மும்பை மசாலா: பாராட்டு மழை

மும்பை மசாலா: பாராட்டு மழை
Updated on
2 min read

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரியங்காவும், தீபிகாவும் ஹாலிவுட்டில் தடம் பதிப்பதைப் பாராட்டியிருக்கிறார்.

அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் ‘குவாண்டிகோ’வில் நடித்து பிரபலமடைந்த பிரியங்கா தற்போது ஹாலிவுட்டில் ‘பேவாட்ச்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தீபிகாவும் வின் டீசலுடன் ‘எக்ஸ்எக்ஸ்எக்ஸ் - தி ரிட்டர்ன் ஆஃப் ஜாண்டர் கேஜ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

“அவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் வெற்றிகரமாகச் செயல்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இருவரும் விரைவில் இங்கே திரும்பிவிடுவார்கள் என்று நம்புகிறேன். என்னை விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் பன்சாலி.

தன் அடுத்த படத்திலும், ரன்வீர் சிங்கையும், தீபிகாவையும் பன்சாலி நடிக்கவைப்பார் என்று எதிர்பார்க்கிறது பாலிவுட். ஆனால், இந்தத் தகவலை மறுத்திருக்கிறார் பன்சாலி.

‘ரங்கூன்’ சவால்

ஷாஹித் கபூர் ‘ஹைதர்’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் விஷால் பரத்வாஜுடன் இணைந்திருக்கும் படம் ‘ரங்கூன்’. இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் ஷாஹித். “ஒருவழியாக மிகவும் சவாலான, கடினமான ‘ரங்கூன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார் ஷாஹித். அத்துடன், படப்பிடிப்பின்போது எடுத்த ஒரு படத்தையும் தன் பக்கத்தில் போட்டிருக்கிறார் ஷாஹித்.

ஷாஹித், இந்தப் படத்தில் சைஃப் அலி கான், கங்கனாவுடன் இணைந்து நடித்திருப்பதால் படத்துக்கு பாலிவுட்டில் கூடுதல் எதிர்பார்ப்பு. இரண்டாம் உலகப் போரின்போது நடக்கும் ஒரு காதல் கதையாக ‘ரங்கூன்’ இருக்கும். ஷாஹித், போர் வீரனாக நடித்திருக்கிறார். செப்டம்பர் 30-ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ‘ஆஷிக்கி 2’ மேஜிக்?

‘ஆஷிக்கி 2’ படத்தில் நடித்த மேஜிக் கூட்டணியான ஷ்ரத்தா -ஆதித்யா இருவரும் ‘ஓகே ஜானு’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர். ‘ஓகே கண்மணி’ யின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க ஷாத் அலி இயக்குகிறார். “மீண்டும் எங்கள் இருவரையும் திரையில் பார்ப்பதை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், ‘ஆஷிக்கி 2’ அளவுக்கு தீவிரமான காதல் கதையாக இருக்காது” என்று சொல்கிறார் ஷ்ரத்தா.

‘சாத்தியா’ பாணி காதல் கதையாக இதைக்கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்துவருகிறார் இயக்குநர் ஷாத். பாலிவுட்டுக்கு ‘லிவ் இன் ரிலேஷன்ஷிப்’ கதை புதிது இல்லைதான். ஆனால், ‘ஆஷிக்கி 2’ ஜோடி ‘ஓகே ஜானு’விலும் அந்த மேஜிக்கை உருவாக்கும் என்று நம்புகிறது பாலிவுட்.

படங்களை எண்ணும் சஞ்சய்

நல்ல நடத்தைக்காகச் சிறையிலிருந்து முன்னதாகவே விடுதலையான சஞ்சய் தத்தைத் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க விடுவதாக இல்லை பாலிவுட்காரர்கள். சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த அவர் தற்போது புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவரை மூன்று படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அவர், முதலில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில். 50 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான காதல். அந்த இளம்பெண்ணாக 27 வயது ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in