

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தன்னுடைய 65-வது படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் தலைப்புச் சூட்டப்படாத இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழு மொத்தமாகக் குவிந்த இந்தப் பட பூஜையில் கதாநாயகி பூஜா ஹெக்டே மட்டும் இல்லை. சென்னையில் ஓரிரு தினங்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்திவிட்டு, ரஷ்யாவுக்குச் செல்கிறது படக்குழு. அங்கே இணைந்துகொள்ளவிருக்கிறாராம் பூஜா. கதாநாயகி தவிர்த்த மற்ற நடிகர்களின் பட்டியலை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது படக்குழு. பூஜா ஹெக்டே
பரப்புரையும் அபராதமும்
பிக்பாஸ் டைட்டில் வின்னர், நடிகர் ஆரியை நடிக்கவைத்து விழிப்புணர்வுப் பிரச்சாரக் காணொலி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். ‘நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க’ என்று முகக் கவசம் அணியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் ஆரி கேட்கொள்வதுபோன்ற காணொலி அது. இது ஒருபக்கம் இருக்க, பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துவரும் தலைப்பு சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகேயுள்ள காரமடையில் நடந்துள்ளது. அங்கே வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் படக்குழுவைச் சேர்ந்த யாரும் முகக்கவசம் அணியாததைக் கண்டு உடனடியாக அபராதம் விதித்திருக்கிறார்கள்.
இடம்பெயர்ந்த மாளவிகா
‘பேட்ட’, ‘மாஸ்டர்’ என இரண்டு பெரிய கதாநாயகர்களின் படங்களில் நடித்தும் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தனது அதிரடியான போட்டோ ஷூட் படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் தினம் தினம் வெளியிட்டு வந்தார். அப்படியும் எந்த அழைப்பும் இல்லாமல்போக, ‘தனுஷுடன் நடிப்பது எனது லட்சியம்’ என்று சமூக வலைதளத்தில் ட்வீட் போட, உடனே அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. நரேன் கார்த்திகேயன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார். இது நடந்து மூன்று மாதங்கள் ஆகியும் வேறு பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தியில் தயாராகும் இணையத் தொடரில் நடிக்க இடம்பெயர்ந்துவிட்டார்.