கோலிவுட் கிச்சடி! - விருதும் வசூலும்!

கோலிவுட் கிச்சடி! - விருதும் வசூலும்!
Updated on
2 min read

வசூல் கொழிக்கும் வணிகப் படங்களை மாஸ் ஹீரோக்கள் விரும்பி நடித்துத் தயாரிப்பது புதிதல்ல. அதேநேரம் அர்த்தமும் ஆழமும் மிக்க படங்களையும் நடித்துத் தயாரிப்பது என்ற கொள்ளை கொண்டவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது சூர்யா இந்த விஷயத்தில் அலட்டிக்கொள்ளாமல் ஆர்வம் காட்டுகிறார். பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் விதமாக ‘ 36 வயதினிலே’ படத்தைத் தயாரித்த சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ படத்தை அவருடன் சேர்ந்து தயாரித்திருக்கிறார். தமிழில் ஒரு ‘தாரே ஜமீன் பார்’ என்று படத்தின் ட்ரைலருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்தப் படம் விருதுகளை மட்டுமல்ல வசூலையும் அள்ளிக்கொண்டு வரும் என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.

விஜய் அடுத்து...

புலி படத்தைத் தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் தனது 59-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். ‘காக்கி’ எனத் தலைப்பு சூட்ட இயக்குநர் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் நாயகிகளாக நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60-வது படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் கடந்த வாரம் விஜயை நேரில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ‘தனியொருவன்’ வெற்றியைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நிற்கும் இயக்குநர் மோகன் ராஜா. ‘இது ஒரு நட்பு ரீதியிலான சந்திப்பு. விஜய்யும் நானும் இணைந்து படம் உருவாக்குவது குறித்து இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது’ என்று அவர் கூறியிருந்தாலும் மீண்டும் அவர்கள் இணைவது உறுதி என்கிறது விஜய் வட்டாரம்.

சூது வாது

இருபது ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் விவேக்கை, முழுநீளக் குணச்சித்திரமாக ’நான்தான் பாலா’ படத்தின் மூலம் சித்தரித்தார் அறிமுக இயக்குநர் கண்ணன் ராஜமாணிக்கம். தற்போது இவர் கிராமத்து யதார்த்த வாழ்வியல் கதையொன்றை இயக்கிவருகிறார். ’சூது வாது’ என தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் சரவணன் என்ற புதுமுகத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ’டூரிங் டாக்கீஸ்’ படத்தில் சுனு லக்ஷ்மி கதாநாயகி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நண்டு ஜெகன் நடித்துவருகிறாராம். இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்த பலர் இந்தப் படத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கும் ‘ஆச்சார்யா’ ரவி

மீண்டும் கூட்டணி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் அறிமுகப்படுத்த இருக்கிறார் என்ற செய்தியை ‘தி இந்து டாக்கீஸ்’ முந்தித் தந்தது நினைவிருக்கலாம். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு இசையமைக்க ஹாரீஸ் ஜெயராஜை அழைத்திருக்கிறாராம் முருகதாஸ். கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என முருகதாஸ் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவந்தார். ஹாரீஸ். ஆனால் ‘கத்தி’ படத்துக்கு அனிருத் இசையமைத்தார். தற்போது தன் மனம் கவர்ந்த ஹாரீஸையே மீண்டும் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துவிட்டாராம் முருகதாஸ்.

கமலுக்குப் பிடித்த ஆக்‌ஷன் கதை!

கௌதம் மேனன் தற்போது இயக்கிவரும் 'அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடித்துவிட்டுக் கமலை இயக்குவார் எனத் தெரிகிறது. இதுவொரு அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் என்றும் இதுவரை இல்லாத வண்ணம் இதில் சண்டைக் காட்சிகள் மற்றும் சேஷிங் காட்சிகள் அமைய இருப்பதாகவும் தெரிகிறது. கௌதம் மேனன் சொன்ன ஆக்‌ஷன் பிளாக்குகள் கமலுக்கு பிடித்துப்போனதால் படத்தின் முன் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கச் சொல்லிவிட்டாராம் கமல்.

மணிகண்டனுக்கு ஜாக்பாட்!

‘காக்கா முட்டை’ படத்தின் வசூல் சாதனை இயக்குநர் மணிகண்டனுக்கு வாய்ப்புகளைக் குவித்துவருகிறது. அனுசரணுடன் இணைந்து கதை, வசனம் எழுதிய ’கிருமி’ படத்தின் வசூலும் மோசமில்லை என்பதால் இன்னொருபக்கம் திரைக்கதை எழுதும் வேலைகளும் அவரை மொய்க்கிறதாம். இதற்கிடையில் அடுத்து விஜய்சேதுபதியை இயக்கும் மணிகண்டனுக்கு அந்தப் படத்தை இயக்கி முடித்த கையுடன் தனுஷை இயக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறதாம். இந்தப் படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் இப்போதே நடந்துவருவதாகச் சொல்கிறார்கள்.

நயன்தாரா 5

நயன்தாராவை சளைக்காமல் பின்தொடரும் சர்ச்சையான செய்திகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன அவர் நடித்து வெளியாகும் படங்களின் வெற்றிகள். 'தனியொருவன்', 'மாயா' ஆகிய படங்களில் நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்த நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தில் காதுகேளாத பெண்ணாக காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் முதல்முறையாக நகைச்சுவை நடிப்பிலும் ஒரு கை பார்த்திருக்கிறார் என்கிறார்கள்.

உடல் எடையை வெகுவாகக் குறைத்து விதவிதமான நவீன ஆடைகளில் இந்தப் படத்தில் தோன்றும் நயன்தாராவுக்கு சமீபகாலமாக நம்பராலஜி மற்றும் ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை வந்திருக்கிறது என்கிறார்கள். சமீபத்தில் நயன்தாரா வாங்கியதாகக் கூறப்படும் பி.எம். டபிள்யூ காருக்கு தனது ராசியான எண் எனக் கருதும் 5-ஐ காரின் எண்ணாகப் பதிவு செய்திருக்கிறாராம். கூடவே சமீபத்தில் வாங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் கதவெண்ணும் 5தான் என்கிறார்கள் நயன்தாராவின் நட்பு வட்டத்தில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in