Published : 25 Mar 2016 10:35 AM
Last Updated : 25 Mar 2016 10:35 AM

எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்டார்! - பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அஞ்சலி

தமிழ் சினிமா வரலாற்று நூல்கள் பலவற்றுக்கும் ‘சாதனைகள் படைத்த தமிழ் சினிமா வரலாறு’ என்ற நூல்தான் அடிப்படை ஆவணம். தமிழ்த் திரையின் வரலாற்றுக்கு முக்கிய ஆவணமாக இருக்கும் இந்த நூலை, உழைத்துத் தொகுத்து அளித்தவர் மகத்தான மக்கள் தொடர்பாளர் என்று கொண்டாடப்பட்ட ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன். தள்ளாத முதுமையிலும் தனது 86-வது வயதுவரை திரையிடல்கள், திரைவிழாக்களில் கலந்துகொள்ளும் ‘நடமாடும் திரைக் களஞ்சியமாக’ வாழ்ந்துவந்த அவரது மறைவு, திரையுலகுக்கும் இதழியல் உலகுக்கும் பேரிழப்பு. ‘தி இந்து’ சித்திரை மலருக்காக அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை அவரது மறைவை ஒட்டி முன்னதாக வெளியிடுகிறேம்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். என் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணிபுரிந்தவர். அவருக்கு நான்கு பிள்ளைகள். எனது அப்பா ஞானசாகரம், இரண்டாவது மகன். பேரன்கள் அனைவருக்கும் 80 ஆண்டுகள் கெட்டியான ஆயுள் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஆனால் எதிர்பாராத விதமாக எனது அண்ணன் கோபாலகிருஷ்ணனும் எனது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணனும் பெரியம்மை கண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.

துக்கம் தாளாமல் ரயிலில் கிளம்பி வட இந்தியாவுக்கு சப்தபுரி தீர்த்த யாத்திரை போய் வந்திருக்கிறார் தாத்தா. பிறகு நான் பிறந்திருக்கிறேன். எனக்கு ஜாதகம் எழுத அப்பா மறுத்துவிட்டார். தாத்தா எனக்குப் பெயரும் வைக்கவில்லை. ஜாதகம் கணிக்காததால் ‘மணி’ என்ற செல்லப் பெயரில் அழைத்திருக்கிறார்கள். எங்கள் குடும்பம் ராயப்பேட்டையில் வசித்தது. அப்பா அரசு ஊழியர்.

எனக்கு ஐந்து வயதானபோது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றார் அப்பா. பார்க்க அழகாக இருந்த என்னை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டார் தலைமையாசிரியர். உன் பெயர் என்ன என்று கேட்டார். நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘அனந்த கிருஷ்ணன்’ என்றேன். என் அப்பாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. எனக்குப் பெயர் வைக்காத விஷயத்தை அப்பா சொல்ல, ‘இந்தப் பெயர், மணி என்பதைவிட நல்ல பெயராக இருக்கிறதே! இதையே வைத்துவிடுவோம்’ என்ற தலைமையாசியர், என் பெயரை பி.ஜி. அனந்த கிருஷ்ணன் என்றே பதிவு செய்துவிட்டார். பிறகு அதேபெயர் நிலைத்துவிட்டது.

உங்கள் இளமைக் காலம் எப்படியிருந்தது?

அந்தக் காலத்தில் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் எனது அப்பாவும் அம்மாவும் என்னைச் சுதந்திரமாக விளையாட விடுவார்கள். விளையாட்டு, படிப்பு இரண்டிலுமே முதல் மாணவனாக இருந்தேன். அஞ்சல் தலைகள் சேமிப்பேன். அப்பா அலுவலகத்தில் ஒரு ட்ராமா ட்ரூப் இருக்கும். அலுவலக நேரம் முடிந்ததும் நாடக ஒத்திகை நடக்கும். பள்ளி முடிந்து வந்ததும் அப்பா அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். அங்கே நடக்கும் நாடக ஒத்திகையை ரசிப்பேன். பிறகு நானும் நாடகங்கள் எழுத ஆரம்பித்தேன்.

பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் சேரவிருந்த நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் கம்பெனி நடிகர்களுக்குத் தேர்வு நடக்கிறது உடனே போய் பெயர் கொடு என்றார் அப்பா. எனக்கு நடிப்பதில் ஏனோ விருப்பமில்லை. ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று பெயர் கொடுத்தேன். தேர்வு நடந்த அன்று நான் எடுத்த பல புகைப்படங்களைக் காட்டினேன். ஆனால் அங்கிருந்த டம்மி கேமராவைத் தூக்கச் சொன்னார்கள். நான் பயந்தேன். “கேமராவைத் தூக்கும் அளவுக்கு உடலில் தெம்பு வந்ததும் வா” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் அப்பா ஆறுதல் சொன்னார்.

புகைப்பட ஆர்வம் எப்போது ஏற்பட்டது என்று சொல்லவில்லையே?

பத்திரிகைகளில் வரும் புகைப்படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். பிறந்தநாள் பரிசாக பாக்ஸ் கேமரா வேண்டும் என்று கேட்டேன். அப்பா வாங்கித்தந்தார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. வீட்டில் எல்லோரையும் படமெடுத்தேன். ஆடு, மாடு, நாய், பூனை, செடி, கொடி எனப் படமெடுத்தேன்.

ஒருமுறை பாகவதர் படத்தில் வருவதுபோல் டபுள் ரோல் இமேஜை வசதிகள் எதுவும் இல்லாத பாக்ஸ் கேமராவில் எடுக்க முடியுமா என்றொரு யோசனை. உடனே பக்கத்துவீட்டுச் சின்னப் பையனைக் கூப்பிட்டு உட்கார வைத்தேன். லென்ஸின் பாதியை மறைத்துக்கொண்டு முதலில் ஷட்டரை ஓப்பன் செய்துவிட்டு மூடினேன். பிறகு மறைக்காத பகுதியில் அட்டையை வைத்து மறைத்து இன்னொரு முறை ஷட்டரைத் திறந்து மூடினேன். ஸ்டூடியோவில் கொண்டுபோய் கழுவிப் பார்த்ததும் ஒரே நெகட்டிவில் சிறு கோடுகூட இல்லாமல் ஒரே பையனின் இரண்டு இமேஜ்கள். ஸ்டூடியோகாரர் ஆச்சரியப்பட்டுப்போனார். அப்பா, அம்மாவுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

எப்போது திரையுலகில் நுழைந்தீர்கள்?

கல்லூரி முடித்ததும் பிலிம் ரோல் போட்டுப் படமெடுக்கும் பெரிய கேமராவை அப்பா வாங்கிக்கொடுத்தார். படங்களை கழுவி பிரிண்ட் போட எத்திராஜு என்பவரின் ஸ்டூடியோவுக்குப் போவேன். ஒவ்வொரு முறையும் என்னிடம் படங்களைக் கொடுக்கும்போது பாராட்டுவார். என்னிடம் ஒருநாள் எங்கள் வீட்டுக்குப் போன் செய்து உடனே வா என்றார். போனேன். அங்கே என்.எஸ்.கே.வின் கேமராமேன் மோகன் ராவ் இருந்தார்!

அவர்தான் மோகன் ராவ் என்று அப்போது எனக்குத் தெரியாது. ‘இந்தப் பையன் சின்ன வயதிலிருந்து படமெடுத்துவருகிறான். பாக்ஸ் கேமராவில் டபுள் இமேஜ் எடுத்தவன், சினிமாவில் ஆர்வமுள்ளவன்’ என்று நான் எடுத்த படங்களை அவரிடம் காட்டினார். நடுவில் கோடு இல்லாமல் நான் எடுத்த டபுள் இமேஜ் படத்தைப் பார்த்து ஆச்சரிப்பட்ட அவர், என்னை ஒளிப்பதிவு உதவியாளராகச் சேர்த்துக்கொள்ள சம்மதித்தார். ஸ்டுடியோவுக்கு வந்துவிடு என்றார்.

கீழ்ப்பாக்கத்தில் இருந்த நியூஸ்டோன் ஸ்டூடியோவில் மோகன் ராவுக்கு தனி ரூம் இருந்தது. எனது புதிய கேமராவுடன் தினசரி அங்கே ஆஜாராகிவிடுவேன். அவர் சினிமா கேமராவைப் பற்றி நிறைய சொல்லிக்கொடுப்பார். எந்தெந்த ப்ளோர்களில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் போய் வேடிக்கை பார் என்று அனுப்புவார். கழுத்தில் கேமராவை மாட்டுக்கொண்டு எல்லா ப்ளோர்களையும் சுற்ற ஆரம்பித்துவிடுவேன்.

மூன்றாவது ப்ளோரில் மேக் அப்புடன் உட்கார்ந்திருந்த சிவாஜியைப் பார்த்ததும் எனக்குக் கை பரபரத்தது. தயக்கத்துடன் அவரை நெருங்கி, “உங்களைப் படமெடுக்கலாமா?” என்றேன். “தாராளமா எடுத்துக்கோ” என்று சம்மதம் தெரிவித்தார். கேமரா ரோலில் இருந்த பன்னிரெண்டு பிலிம்களிலும் சிவாஜியைப் படம் எடுத்துத் தள்ளினேன். மறுநாள் படங்களைக் கொண்டுபோய் சிவாஜியிடம் காட்ட, “அருமையாக எடுத்திருக்கிறாய்!” என்று பாராட்டினார்.

ஸ்டூடியோவில் தயாரிப்பாளரோடு நட்சத்திரங்கள் இருப்பதுபோலவும், இயக்குநர் டைரக்ட் செய்வதுபோலவும் ஒர்க்கிங் ஸ்டில்ஸ் எடுத்து, அது என்ன படம், யார் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்ற விவரங்களையும் எழுதி பத்திரிகைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். நான் கொடுக்கும் படங்களை பிரசுரித்து போட்டோவுக்கு கீழே குறிப்புடன் வெளியிட ஆரம்பித்தார்கள். ஸ்டூடியோ வட்டாரத்தில் ‘பிலிம் நியூஸ்’ என்ற டைட்டில் என் பெயருடன் சேர்ந்துகொண்டது. எனக்கு மரியாதை கூடியது.

எப்போது மக்கள் தொடர்பாளராக மாறினீர்கள்?

என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை நான் சந்திக்கக் காரணமாக இருந்தவர் வித்வான் வே. லட்சுமணன். நடிகர் சங்க பத்திரிகையான `நடிகன் குர’லுக்கு போட்டோ எடுத்துக்கொடுக்கும் வேலையை அவர் என்னிடம் ஒப்படைத்தார். நடிகர் சங்கத்துக்கு எம்.ஜி.ஆர். தலைவர் என்பதால் அவரைப் பார்க்க தினசரி அவரது வீட்டுக்குப் போவோம். அப்போது எம்.ஜி.ஆர். `நாடோடி மன்னன்’ படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்துக்கொண்டிருந்தார். அப்போதெல்லாம் விளம்பர ஏஜென்சி வழியாகத்தான் படம் பற்றிய செய்திகளும் படங்களும் போகும். அப்போது மேனேஜராக இருந்த ஆர்.வீரப்பன் மேஜையில் நாடோடி மன்னன் படத்தின் விதவிதமான ஸ்டில்கள் இருந்தன. செய்திகள், படங்களை நான் தரட்டுமா என்று ஆர்.எம்.வீ.யிடம் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.

எனக்குத் தலைகொள்ளாத உற்சாகம். உடனடியாகப் படங்களையும் படம் பற்றிய கூடுதல் செய்திகளையும் சேர்த்துக் கொடுத்ததும் அடுத்த வெள்ளிக்கிழமையில் எல்லா பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் பற்றிய செய்தி வெளிவந்துவிட்டது. விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்துவரச் செய்து பாராட்டினார். இனி நீதான் பத்திரிகை விவகாரம் எல்லாத்தையும் பார்த்துக்கணும் என்றார்.

நாடோடி மன்னன் வெளியாகி 100 நாள் ஓடியதும் அறிஞர் அண்ணா தலைமையில் படத்தில் நடித்த திரைக் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். எம்.ஜி.ஆர். முதல்முறையாக தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவி இயக்குநர்களுக்குக்கூட ஷீல்டு கொடுத்தார். விழா முடிந்து மேடையிலிருந்து எம்.ஜி.ஆர். இறங்கியதும் வித்வான் அவரிடம் விளையாட்டாக, “ஆனந்தனை’ மறந்துட்டீங்களே?” என்றார்.

உடைந்துபோய்விட்டார் எம்.ஜி.ஆர்., “ஆனந்தா உன்னை நான் மறந்திருக்கக் கூடாது. என்னை மன்னிச்சுடுப்பா” என்று அவர் என் கைகளைப் பற்றிக்கொண்டபோது அவர் கண்கள் கலங்கி நா தழுதழுத்துவிட்டது. ஒரு வாரத்தில் தனியே ஒரு ஷீல்டு செய்து என்னை நடிகர் சங்கத்துக்கு அழைத்து எல்லோர் முன்னிலையிலும் கொடுத்து கவுரவம் செய்தார். அன்று அவர் கொடுத்த ஊக்கம் அவரது கடைசி படம் வரை தொடர்ந்தது.

பாலக்காடு சுப்பையா என்னை அழைத்து எனது படத்துக்கு வேலை செய்யுங்கள் என்றார். அந்தப் படம் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்த ‘ நாட்டுக்கொரு நல்லவன்’ அந்தப் படத்தின் டைட்டிலில்தான் ‘பொதுஜனத் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன்’ எனப் போட்டார். பிரஸ் ஷோவில் என் பெயரைத் திரையில் பார்த்ததும் பத்திரிகைச் சகோதரர்கள் அனைவரும் கை தட்ட நான் அழுதுவிட்டேன். இப்படித்தான் திரைப்பட மக்கள் தொடர்பு என்ற துறை தமிழ் சினிமாவில் பிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x