

பிரபல தமிழ், இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா, 80 வயதைக் கடந்த பிறகும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி பிரமிக்க வைத்தவர். பத்ம வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்றுள்ள அவர், திரையுலகில் கால் பதிக்கும் முன்பே நாட்டியக் கலைஞராக ஐக்கிய நாடுகள் அவையால் அழைக்கப்பட்டவர். அவருடைய முதல் திரைப்படம் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘வாழ்க்கை’.
அந்தப் படத்தில் அவரை நாயகியாக அறிமுகப்படுத்திய எம்.வி. ராமன், வைஜெயந்தி மாலாவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த பின் 1960, 70களில் பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டினார் வைஜெயந்தி மாலா. தற்போதும் உற்சாகமாக இயங்கிவரும் அவரிடம் பாலிவுட் திரையுலகம், மறைந்த திரை ஆளுமை திலீப் குமாருடனான அனுபவம் உள்ளிட்டவற்றைக் குறித்துக் கலந்துரையாடியதில் இருந்து ஒரு பகுதி:
80 வயதைக் கடந்த நிலையிலும் நடன நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பரதத்தின் பங்கு எப்படிப்பட்டது? அதேபோல சினிமாவில் கிடைத்த புகழ், பரதக் கலையைப் பரப்புவதற்குப் பயன்பட்டது என்று நம்புகிறீர்களா?
வயதைப் பற்றி நான் நினைப்பது இல்லை. தெய்விகக் கலையான பரதநாட்டியம். என் உடல், பொருள், ஆவியாக இருந்திருக்கிறது. நாட்டிய கல்வியால்தான் நான் முன்னேற்றம் அடைந்தேன். அதேபோல் சினிமாவில் கிடைத்த பெரும் புகழுக்குக் காரணம் நான் கற்ற நாட்டியமே. என்னுடைய பரதநாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்க்க வருகிற ரசிகர்கள் என் சினிமா புகழுக்காக வரவில்லை. அவர்கள் பாரம்பரிய பரதநாட்டியத்தைத்தான் பார்க்க வருகிறார்கள்.
‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் நீங்களும் பத்மினியும் போட்டி போட்டு நடனமாடிய ’கண்ணும் கண்ணும் கலந்து’ பாடல் இன்றைக்கும் பிரமிக்கவைப்பது. இந்தப் பாடல் படமாக்கப்பட்டது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
அந்தப் பாடலில் இடம்பெற்ற நடனப் போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை படத்தின் டைரக்டர் ஜெமினி எஸ்.எஸ். வாசன் சொல்லாமல் சஸ்பென்ஸாகவே விட்டுவிட்டார். எனக்குத் தெரிந்து யாராலும் மறக்க முடியாத, யார் வெற்றி பெற்றார் என்று தீர்மானிக்க முடியாத மிகப் பெரிய ஆச்சரியம் அந்த நடனப் போட்டி. என் சோலோ ஆட்டம், பத்மினி அம்மாவின் சோலோ ஆட்டம் இரண்டும் வேறு வேறு நாட்களில் ஷூட் செய்யப்பட்டன. இருவரும் சேர்ந்து ஆடியது இரண்டு நாள்களில் முடிந்துவிட்டது. எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருந்தது.
‘தேவதாஸ்’ இந்தி படத்தில் நீங்கள் ஏற்றிருந்த சந்திரமுகி கதாபாத்திரம் உங்கள் பாலிவுட் பயணத்தை எப்படி வடிவமைத்தது என்பதைப் பகிர முடியுமா?
பிமல்ராய் மிகப்பெரிய டைரக்டர். அவர் இயக்கிய ‘தேவதாஸி’ல் சந்திரமுகியாக நான்தான் செய்ய வேண்டும் என்றும், அந்தக் கதாபாத்திரத்தின் விவரத்தை எனக்குக் கூறியிருந்தார். அவர் அவ்வளவு கேட்டபோது மறுக்க முடியாததால் ஒப்புக்கொண்டேன். நான் நாட்டியம் மட்டும்தான் சிறப்பாக ஆடுவேன் என்று நினைத்திருந்தவர்கள் எல்லாரும் - “அடடா’ என்ன ஒரு நடிப்பு... சந்திரமுகி கதாபாத்திரம் பிரமாதம்” என்றனர். என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.
அந்தப் படத்தின் நாயகனும் பாலிவுட்டின் மாபெரும் ஆளுமையுமான திலீப் குமாரின் மறைவின்போது நீங்கள் வெளியிட்ட இரங்கல் வீடியோ வைரலானது. திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானுவை நீங்கள் ‘டார்லிங்’ என்று குறிப்பிட்டது பலரையும் நெகிழ வைத்தது. திலீப்குமார் உடனான நினைவுகளை பகிருங்களேன்?
திலீப்சாப் உடன் நான் நடித்த முதல் படம் ‘தேவதாஸ்’. முதல் நாள் ஷூட்டிங்குக்குச் சென்றேன். என்னிடம் பிமல்ராய் முதல் சீன், முதல் ஷாட் என்னவென்று விளக்கினார். குடி மயக்கத்தோடு தேவதாஸ் தடுமாறிக்கொண்டு சந்திரமுகி அருகில் வந்து விழுவதற்கு முன், சந்திரமுகி தேவதாஸை பிடித்துக்கொண்டு இப்படிச் சொல்ல வேண்டும்: “இனிமேலும் குடிக்காதீங்க தேவதாஸ்”. அவ்வளவுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், எனக்கு பயமும் நடுக்கமும் ஏற்பட்டுவிட்டது. திலீப்சாப் எவ்வளவு பெரிய நடிகர். கிங் ஆஃப் ட்ராஜடி, டாப் ஆக்டர், சீனியர் ஸ்டார். அவர்கூட நடிக்கும்போது, நான் சரியாக, முழு உணர்ச்சியோடு, இந்த சிறிய வசனத்தை உளறாமல் பேச வேண்டுமென்று மனதில் பதற்றம் வந்துவிட்டது.
திலீப்சாப் தேவதாஸாகவே ஆகிவிட்டார். ஷாட் ரெடி ஆகிவிட்டது. என் மனது ‘பட்பட்’ என்று அடித்துக்கொண்டது. டைரக்டர் “ஸ்டார்ட் கேமரா” என்று சொன்னார். அவருக்கு வேண்டிய ஷாட், நல்ல வேளை சரியாகக் கிடைத்துவிட்டது. ‘குட்’ என்று பிமல்ராய் சொன்ன பிறகுதான், எனக்கு மூச்சே வந்தது. அப்போது திலீப்சாப் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘கங்கிராட்ஸ்’ சொன்னார். முதல் ஷாட் - முதல் டேக் ஓகே ஆனது.
சாய்ரா பானு மிகவும் அன்பான பெண். என்னை மரியாதையுடனும் அன்புடனும் ‘அக்கா’ என்றுதான் அழைப்பார். அவர் என்னுடைய ‘டார்லிங்’. திலீப்சாப்புடைய உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, தன்னைக்கூட மறந்து கணவரை அவ்வளவு நன்றாக கவனித்து பார்த்துக்கொண்டார் சாய்ரா. திரைப்படங்களில் திலீப்சாபும் நானும்தான் மிகப் பொருத்தமான ஜோடி என்று சாய்ரா எப்போதுமே சொல்வார்.
பரத ஆய்வு மையம் ஒன்றைத் தொடங்கினீர்கள். அதன் மூலம் என்ன பணிகளைச் செய்துவருகிறீர்கள்?
சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் நாட்டிய பரம்பரையில் வந்தவர்களான தஞ்சை நால்வர் சின்னைய்யா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஓங்கி வாழ்ந்த பரதகலா ஸ்ரேஷ்டர்கள். தங்கள் குலதெய்வமாகிய பிரகதீஸ்வரரின் அருளையும் ப்ருஹன்நாயகி அம்பாளின் அனுக்கிரகத்தையும் ஆதரவையும் பெற்று, பல சாஹித்தியங்களை அவர்கள் இயற்றி உள்ளனர். விசேஷமான கீர்த்தனங்கள், பதவர்ணங்கள், தானவர்ணங்கள், ஸ்வரஜதிகள் என ஏராளமானவை உள்ளன. பண்டைய கால சம்பிரதாய முறைகளை, அதே சம்பிரதாய முறைப்படி நடத்தி சிறப்புற செய்ய வேண்டுமென்று என் மனத்தில் தோன்றியது.
என்னுடைய பாட்டி யதுகிரி தேவியிடம் சொன்னேன். இக்கலைக்காகவே தொண்டு செய்ய அர்ப்பணித்துக்கொண்டு, மறைந்து போன கலைச்செல்வங்களை மீண்டும் பயின்று நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்று அவர் ஊக்கம் தந்தார். தஞ்சை நால்வர்களின் வாரிசான தஞ்சை கே.பி. கிட்டப்பா என் குருவாக வாய்த்தது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். கோயில் நடன முறையில் அமைந்துள்ள பாடல்கள், மேலும் மறந்துபோன பழைய நாட்டிய முறைகளை இந்தக் காலத்துக்கு புத்தகமாகவும் ஆவணப்படுத்தும் வகையிலும் பரத ஆய்வு மையம் தொடங்கினேன். இப்போதும் அந்த வேலை சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.