

ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞரின் 126-வது பிறந்ததினம்
‘புரட்சிக் கவிஞர்’பாரதிதாசனே திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரையுலகப் பிரவேசத்தை நிகழ்த்திய பெருமைக்குரியவர். திரைப்பாடல், கதை, திரைக்கதை, உரையாடல், படத்தயாரிப்பு என முத்திரை பதித்தவர். பெரிதும் வசனத்தையே சார்ந்திருந்த திராவிடத் திரைமொழிக்கு, பாடல்கள், உரையாடல், திரைக்கதை வழியே கலக மரபைத் தொடங்கிவைத்தவர்.
திரையுலகின் அழைப்பு
திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி அதனால் கிடைத்த புகழைக் கொண்டு கவிஞராக ஆனவர் என்று பாரதிதாசனை இன்றைய இளைய தலைமுறை தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். பாரதிதாசன் திரையுலகில் நுழையும் முன்பே, ‘பாட்டுக்கொரு கவிஞர் பாரதிதாசன்’என்று தம் கவித் திறத்தால் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘புரட்சிக் கவி’யாகப் போற்றப்பட்டவர். இதனால் பாரதிதாசனைத் திரையுலம்தான் தேடிவந்தது.
நாடகக் கலையைச் சமூக மாற்றத்துக்கான மேடையாகப் பயன்படுத்திய டி.கே.எஸ். சகோதரர்கள் ‘ சண்முகாநந்தா’ பிக்ஸர்ஸ்’ என்ற பட கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம். ‘பாலாமணி அல்லது பக்காத் திருடன்’(1937). வடுவூர் துரைசாமி அய்யங்கார் கதை, வசனம் எழுதிய இந்தப் பாடத்துக்கு பாரதிதாசனைப் பாடல் எழுதக் கேட்டுக்கொண்டார்கள் டி.கே.எஸ். சகோதரர்கள். அந்தப் படம் வெளியானபோது “ ‘பாலாமணி அல்லது பக்காத் திருடன்’ மகத்தான மூன்றாவது வாரம். பாலாமணிக்குப் பாடல் சேர்த்தவர் புதுவை பாரதிதாசன். படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்!” என்ற விளம்பரம் அன்றைய பிரபல பத்திரிகைகளில் வெளியானது.
இந்த விளம்பரம் பாரதிதாசனின் அன்றைய புகழைக் கூறும் ஆவணம். ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்தது. உண்மையில் பாரதிதாசன் முதலில் பாடல் எழுதிய ‘இராமனுஜர்’(1938) திரைப்படம் சற்றுத் தாமதமாக வெளியானதால், ‘பாலாமணி’ அவரது முதல் படம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது.
முதல் படத்திலேயே கலகம்
‘மணிக்கொடி’ இதழின் இலக்கிய நண்பர்களும் அக்காலத்தில் காலணாவுக்கு விற்கப்பட்ட ஒரே பத்திரிகையான ‘சுதந்திரச் சங்கு’ சஞ்சிகையின் ஆசியரான ‘சங்கு’சுப்ரமணியமும் இணைந்து ‘இராமனுஜர்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தனர். பாரதிதாசன் அப்போது புதுவை நெட்டப்பாக்கத்தில் வசித்துவந்தார். அவருக்கு மணிக்கொடி இதழின் ஆசிரியர் வ.ரா. ஒரு கடிதம் எழுதினார். அதில் “பாரதி அன்பர்கள் இணைந்து இராமனுஜர் வாழ்க்கையைத் திரைப்படமாக உருவாக்குகிறோம்.
அதற்கு உங்களைத் தவிர வேறு யார் உயர்ந்த பாடல்களை எழுதிட முடியும்? உடனே சென்னைப்பட்டினம் வாருங்கள். பாடல்களுக்குப் பை நிறைய பணம் உண்டு” என்று எழுதியிருந்தார். இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய வ. ரா.வின் அழைப்பை ஏற்றுக் குடும்பத்துடன் சென்னை வந்த பாரதிதாசனின் திரைப்பயணம் அந்தப் படத்திலிருந்து தொடங்கியது. ‘சங்கு’ சுப்ரமணியம் கதாநாயகனாக இராமனுஜர் கதாபாத்திரத்தில் நடித்தார், தனது முதல் படத்திலேயே தனது பாட்டுக் கலகத்தைத் தொடங்கிவிட்டார் புரட்சிக் கவி.
இன்பம் சேர்த்த கவி
திரைப்பாடல்களில் தன் புரட்சியைத் தொடர்ந்த பாரதிதாசன் கவிதைகளின் மற்றொரு இயல்பாக வெளிப்பட்டவை அவரது காதல் பாடல்கள். இயற்கை, இனிமை, எளிமை, கருத்தாழம் ஆகியவற்றால் மிளிர்ந்த அவரது பாடல்களைத் தங்களது படங்களில் பயன்படுத்திக்கொள்ள அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முன்வந்தார்கள். பாரதிதாசன் ஏற்கெனவே எழுதிவிட்டிருந்த ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்ற கவிதையைத் தங்களது ‘ஓர் இரவு’ படத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார் ஏ.வி.எம் மெய்யப்பச் செட்டியார்.
அந்தப் படத்தின் நாயகனும் திராவிட இயக்க நடிகருமாகிய கே.ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நினைவு நாடக சபாவுக்காக அறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதிக்கொடுத்த நாடகமே ஏ.வி.எம் தயாரிப்பில் திரைப்படமானது. இந்தப் படத்தில் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’பாடலை இடம்பெறச் செய்தால் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று அண்ணா பரிந்துரைக்க, அதை ஏற்றுக்கொண்ட செட்டியார், அந்தப் பாடலுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தை பாரதிதாசனிடம் ஊதியமாகக் கொடுத்து அனுமதிபெற்றுவரும் பொறுப்பை படத்தின் நாயகன் கே.ஆர். ராமசாமியிடமே ஒப்படைத்தார். ஆர். சுதர்சனம் இசையில் எம்.எஸ். ராஜேஷ்வரி, வி.ஜே. வர்மா பாடிய இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் காதல் கீதமாய் ஒலித்தது. அந்நாளின் காளையர்கள் முதல் முதியோர்வரை பாடிக் களித்தனர்.
கவியரசு கண்ணதாசனுக்குக் சலுகை
பின்னாளில் ‘கவியரச’ராகமுடிசூட்டப்பட்ட கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த படம் ‘நானே ராஜா’(1956). இந்தப் படத்தில் ‘ஆடற்கலைக்கு அழகு தேடப் பிறந்தவள்’ என்ற புரட்சிக் கவியின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு புதுவை வந்தார் கண்ணதாசன். ஆனால், நம் பாரதிதாசனோ “ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் முடியாது” என்றார். கண்ணதாசனிடமிருந்ததோ ஐநூறு. பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனைப் பரிந்துரைக்கு அழைத்துச் சென்று கேட்டதும் அடம்பிடிக்காமல் அனுமதி தந்தார். அப்படிப்பட்ட பாரதிதாசன் தான் எழுதிய பாடல்களில் இசையமைப்பாளர்கள் கைவைத்துத் திருத்தம் செய்வதை ஏற்றுக்கொண்டதே இல்லை.
சேலம் மார்டன் தியேட்டர் தயாரித்த ‘வளையாபதி’(1952) படத்துக்காக ‘கமழ்ந்திடும் பூவில் எல்லாம் தேனருவி’ என்ற பாடலை எழுதினார். ஆனால் ‘கமழ்ந்திடும்’ என்ற சொல் இசையமைப்புக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி அதற்குப் பதிலாக ‘குலுங்கிடும்’ என்ற சொல்லைப் போட்டுப் பாடலைப் பதிவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி. இதையறிந்த பாவேந்தர், “ எவன்டா என் பாட்டை மாத்தியவன்? குலுங்கிடும் பூவில் எப்படி தேனருவி வரும்?” என்று கொதித்தவர், மார்டன் தியேட்டருடன் 40 ஆயிரம் ரூபாய்க்குப் போட்டிருந்த ஒப்பந்தத்தைக் கிழித்து ஸ்டூடியோ வளாகத்திலேயே வீசிவிட்டு புதுவை வந்துவிட்டார். “ இசையமைப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்கி ‘குலுங்கிடும்’என்று மாற்றியது நான்தான்” என்று பின்னாளில் எழுதினார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் இடம்பெற்ற ‘சங்கே முழங்கு’ பாடல் உட்பட இருபதுக்கும் அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுத்தார், ஏற்கெனவே தான் கவிதையாக எழுதிப் புகழ்பெற்ற பாடல்களுக்கு இசை வடிவம் தரவும் இசைந்தார். பாரதிதாசனின் இறப்புக்குப் பிறகும் அவரது பாடல்கள் திரையில் பொங்கிப் பெருகின. எம்.எஸ்.வி. இசையில் பி.சுசிலா குரலில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ இன்றும் அவரது அமுதப் பாடலாய் ஒலிக்கிறது.
கடைசியாக, ‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா’என்ற புகழ்பெற்ற அவரது புரட்சிப் பாடல் 2006-ல் விஷால் நடிப்பில் கரு. பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தில் இடம்பெற்றது.
பகுத்தறிவுத் திரைக்கதைகள்
திரைப்பாடலில் தனியிடம் பிடித்த பாவேந்தர் பாரதிதாசன் கதை, வசனம், எழுதி 1947-ல் வெளியான ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’ மிகப் பெரிய வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் வெற்றி, பகுத்தறிவு இயக்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “புராண இதிகாசங்களை முழு வீச்சில் எதிர்க்கும் பாரதிதாசன், அம்மாதிரியான படங்களுக்குப் பணியாற்றலாமா? எனக் கேட்டுப் பல பத்திரிகைகள் எழுதின. அதற்கு பதிலளித்த பாரதிதாசன் “ பிராண நாதா, ஸ்வாமி, சஹியே, தவசிரெஷ்டரே’ போன்ற சொற்களை நீக்கி எளிய தமிழில் அத்தான், தோழி, குருவே என்று என் கதை மாந்தர்களை அழைக்க வைக்கிறேன். அரக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டு வந்தவர்களை அன்பான மனிதர்களாகப் படைத்திருக்கிறேன். மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவிட்ட திரைப்பட ஊடகத்தில் தொடக்க நிலையில் இப்படித்தான் சீர்திருத்தத்தைத் தொடங்க முடியும்” என்று சொன்ன பாரதிதாசன், எட்டுப் படங்களுக்கு கதைவசனம் எழுதினார்.
தம் இறுதிக் காலத்தில் படநிறுவனம் தொடங்கி, தமது புகழ்பெற்ற காப்பியமான ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதியார் வாழ்க்கை வரலாறு’ ஆகிய இரண்டு படங்களையும் தயாரிக்க முயன்று தோல்வி கண்டது அவரது திரை வாழ்வின் சோகமான அத்தியாயம்.
படங்கள் உதவி: ஞானம்