

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் தமயந்தி. பத்திரிகையாளர், பண்பலை தொகுப்பாளர், ஆவணப்பட இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். தான் எழுதிய ‘தடயம்’ என்கிற சிறுகதையை அதே தலைப்பில் ஒரு மணி நேரப் படமாக்கி இயக்குநராகவும் அடியெடுத்துவைத்தார். தற்போது ‘காயல்’ என்கிற தன்னுடைய இரண்டாவது படைப்பை, முழு நீளத் திரைப்படமாக இயக்கி முடித்துவிட்டார். அது பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
உங்களுடைய முதல் பட முயற்சியும் அதற்கான வரவேற்பும் எப்படி அமைந்தன?
‘தடயம்’ கிரவுட் ஃபண்டிங் மூலம் உருவானது. பணம் முதலீடு செய்தவர்கள், செளபா அண்ணன், ஒளிப்பதிவாளர் ஆண்டனி போன்றோர் உதவவில்லை என்றால் அந்த முயற்சி சாத்தியப்பட்டிருக்காது. ஆனந்த விகடனில் அது சிறுகதையாக வெளியானபோது வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தில் அக்கதாபாத்திரங்களுக்கு, கனி குஸ்ருதி , கணபதி முருகேசன் மிக அற்புதமாக உயிர் கொடுத்திருந்தனர். இருவர் மட்டுமே ஒரு திரைப்படத்தில் நிறைந்திருக்க முடியும் என நான் நம்பினேன். அது வர்த்தகப் படமல்ல. ஆனால், நிறைய வரவேற்பைப் பெற்றது.
ஒரு பாடலாசிரியராக உங்களுடைய பயணம் எப்படிச் செல்கிறது?
பாடல் எழுதுவதென்றால் சிறுவயதி லிருந்தே பிடிக்கும். ஆனால், சினிமாவில் பணியாற்றும் சூழலெல்லாம் அத்தனை எளிதாய் வாய்க்கவில்லை. இயக்குநர் மீரா கதிரவன் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தில் முதல் பாடல் வாய்ப்பைக் கொடுத்தார். சைமன் கே கிங் பல வாய்ப்புகள் கொடுத்தார். ஆண்ட்ரூ இயக்கிய ‘கொலைகாரன்’ படப் பாடல்கள், இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் இடம்பெற்ற ‘மைலாஞ்சி..’ என்கிற பாடல் பிரபலமாயிற்று. ‘காய’லில் ரமேஷ் வைத்யாவும் நானும் பாடல்களை எழுதி இருக்கிறோம். அவற்றில் ‘கண்மணியே கண்மணியே’, ‘காயல் பறவை’ ஆகிய பாடல்கள் என் மனதுக்கு நெருக்கமானவை. வாழ்விலிருந்து எடுக்கப்படும் வார்த்தைகள் பாடல்களில் இடம்பெறும் போது பிரத்யேகத் தன்மை பெறுகின்றன.
‘காயல்’ படமும் சிறுகதையிலிருந்தா? கதை எங்கே நடக்கிறது?
‘காயல்’ திரைப்படம் என் மனதினுள் வெகுகாலம் இருந்த கதைதான். கதை என்பதைக் காட்டிலும் வாழ்க்கை என்று சொல்வேன். எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. அங்கே, சாதி வாழ்க்கையைக் கூறுபோட்டபடிதான் இன்றும் உள்ளது. அதன் நிழல், வாழ்வை எவ்வளவு சிதிலமடையச் செய்கின்றது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் நியாயமாக கருதும் வாழ்வு ஒருபுறம். அவ்வாறு வாழ்வதால் குடும்பங்களுள் உறைந்த மவுனங்கள் மறுபுறம். இதன் நடுவில் ஊசலாடும் வாழ்க்கை தான் ‘காயல்’. இப்படம் தமிழ்ச் சூழலில் சாத்தியமாக ஜே ஸ்டூடியோஸின் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறனை முக்கியமாகச் சொல்ல வேண்டும். வெகுஜன சினிமாவில் இத்தகைய புதிய கதைகளை எப்படி எதிர்கொள்வார்கள் என நான் அறிவேன். அதேபோல் இயக்குநரின் முடிவுகளையும் மதிக்கும் தயாரிப்பாளர் எனக்குக் கிடைத்தது பெரும் வரம்.
மலையாளம், தமிழ் என இம்முறை பிரபலமான நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். எப்படியிருந்தது ஒத்துழைப்பு?
இந்தக் கதையை ‘ஒன் லைன’ராக கேட்ட போதே ஓர் ஒற்றைப் புன்னகையைச் செலுத்தி “எப்ப இத எடுத்தாலும் சொல்லுங்க… நான் நடிப்பேன்” என்று சொன்ன அனு மோள், அதே போல் நடித்துக் கொடுத்தார். ஐசக் வர்கீஸை நீங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நிறைய பார்த்திருப்பீர்கள். அவரிடம் நான் தமிழ் மகள்கள் நேசிக்கும் ஓர் அப்பாவைப் பார்த்தேன். காயத்ரி மிக முக்கியமான அச்சாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாடகராக இருக்கும் சுவாகதா இதில் துறுதுறுப்பான பெண்ணாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நச்சென்று வருகிறார் ரமேஷ் திலக். இத்திரைப்படத்தின் நாயகன் லிங்கேஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், எல்லா பெண்களும் தங்கள் வாழ்வில் நேசிக்க விரும்பும் ஓர் ஆணைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் முன்னால் நடிக்க ஒப்பந்தமான லிங்கேஷ், அந்தக் கதாபாத்திரத்தின் உயிர்ப்பைத் தன்னுள் சுமந்தபடியே இருந்ததை மறக்கமுடியாது.
உங்களுடைய தொழில்நுட்பக் குழு பற்றி..
என்னுடன் ஹலோ எஃப் எம் வானொலியில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றிய ஜஸ்டின் கெனன்யா தான் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பாரதியின் ‘பாயும் ஒளி’ பாடலுக்கு இசையமைத்திருப்பதுடன் படத்துக்குப் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சுதர்சன் எம். குமார். ப்ரவீண் பாஸ்கர் எடிட் செய்ய, கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பெண்களின் எல்லா வண்ணங்களையும் படைப்பில் கொண்டுவருபவர் நீங்கள்.. ‘காயல்’ படத்திலும் அதை எதிர்பார்க்கலாம் அல்லவா?
நிச்சயமாக.. பெண்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. அவர்களுக்குப் பிடித்த வானத்தை அவர்கள் எத்தனை முறை தரிசித்திருப்பார்களென்பது தெரியாது. அவரவர் வானத்தின் சுகந்தத்தை நுகர்ந்த பெண்களுக்கே இத்திரைப்படத்தை நான் சமர்ப்பித்திருக்கிறேன்.