

சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தில் ஓடியாடி நிவாரணப் பணிகள் செய்தனர் பல முன்னணி நட்சத்திரங்கள். காட்டமான அறிக்கை காரணமாக கமல் ஒருபக்கம் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள, ரஜினியைக் காணோமே என்று தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சத்தமேயில்லாமல் அவர் ஒரு காரியம் செய்திருக்கிறார். குப்பை மேடாக மாறிய வெள்ளம் பாதித்த பகுதிகளைத் தூய்மைப்படுத்தத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 1000க்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்குச் சரியான தங்குமிடம் இல்லை என்று கேள்விப்பட்ட ரஜினி, உடனடியாக தனது மண்டபத்தை அவர்களுக்குத் திறந்து விட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ‘கபாலி’ படத்தில் நடித்துக் கொண்டே ‘எந்திரன் 2’ படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்யுமளவுக்கு உற்சாகமாக வலம் வருகிறாராம் ரஜினி.
கோவாவில் முகாம்
‘கபாலி' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை, மலேசியா ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா வேடத்தில் நடிக்கிறார். சென்னையின் ஹை-பை டானாக இருக்கும் அவரது மகளை மலேசியாவுக்குக் கடத்திச் சென்று விடுகிறார்கள். அதன் பின்னணியில் ஒரு பெண் இருக்கிறார். இதையறிந்து மலேசியா செல்லும் ரஜினி தனியாளாக மகளை எப்படி மீட்டு வருகிறார் என்பதுதான் கபாலி படத்தின் கதையாம்.
மலேசியப் படப்பிடிப்பில் வெள்ளை நிற தாடி தோற்றத்துடன் நடித்த ரஜினி, கோவா படப்பிடிப்பில் தாடியை எடுத்துவிட்டு நடித்து வருகிறாராம். இந்தப் படத்தில் ‘ பரதேசி, ‘மெட்ராஸ்’படங்களின் மூலம் புகழ்பெற்ற ரித்விகா வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியின் மகளாக தன்ஷிகாவும் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார்கள்.
வெளியேறிய ஆர்னால்ட்
‘எந்திரன் 2’ படத்தின் செய்தி கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு வெளியானபோது வதந்தி என்றே ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், லைக்கா புரொடக் ஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த பிறகு எந்திரன் 2 பற்றிய எதிர்பார்ப்பு கூட ஆரம்பித்தது.
இதுவரை ‘எந்திரன் 2’ படத்துக்காக உறுதியாகியிருக்கும் விஷயங்கள் இவைதான்: ரஜினி ஹீரோ, எமி ஜாக்ஸன் ஹீரோயின், வில்லனாக நடிக்க ஆர்னால்ட் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் நீடித்ததால் அவருக்குப் பதிலாக தற்போது அக்ஷய்குமார் மற்றும் ஹ்ருத்திக் ரோஷன் ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது முடிவாகிவிட்ட நிலையில் மற்ற அம்சங்களுக்குத் தனது வழக்கமான டெக்னீஷியன்களையே பயன்படுத்த ஷங்கர் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள். இந்தப் படத்தில் முதன்மை வில்லனாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் இரண்டாவது வில்லனாக, ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் தேர்வாகியிருக்கிறார் என்கிறார்கள்.
இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர் தனது முகநூல் பக்கத்தில் ‘எந்திரன் 2’ தற்போது வெளியிட்டிருக்கும் தகவல் ஷங்கர், ரஜினி ஆகிய இருதரப்பு ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. “ Endran 2.0 shoot starts from tomorrow ... Excited!!!” என்ற தகவலை பதிவிட்டு, எந்திரன் 2 படப்பிடிப்பை உறுதி செய்துவிட்டார். இனி வரிசையாகத் தகவல்கள் குவியும் என்று எதிர்பார்க்கலாம்.