நாள் முழுக்க சிரிச்சுகிட்டே இருக்கேன்! - விஷ்ணு விஷால் பேட்டி

நாள் முழுக்க சிரிச்சுகிட்டே இருக்கேன்! - விஷ்ணு விஷால் பேட்டி
Updated on
2 min read

'தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு ஹாட்ரிக் ஹீரோ கிடைத்திருக்கிறார்.

‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய தொடர் வெற்றிகளைக் கொடுத்த பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். ‘வீர தீர சூரன்’, எழில் இயக்கத்தில் புதிய படம் என்று பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தவர் படப்பிடிப்பு இடைவேளையில் கொஞ்சம் நின்று நிதானித்து நம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தொடர்ச்சியான வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வது ஒருவித சவால்தான் இல்லையா?

கண்டிப்பாக. ஒரு படத்தின் கதையை மட்டும் வைத்து இந்தப் படம் வெற்றிப்படம்தான் என்று அடித்துச் சொல்ல முடியாது. அந்தப் படம் பள்ளி, கல்லூரி விடுமுறையில் வருகிறதா? திருவிழா நாட்களில் வருகிறதா? எத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறது, அதில் ரசிகர்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் இருக்கிறதா இப்படிப் பல விஷயங்கள் முக்கியம்.

நான் என் கேரியரில் மொத்தமாக இருபது படங்கள் மட்டுமே நடித்தாலும் அவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை ஈர்த்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சியில் நான் நடித்த படத்தை பார்த்தாலும் இது ‘நல்ல படமாச்சே’ என்று சேனலை மாற்றாமல் பார்க்க வேண்டும். அப்படித்தான் எனது படங்களைத் தேர்வு செய்துவருகிறேன். ஆனால் கொஞ்சம் காமெடி கலந்த கமர்ஷியல் கதைகள் மீதும் தற்போது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போது நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ மற்றும் எழில் இயக்கத்தில் தயாராகிவரும் படங்களின் கதை என்ன?

இரண்டுமே காமெடி கலந்த ஜனரஞ்சகமான கதைகள். எழில் படத்தில் ஊர் எம்.எல்.ஏ.வோட ரைட் ஹேண்ட் மாதிரி வருவேன். இந்தப் படத்தில் ஹீரோயின் நிக்கி கல்ராணிக்கு போலீஸ் கேரக்டர். ஒரு பக்கம் நாயகன் எம்.எல்.ஏ. ரைட் ஹேண்ட், மற்றொரு பக்கம் நாயகி போலீஸ். இவர்கள் இருவருக்குமான சந்திப்புகள் கலகலப்பா புதுசா இருக்கும். ‘வீர தீர சூரன்’ படமும் காமெடி கதைதான்.

ஆனால் இதுல குடும்பம், அம்மா செண்டிமென்ட் என்று வித்தியாசமாக இருக்கும். பயம் பயம் என்று பொத்திப் பொத்தி வளர்ந்த ஒரு பையன் தனியா வாழ வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. இரண்டும் மாஸ் படம் அல்ல, மாஸ் ஆடியன்ஸை டார்கெட் செய்யும் கெத்தான கமர்ஷியல் படங்கள். இரண்டிலும் சூரி எனக்கு நண்பன். ஆக மொத்தம் கலகலப்பான காமெடிக்கு நாங்க கேரண்டி.

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவந்த நீங்கள் வணிகப் படங்களை நோக்கி நகர்ந்தது ஏன்?

‘நீர்ப்பறவை’ படத்தில் மீனவனின் வாழ்க்கை, ‘ஜீவா’ படத்தில் கிரிக்கெட் உலகம், ‘இன்று நேற்று நாளை’ படத்தில் டைம்மிஷின் என்று இதற்கு முன் தொட்ட ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைக் களம். போரடிக்காமல் மெசேஜ் சொல்லும். அதேநேரம் பொழுதுபோக்கு, கமர்ஷியல் விஷயங்களை எதிர்பார்த்தும் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்களிடமும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் அடுத்தடுத்து ‘இன்று நேற்று நாளை’ மாதிரி வித்தியாசமான கதைக் களத்தில் இறங்கும்போது அவர்களையும் நான் தியேட்டருக்கு அழைத்து வர முடியும். அதனால்தான் இரண்டு பாதைகளிலும் பேலன்ஸ் செய்து நடிக்கத் திட்டமிட்டேன். அந்த அடிப்படையில் இப்போது காமெடியை மையமாக வைத்த கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

விஜய், அஜித்தை உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை இயக்கியவர் எழில். அவருடைய இயக்கத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

வீட்டுக்கு வரும்போது ரிலாக்ஸா வருவேன். ‘என்னடா… இவ்ளோ ஹேப்பியா வர்றே’ என்று அப்பாகூட கேட்பார். படப்பிடிப்பில் நாள் முழுக்க சிரிச்சுக்கிட்டே இருந்தால் ஹேப்பியாகத்தானே வர முடியும். எழில் தங்கமான மனிதர். டென்ஷன் இல்லாமல் வேலை பார்ப்பவர். அதுக்காகவே அவருக்கு தேங்க்ஸ் சொல்லனும்

ஸ்ரீதிவ்யா, கேத்தரின் தெரஷா, நிக்கி கல்ராணி என்று கலர்ஃபுல் நாயகிகள் ஜோடி சேர்கிறார்கள். ஆனால் உங்கள் நண்பர் ஆர்யா மாதிரி நீங்கள் கிசுகிசு எதிலும் சிக்குவதில்லையே?

கல்யாணம் ஆகிடுச்சே. ஆர்யா என்ன வேணும்னாலும் செய்யலாம். அவர் பேச்சுலர். அதுவும் ஜாலியான நண்பன். நம்மைக் கண்டிக்க வீட்டில் ஆள் இருக்காங்களே. ஷூட்டிங் போவதுக்கும், வருவதற்குமே நேரம் சரியா இருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி கிசு கிசு எல்லாம் வரும்.

உங்கள் நண்பர் விஷால் மாதிரி படம் தயாரித்து நடிக்கும் திட்டம் இல்லையா?

விஷால் 20 படங்கள் நடிச்சிட்டார். நான் 10 படங்களைத் தாண்டப்போறேன். அவரோட சினிமா அனுபவம், இடம் இது எல்லாமே வேறு. தயாரிப்பு என்றால் முதலில் சினிமா வியாபாரம் பற்றி தெரிஞ்சுக்கணும். அதையெல்லாம் விஷால், தனுஷ் மாதிரி நண்பர்கள் சரியாக செய்துவருகிறார்கள். இப்போதைக்கு எனக்கு அந்த ஐடியா எதுவும் இல்லை. நடிப்பில் மட்டும்தான் என் கவனம் இருக்க வேண்டும். விஷால் தயாரிப்பில் நானும், விக்ராந்தும் ஒரு படம் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதுக்கான கதை இன்னும் அமையவில்லை. அதைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்.

அடுத்து?

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து புதிதாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒன்று ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் படம். மற்றொன்று புதிய இயக்குநரின் படம். இது இரண்டுமே இப்போது நடித்து வரும் காமெடி களத்திலிருந்து மாறுபட்ட கதைக் களங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in