திரை வெளிச்சம்: தீவில் ரஜினியின் தீபாவளி!

திரை வெளிச்சம்: தீவில் ரஜினியின் தீபாவளி!
Updated on
1 min read

தனக்கு தீபாவளியை விட நடிப்பே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறார் ரஜினி. கடந்த நவம்பர் 6-ம் தேதி தொடங்கி மலேசியாவின் க்வால லங்காட் மாவட்டத்தில் உள்ள கேரித் தீவில் கபாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. தினசரி படப்பிடிப்பு முடித்ததும் ஆம்வெர்டன் கோவ் கோல்ஃப் என்ற நட்சத்திர தீவு ரிசார்ட்டில் தங்குகிறார் ரஜினி. இது க்வால லாங்காட்டின் மாவட்டத் தலைநகரமான பந்திங்கில் இருக்கிறது.

தீபாவளியன்று காலை 8.30 மணிக்கு கபாலி படக்குழுவினர் 35 பேருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய ரஜினி, படக்குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், கேக் வெட்டும் முன்னர் ஜெபம் செய்வதுபோல பிரார்த்தனை செய்திருக்கிறார் ரஜினி. படப்பிடிப்புக்கு வரும் ரசிகர்களை விரட்ட வேண்டாம் என்று ரஜினி கறாராகச் சொல்லிவிட்டாராம்.

அதேபோல தன்னைக் காணவரும் ரசிகர்களுடன் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆனாலும் அனைவருடனும் தோள் மீது கை போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். 60 வயதுப் பெண் ஒருவர் ரஜினியைப் பார்ப்பதற்காகக் காலைமுதலே காத்திருந்திருக்கிறார். மாலை ஐந்து மணிக்குப் படப்பிடிப்பு முடிந்ததும் ரஜினியை சந்தித்த அவர் “உங்களைப் பார்ப்பதற்காக மதியம் சாப்பிடச் செல்லாமல் காத்திருந்தேன்” என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு வருந்திய ரஜினி “உங்களைக் காத்திருக்க வைத்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தியைப் போலவே மலேசிய பத்திரிகைகளை ஆக்கிரமித்திருக்கும் இன்னொரு செய்தி, சமூகநல அமைப்புகளின் அறிக்கைகள். “ ரஜினி நம் நாட்டின் விருந்தாளி. அவரைக் கூட்டம் கூட்டமாகச் சென்று வேடிக்கை பார்த்துவருவது நம் நாட்டின் பெருமைக்கு உகந்தது அல்ல. மேலும், ரஜினியும் நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்” என்ற தொனியில் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார்களாம். அப்படியும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.

தற்போது தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட இரவு விடுதிகளில் ரஜினி பாடல்களே ஒலித்துவருகின்றன. அங்கே இரவு விடுதிகளில் ரஜினியின் பாடல்களைப் பாடிவரும் ‘மின்னல்’ ரஜினி என்ற பாடகருக்கு வாய்ப்புகள் குவிந்துவருவதாகச் சொல்கிறார்கள்.

இன்றுடன் கேரித் தீவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கோலாலம்பூரில் நவம்பர் 21-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தவுள்ள அவர்கள், அதன் பின்பு பேங்காக், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பைத் தொடர இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in