

‘மாநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ‘மன்மத லீலை’. தலைப்பு சர்ச்சை, சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் எனப் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டுவரும் இப்படம் பற்றி வெங்கட் பிரபுவுடன் உரையாடியதிலிருந்து...
முன்னணிக் கதாநாயகர்களை வைத்துப் படம் இயக்கிவந்த நீங்கள், திடீரென வளர்ந்து வரும் நாயகன், நாயகிகளைக் கொண்டு ஒரு படம் எடுத்தது ஏன்?
ஸ்டார் கேஸ்ட், பட்ஜெட் போன்றவை என்றைக்குமே எனக்குத் தடையாக இருந்ததில்லை. கரோனா இரண்டாம் அலையின்போது, த்ரில்லர், ஹாரர் படங்களுடன் சீரியஸான படங்களும் அதிகமாக வந்துகொண்டிருந்தன. ஏற்கெனவே கரோனாவால் நிறைய இழப்புகளைச் சந்தித்து அனைவரும் மனம் நொந்துபோய்க்கொண்டிருந்த நேரத்தில், மனநிலையை மாற்றக்கூடிய, மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய கதை ஒன்றை படமாக்கலாம் என்று நினைத்து எடுத்ததுதான் ‘மன்மத லீலை’. ‘மாநாடு’ படத்துக்கு அதிக அளவில் துணை நடிகர்களை வைத்து படமாக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது, கிடைத்த இடைவெளியில் இப்படத்தை எடுக்கத் தொடங்கினோம். இப்படியொரு ஜாலியான படம் பண்ணலாம் என்று எனது உதவி இயக்குநர் மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, என்னிடம் ஒரு கதை இருக்கிறது என்று சொல்லி முழு திரைக்கதையையும் எழுதித் தந்தார். முதல் முறையாக நான் வேறொருவரின் கதையை இயக்கியிருக்கிறேன். என்னுடைய தம்பி பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். அப்பா கங்கை அமரன் பாடல்களை எழுதியிருக்கிறார். முதலில் ‘20/20’ என்றுதான் தலைப்பு வைத்தோம். பிறகு நாயகனாக நடித்துள்ள அசோக் செல்வன்தான் இந்தத் தலைப்பைப் பரிந்துரைத்தார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு கிடைக்காது என்பதால் உடனே சூட்டிவிட்டோம்.
பாலியல் கதைகளைக் கொண்ட படங்களின் தேவை நமக்கு இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது. பாலியல் படங்கள் நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். இந்தப் படமும் அதைத்தான் செய்கிறது. இது மலிவான, இரண்டாம் தரமான வகையைச் சேர்ந்த படம் அல்ல. விரசமோ, முகச்சுளிப்போ இருக்காது. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் பாடம் கற்றுக்கொடுக்கும் ‘அடல்ட் காமெடி’, ‘அடல்ட் ரொமான்ஸ்’ வகைப் படங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழில் சுத்தமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். பாக்யராஜ் சார் அந்த ஜானரில் இலைமறை காயாக முயன்று வெற்றி பெற்றிருக்கிறார். அவரது பாணியை அடியொற்றி, இன்றைய இளைஞர்களுக்கு படம் எடுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ‘அமெரிக்கன் பை’ மாதிரி படங்களை இங்கே ஓபனாக எடுக்க முடியாது. நகைச்சுவையுடன் செக்ஸ் எஜுகேஷன் கொடுத்தால் நாம் ரசிப்போம். அதைத்தான் முயன்றிருக்கிறோம். நண்பர்கள், காதலர்கள், தம்பதிகள் என பெரியவர்கள் சங்கோஜம் இல்லாமல் விழுந்துவிழுந்து சிரித்தபடியே இதை ரசிக்கலாம்.
என்ன கதை?
2010, 2020 என பத்து ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு கால கட்டங்களில் நடக்கும் கதை. இரண்டும் ஒரு புள்ளியில் இணையும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடிவிடும். ஒரு ஆண், இரண்டு டைம் லைன்களில் மூன்று பெண்களிடம் மாட்டிக்கொள்கிறான். அந்த மூவரில் ஒருவர் அவனுடைய மனைவி. அந்தச் சிக்கலிலிருந்து அவன் தப்பிக்கிறானா இல்லையா என்பதுதான் கதை. ‘மாட்டிக்கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே - இப்படிக்கு மாட்டிகொண்டவர்’ என்று படத் தலைப்புக்கு கீழே ஒரு டேக் லைன் கொடுத்துள்ளோம். அதுதான் படத்தில் நாயகனின் நிலை.
எதற்காக ‘ஏ’ சான்றிதழ்?
படத்தில் ‘லிப் லாக்’ முத்தக் காட்சி இருக்கிறது. அதற்காகக் கொடுத்துவிட்டார்கள். முத்தக் காட்சியைப் படமாக்கும்போது ஒரு மறக்க முடியாத சம்பவம். அன்று அசோக் செல்வனும் சம்யுக்தா ஹெக்டேயும் மழைக்காட்சி ஒன்றில் நடிக்க வேண்டும். அதை எடுத்துவிடலாம் என்று அசோக் செல்வனிடம் சொன்னேன். அவர். ‘அண்ணா.. எனக்கு உள்ளுக்குள் காய்ச்சல் அடிப்பதுபோல் இருக்கிறது.. மழைக் காட்சியை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம?’ என்றார். சரி என்று கூறி, அன்று ‘லிப் லாக்’ முத்தக் காட்சியை எடுத்து முடித்தோம். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட மூன்றாம் நாள் அசோக் செல்வனுக்கு கோவிட் தொற்று உறுதியானது. கரோனாவுடன் தான் நடித்திருக்கிறார். ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கதாநாயகிகளுக்கோ மற்றவர்களுக்கோ கோவிட் தொற்றவில்லை.
நடிகர்களின் பங்களிப்பு எப்படி அமைந்தது?
இது போன்ற படங்கள் வளரும் நட்சத்திரங்களின் நடிப்புத் திறமைக்கு சவால்தான். கல்லூரி முடிக்கும் கட்டத்தில் இருக்கும் நாயகன், பத்து ஆண்டுகள் கழித்துத் திருமணமான நாயகன் என இரண்டு தோற்றங்களில் நடிக்கத் தயாராக வேண்டும் என்று அசோக் செல்வனிடம் சொன்னேன். அதற்காகத் தன்னை மாற்றிக்கொண்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் அவருடைய நிலை உயரும். அசோக் செல்வனின் மனைவியாக ஸ்மிருதி வெங்கட்டும் அவருடைய தோழிகளாக சம்யுக்தா ஹெக்டே, ப்ரியா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
உங்கள் அப்பா கங்கை அமரனும் பெரியப்பா இளையராஜாவும் இணைந்துவிட்டார்கள். இசையமைப்பிலும் இணைந்து பணியாற்றுவார்களா?
இந்த வருடமே பெரியப்பாவின் இசையில் அப்பா பாடல்கள் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அடுத்து?
தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்க விருக்கிறேன். ‘மாநாடு’ படத்தை இந்தியில் இயக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன.