Published : 01 Apr 2016 11:53 AM
Last Updated : 01 Apr 2016 11:53 AM

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.

சக்தி நாடக சபாவின் மாணவர்

திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.

நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்

சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.

ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x