென்மத்தையும் ஆவியுலகையும் இணைக்கும் கதை இது.” என்று பேச ஆரம்பித்தார்.

“பொதுவாக இயக்குநர்களே கதையை எழுதி, அவர்களே திரைக்கதை எழுதி, உரையாடல் எழுதி என்று சுமையை தேவையில்லாமல் ஏற்றிக்கொள்ளும் போக்கு நம் தமிழ் சினிமாவில் இருக்கிறது. இது மாற வேண்டும். ஒரு இயக்குநர் சிறந்த கதையைத் தேர்தெடுப்பதன் மூலம் பாதி வெற்றியை உறுதி செய்துவிடலாம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன். மிக நம்பகமான திரைக்கதை என்னைக் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் சுபிஷ் சந்திரன் கதாசிரியராக அறிமுகமாகிறார். தனது கதை வெற்றிபெறும் என்பதில் முழு நம்பிக்கை வைத்து அவரே பெரும் பொருட்செலவில் படத்தைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்” எனும் ராபர்ட், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குநர் கோகுல், ‘நான்’ பட இயக்குநர் ஜீவாசங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.. மேலும் அவர் நம்பிடம் பேசும்போது “தமிழ், தெலுங்கில் வளர்ந்துவரும் கதாநாயகன் அம்ஜத் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் ‘மாயா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றொரு ஹீரோ ஸ்ரீனிவாசன். மாயா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்த லக்ஷ்மி பிரியா, எஸ்.எஸ். மியூசிக் பூஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ‘கோலிசோடா’ புகழ் மதுசூதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர்கள் தேர்வில் மட்டுமல்ல, ஒளிப்பதிவு, கலை இயக்கம், இசை, பாடலாசிரியர், கிராஃபிக்ஸ் என ஒரு திகில் படத்துக்கு சிறந்த பங்களிப்பைத் தரக்கூடிய திறமைகளைச் சலித்தெடுத்துத் தேர்வு செய்திருக்கிறோம். ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். ரசிகர்கள் இனி தீர்ப்பளிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி” என்கிறார் ராபர்ட் ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in