கோலிவுட் கிச்சடி: உருமாறும் த்ரிஷா!

கோலிவுட் கிச்சடி: உருமாறும் த்ரிஷா!
Updated on
2 min read

50-வது படத்துக்கான கதை தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று தேடிவந்தாராம் த்ரிஷா. இந்த நேரத்தில்தான் கோவி என்பவர் சொன்ன கதை த்ரிஷாவை “ஆஹா!” சொல்ல வைத்ததாம். ஹாலிவுட்டில் எத்தனையோ ஹாரர் காமெடிப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழுக்கு அப்படியொரு வாசனையே இதுவரை காட்டப்படவில்லை. அதை ‘நாயகி’ நிறைவேற்றும் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

கதாநாயகியைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்காக தன்னைத் தயார்படுத்தி வரும் த்ரிஷா, விரைவில் இந்தப் படத்தில் ஒரே மூச்சில் நடித்து முடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்துக்காக இதுவரை இல்லாத வண்ணம் புதிய உடல்மொழியை வெளிப்படுத்தி நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். த்ரிஷாவிடம் சிக்கிப் பரிதவிக்கப்போகும் அந்த ஹீரோ கணேஷ் வெங்கட்ராம் என்கிறார்கள்.

கமல் விரும்பும் விளம்பரம்!

வர்த்தக விளம்பர உலகில் கமல் கால் பதித்திருப்பதை பேசித் தீர்த்துவிட்டார்கள் கோலிவுட்டில். ஆனால் சத்தமில்லாமல் சமூக முன்னேற்றதுக்கான விளம்பரங்களில் காலம்தோறும் தன் முகத்தையும் தன் தனித்த ’குரலை’யும் தருவதில் கமலுக்கு நிகர் கமல்தான்.

தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியத்தை நச்சென்று சொன்ன கமல், தற்போது பெண் குழந்தைகளை கருவிலேயே கொலைசெய்வதற்கு எதிராகத் தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது படங்களின் ட்ரைலர்களைப் போலவே அவர் தரும் சமூக விளம்பர வீடியோக்களும் யூடியூப்பில் ஹிட்டடித்துவிடுகின்றன.

பிஸி ஐஸ்வர்யா!

பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் ‘காக்கா முட்டை’ படத்தில் குடிசைப்பகுதி அம்மாவாக நடித்து பாராட்டுகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் தற்போது வரிசையாகப் படங்கள். ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’, என்றென்றும் புன்னகை அகமது இயக்கும் புதிய படம், அருள்நிதி ஜோடியாக ‘ஆறாது சினம்’ என நடித்துவரும் ஐஸ்வர்யா அடுத்து வரும் இரண்டு வருடங்களில் பாலா இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறாராம்.

இன்று வேதாளத்தின் இசை

அஜித் நடிக்கும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இந்நிலையில் படத்தின் இசை இன்று வெளியாக இருக்கிறது. இதனை, படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதுவரை காத்திருக்க முடியாது என ஜாலியாகப் பதிலளித்துள்ளார் நடிகர் தனுஷ். அதேபோல் படத்தின் பாடல்கள் வெற்றிபெற நடிகர் சிவகார்த்திகேயனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரொமாண்டிக் பாடல்களாக இசையமைத்து வரும் அனிருத் இந்தப் படத்தில் துள்ளலான பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாகக் கூறியுள்ளார். விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா.

மதுரையில் சேதுபதி

ஆயுதபூஜை தினத்தன்று வெளியாகிறது விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்திருக்கும் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம். விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்துடன் மோதுகிறது இந்தப் படம். இதில் காதுகேளாத பெண்ணாக வரும் நயன்தாராவைக் காதலிக்கும் டை கட்டிய ரவுடியாக நடித்திருக்கிறாராம் விஜய்சேதுபதி. இதைவிடச் சூடான செய்தி இவர் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சேதுபதி என்ற தலைப்புடன் உருவாகிவரும் இந்தப் படத்தை இயக்குபவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட இயக்குநரான அருண்குமார். மதுரையைக் கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தில் சேதுபதிக்கு ஜோடி பீட்சாவில் இணைந்து நடித்திருந்த ரம்யா நம்பீசன்.

முதல்வரைக் கடத்தும் சிம்ஹா!

படம் வெளியாகி எந்தப் படத்திலிருந்து சுட்டது என்பதை நெட்டிசன்கள் சொல்லும்வரை இயக்குநரும், தயாரிப்பாளரும் ‘சுட்ட கதையை’ சொல்லவே மாட்டார்கள். அதையும் தாண்டி சில படங்களின் பூர்வீகம் புலப்பட்டுவிடும். பாபிசிம்ஹா நடித்து வரும் கோ 2 படத்தின் கதை, முதலமைச்சரை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்வதுதான் என்கிறார்கள். பிரகாஷ்ராஜ் முதல்வர் வேடத்திலும் பாபி சிம்ஹா தொலைக்காட்சி நிருபர் வேடத்திலும் நடித்திருப்பதாகத் தகவல். இதற்கிடையில் இந்தப் படம் தெலுங்கில் ரிலீசான ‘பிரதிநிதி’ படத்தின் மறுஆக்கம் என்றும் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in