

கண்ணோட்டம்: 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா
மாநிலம் முழுவதிலுமிருந்து, தலைநகர் நோக்கிப் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரே திரைப்பட விழா, சென்னை சர்வதேசத் திரைப்பட விழா. இந்த ஆண்டும் கரோனா பரவலைப் புறந்தள்ளி, வரிசையில் நின்று உலக சினிமா ஆர்வலர்கள் படவிழா திரையரங்குகளில் இடம்பிடித்தனர்.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கிய சென்னை சர்வதேசப் படவிழா, ஜனவரி 6-ஆம் தேதி வரை, எப்போதும்போல் 8 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றம் கண்டுவரும் இப்படவிழாவின் இயக்குநரும் அதைத் தனது நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஒருங்கிணைத்து வருபவருமான, இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் செயலாளர் இ.தங்கராஜிடம், 19-வது பதிப்பு குறித்து உரையாடியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்து விழுந்தன. ஒரு படவிழா எப்படிப் படிப்படியாக முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவரது விவரிப்பு எடுத்துக்காட்டியது.
அரசியலுக்கு அப்பால்..
முதலில் அவர், சென்னையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியிருக்கும் இப்படவிழா, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக, தொடக்கம் முதலே நடந்து வருகிறது என்றார். “எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சங்கத்தின் தொடர் செயல்பாடுகளை அங்கீகரித்து வந்திருப்பது, எங்கள் குழுவுக்கும் எங்களுடன் இணைந்து இயங்கும் திரைப்படத் தன்னார்வலர்களுக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரம். முன்பு கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது எப்படி ஊக்கப்படுத்தினாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவருடைய மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கலைகளின் மீது பிடிமானம் கொண்டவராக இப்படவிழாவை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவருடைய தலைமையிலான அரசின் நிதி உதவியுடன் 19-வது பதிப்பை, தமிழ்த் திரையுலகமும் உலக சினிமாஆர்வலர்களும் பாராட்டும் விதமாக நடத்தி முடித்திருக்கிறோம். அதற்காக அரசுக்கு உளமாற நன்றி கூறுகிறோம்.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, 19-வது சென்னை சர்வதேசத் திரைப்படவிழா பற்றிய பல குழப்பமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படமால், உலகம் முழுவதுமிருந்து வந்து குவிந்துகொண்டிருந்த படங்களை வடிகட்டித் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வந்தோம். உண்மையில், படங்களைத் தேர்வு செய்யவே 6 மாத காலம் போதாது. அது எளிதான வேலை அல்ல” என்கிறார்.
அதிகாரப்பூர்வத் தேர்வு முறை
படங்கள் தேர்வுசெய்யப்படும் முறை, அதில் எதிர்கொண்டுவரும் சவால்களை விரிவாகக் கூறக்கேட்டதும் ‘ஏஜெண்டுகள்’ பற்றி எடுத்துச் சொன்னார். “படைப்பாளிகள் நேரடியாகப் படவிழா குழுவினரைத் தொடர்பு கொள்வது ஐந்து சதவீதம் கூட கிடையாது. மாறாக பாதுகாப்பு கருதியும் அடுத்த படத்துக்கான படைப்பு வேலைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதாலும் அந்தப் பொறுப்பை உலக முழுவதுமே ஏஜெண்டுகள் ஒருங்கிணைப்பு செய்து தருகிறார்கள். அதேபோல், பன்னாட்டுக் கலாச்சாரத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இதில் உண்டு. ஆனால், ஏஜெண்டுகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள்.
ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆஸ்கர், கான், கோல்டன் குளோப் தொடங்கி உலகின் புகழ்பெற்ற படவிழாக்களில் விருதுகளும் பரிசுகளும் பெறும் படங்களை கூர்ந்து கவனித்து, படப் பட்டியலைத் தயார் செய்துகொண்டிருப்போம். பிறகு ஜூன் மாதம் ஏஜெண்டுகளைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் வந்திருக்கும் உலகப் படங்களின் பட்டியலில் எவையெல்லாம் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோம். எங்களுக்கு எந்தெந்த படங்கள் தேவை என்பதைச் சொன்னதும், என்கிரிப்ட் செய்யப்பட்ட ‘பிரைவேட் லிங்’ மூலம் படங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்புவார்கள். அவற்றை எங்கள் தேர்வுக்குழுவினர் வாரத்தில் 4 நாட்கள், ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் எனக் காண்பார்கள்.
உலக சினிமா மீது தனித்த ஆர்வமும் உலக சினிமா இயக்குநர் களைப் பற்றிய தொடர்ச்சியான பரிச்சயமும் கொண்டவர்கள் மட்டுமே தேர்வுக் குழுவில் இருக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். ஜூன் முதல் செப்டம்பர் வரை இப்படி ஏஜெண்டுகளிடமிருந்து வரும் சுமார் 350 படங்களிலிருந்து வடிகட்டி 200 படங்களைப் பட்டியலிடுவோம். இதன்பின்னர் இறுதிப் பட்டியல் தயாரானதும் ஏஜெண்டுகளைத் தொடர்புகொண்டு தேவைப்படும் படங்களையும் படவிழாவில் இருமுறைத் திரையிடுவதற்கான அனுமதியையும் கோருவோம். அவர்கள் மின்னஞ்சல் மூலம் அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்துவார்கள்.
கடந்த 19 ஆண்டுகளாக ஏஜெண்டுகளிடம் நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறோம். காரணம், சரியான நேரத்தில் நாங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டபடி திரையிடல் கட்டணத்தை அவர்களுக்குச் செலுத்திவிடுவோம். அவர்கள் ஒரு படத்துக்கு ஆயிரம் யூரோ டாலர்களைக் கட்டணமாக நிர்ணயிப்பார்கள். ஆனால், ‘நாங்கள் தன்னார்வத் திரைப்படச் சங்கம்.. இது வளர்ந்துவரும் திரைப்பட விழா’ என்று வேண்டுகோள் வைத்து நானூறு யூரோக்களுக்கு அவர்களைச் சம்மதிக்க வைத்துவிடுவோம். இப்படித்தான் சிக்கனமாக, ஆனால் தரமாக சென்னைத் திரைப்பட விழாவை வடிவமைத்து 19 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம்” என்கிறார்.
உலக சினிமா போட்டிப் பிரிவு
கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் சினிமா சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஏஜெண்டுகள் படங்களை அனுப்பித் தருகிறார்கள். முறையான ‘பாஸ்வேர்டு’ பாதுகாப்புடன் நேரடியாகத் திரையிடப்படும் திரையரங்குகளின் ஹார்டு டிஸ்குகளில் படங்கள் பதிவாகும். எங்களிடம் மட்டுமே பாஸ்வேர்டு இருக்கும். திரையிடலுக்கு முதல் நாள் காலை எங்களுடைய தன்னார்வலர்கள் சென்று, படத்தை ஓட்டிப் பார்த்து, சப்-டைட்டில், சவுண்ட் சிங்க், ரெசல்யூஷன் போன்றவை சரியாக இருக்கின்றனவா என்பதைப் சரிபார்த்துக்கொள்வார்கள். அப்படியும் ஓரிரு படங்களில் பிரச்சினை வருவது உண்டு. அந்தப் படங்களின் மறு திரையிடலில் வேறு பிரதியை ஏஜெண்டுகளிடம் கேட்டு வாங்கித் திரையிட்டு பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறோம்.” என்றவர், தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவு, அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது,மூத்த திரை ஆளுமைகளை அழைத்து கௌரவம் செய்வது, படவிழாவில் மாஸ்டர் கிளாஸ் நடத்துவது பற்றி பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
“இம்முறை பக்கத்து மாநிலமான கேரளத்திலிருந்து நிறைய மலையாளப் படங்களை அனுப்பி வைத்தார்கள். அவற்றில் சிறந்த சில படங்களைத் தேர்வுசெய்து திரையிட்டோம். அவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், தரமான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை கேரளத்தைவிட நம்மிடம் அதிகமாகிவிட்டது என்பதற்கு தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவுக்கு வந்த படங்களின் பட்டியலே சாட்சி. இம்முறை திரையிடத் தேர்வான படங்கள் ஒவ்வொன்றுமே அவ்வளவு தரம். ஆனால், எல்லா படங்களுக்கும் பரிசு கொடுக்க முடியாதே..!
ரசிகர்களால் மரியாதையுடன் கொண்டாடப்படும் ஒரு இயக்குநர், நீண்ட காலமாக இயங்கிவரும் அனுபவம் மிகுந்த ஒரு மூத்த இயக்குநர் இவர்களுடன் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் என மூன்று நடுவர்கள் விருதுபெறும் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நடுவர்களை தேர்வு செய்வது, படங்களை அவர்கள் பார்க்க வைப்பதுடன் எங்கள் வேலை முடிந்துவிடுகிறது. வேறு சிறு குறுக்கீடு கூட எங்கள் தரப்பிலிருந்து இருக்காது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடுவர்கள் எங்களைப் பாராட்டியிருக்கிறார்கள்.” என்றவர்.. சென்னை சர்வதேசப் படவிழாவில், உலகப் படங்களுக்கான ஒரு போட்டிப் பிரிவைத் தொடங்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட காலக் கனவு. அதை அடையும்போது இப்படவிழா, இந்தியா தாண்டி உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக மாறும். அதை நோக்கி உழைத்துகொண்டிருக்கிறோம். அதற்கு குறைந்தது சில கோடிகளாவது தேவை” என்கிறார்.