Published : 25 Sep 2020 09:10 AM
Last Updated : 25 Sep 2020 09:10 AM

விஜய் சேதுபதியைப் பரிந்துரைத்தேன்! - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

தமிழ் சினிமாவின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். வணிக சினிமா நாயகியாக நடித்துவரும் அதேநேரம், பெண் மையப் படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தற்போது விருமாண்டி இயக்கத்தில் ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தில் ஒரு கிராமத்துப் பெண் போராளியாக ‘அரியநாச்சி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண் மையப் படமான இது, ஓ.டி.டி. உள்ளிட்ட மாற்று வெளியீட்டுத் தளங்களில் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘நான் சென்னை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வளர்ந்தவள்’ என்று ‘டெட் டாக்’கில் (TED Talk) பேசியிருந்தீர்கள். தற்போது வெளியாகவிருக்கும் ‘க/பெ.ரணசிங்கம்’ தண்ணீர் பிரச்சினையை மையப்படுத்திய படம் எனும்போது, அது எந்த அளவுக்கு உங்கள் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தது?

உண்மையில் தியாகராய நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்த காலத்தில் தண்ணீர் பிரச்சினை என்பதே இருந்ததில்லை. ஆனால், ‘க/பெ.ரணசிங்கம்’ படத்தின் கதையைக் கேட்டபோது, அதை உணர்ந்தேன். படப்பிடிப்புக்காக ராமநாதபுரம் போனபிறகு, இந்தப் பிரச்சினையை இன்னும் நெருக்கமாக உணர்ந்தேன். அங்கே, ஐந்து பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வரிசையாக அடுக்கி வைத்துத் தள்ளிக்கொண்டு வருகிற ஒரு விநோதமான வண்டியை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்தேன். திருமணமாகிச் செல்லும் பெண்களுக்கு அந்த வண்டியை அங்கே சீதனமாகக் கொடுக்கிறார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக தினசரி ஐந்து மைல் தூரம் போய்வர முடியாதல்லவா?

அங்கே விவசாயம் இல்லை, எங்கு பார்த்தாலும் கருவேல முள் மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. படப்பிடிப்புக்காக ராமநாதபுரம் ஹோட்டலில் தங்கியபோது, அங்கே ஒரு சொட்டு நல்லத் தண்ணீர் இல்லை. உப்புத் தண்ணீரில் குளித்து உடம்பெல்லாம் ‘ராஷஸ்’ வந்துவிட்டது. உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தபோதுதான், நல்ல தண்ணீரின் அருமை புரிந்தது. ‘தண்ணீர் பஞ்சம்’ என்று நாம் சொல்வது ஈஸி; ஆனால், அதை அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அந்த வலி, வேதனை தெரியும். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் வீட்டிலுள்ள குழாயில் தண்ணீர் கொஞ்சம் வீணாகக் கொட்டினாலும் மனம் பதறிவிடுகிறது. இந்தப் படத்துக்குப் பின்னர், ‘தண்ணீர் பஞ்சம்’ பற்றிய எனது பார்வை அடியோடு மாறிவிட்டது.

அப்படியானால், தண்ணீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறிவிட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்; அதேபோல், சர்வதேச அரசியலில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தண்ணீரே இருக்கிறது. அதைப்பற்றி எந்த அளவுக்குப் புரிதல் உண்டு?

அரசியல்ரீதியாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் பஞ்சத்தை நாம் தீவிரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்கிற புரிதல் இருக்கிறது. ஒரு லிட்டர் குடிநீரை இருபது ரூபாய் கொடுத்து வாங்குகிற நிலையில்தான் நாம் இருக்கிறோம். அதே தண்ணீரை ஸ்டார் ஹோட்டலில் பல மடங்கு விலைக்கு விற்கிறார்கள். இந்த நிலைக்கு நம்மிடம் விழிப்புணர்வு இல்லாததும், இருக்கும் தண்ணீர் மாசடைந்துவிட்டதும்தான் காரணம்.

நல்ல தண்ணீர் இல்லை என்கிறபோது, அதன் மதிப்பு உயர்ந்துவிடுகிறது இல்லையா? இந்தப் படத்தில்கூட இயக்குநர் விருமாண்டி ‘தண்ணீரையும் காத்தையும் வெச்சுத்தான் வருங்கால அரசியலே இருக்கு’ என்று வசனமே வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு, ராமநாதபுரம் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் இல்லை; அங்குள்ள தண்ணீர் பஞ்சம் நம்மை நெருங்கி வந்துவிடும் என்கிற பயம் உருவாகிவிட்டது.

இயக்குநரைப் பற்றிக் கூறுங்கள்?

‘அறம்’ படத்தின் இணை இயக்குநர். உதவி இயக்குநராக 20 வருட அனுபவம் கொண்டவர். தமிழ் ரசிகர்கள் நன்கு அறிந்த முதுபெரும் கலைஞர் பெரிய கருப்புத் தேவரின் மகன். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். தண்ணீர் பஞ்சத்தின் பின்னணியை நேரடியாக அறிந்தவர். அவர் கதை சொல்லத் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே இந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்துவிட்டேன்.

கதையைக் கேட்டபின் அதில் வரும் ‘ரணசிங்கம்’ கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியை நீங்கள்தான் பரிந்துரை செய்தீர்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறாரே, உண்மையா?

ஆமாம். கதையைக் கேட்கும்போதே ரணசிங்கம் கேரக்டருக்கு விஜய் சேதுபதிதான் மனதில் வந்து நின்றார். அவரோடு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். பர்செனலாக அவரை எனக்கு நன்கு தெரியும். இயக்குநரிடமும் தயாரிப்பாளர் ராஜேஷ் சாரிடமும் ‘நாம் விஜய் சேதுபதியிடம் கேட்போம்’ என்றேன். அவர்களோ… ‘ஒரு பெண் மையப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று அடித்துச் சொன்னார்கள். ஆனால், கதையைக் கேட்டபிறகு ‘இது நான் பண்ணவேண்டிய கேரக்டர்’ என்று விஜய் சேதுபதியே சொன்னார். அவர் வந்தபிறகு இந்தப் படம் இன்னும் பெரிய படமாக மாறிவிட்டது.

ஒரு பெண் மையப் படத்துக்குக் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயரை வைப்பதற்கு பதிலாக ‘கணவர் பெயர் ரணசிங்கம்’ என்று வைத்திருக்கிறார்களே.. அதை நீங்கள் எதிர்க்கவில்லையா என்று என்னிடம் கேட்கிறார்கள். படத்தைப் பார்த்த பிறகு, அந்தக் கேள்விக்கான அவசியமே இருக்காது. அரியநாச்சி, கணவரின் சட்டையை அணிந்துவரும் காட்சி ஒன்றுபோதும் இந்தத் தலைப்புக்கான நியாயத்தைப் புரியவைக்க.

பெண் மையப் படங்கள் அதிகரித்துவரும் நிலையில், உங்களுக்கு மாறுபட்ட கதாபாத்திரங்கள் வருகின்றனவா?

பெண் மையப் படங்கள் என்றாலே பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற கதைகளும் வரவே செய்கின்றன. அவற்றை மறுத்துவிடுகிறேன். ஆனால், இவற்றைத் தாண்டி பெண்களின் உலகில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன.

நான், ஏற்றுக்கொண்டிருக்கும் ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ போன்ற படங்கள் எல்லாம் அப்படிப்பட்ட மாறுபட்ட கதைகள்தான். ‘முந்தானை முடிச்சு’ மறுஆக்கத்தில் முதன் முதலாக நகைச்சுவை நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள கதாநாயகியாக நடிக்கப்போகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து மாறுபட்ட கதாபாத்திரங்களை எனக்காக எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் வீட்டிலுள்ள குழாயில் தண்ணீர் கொஞ்சம் வீணாகக் கொட்டினாலும் மனம் பதறிவிடுகிறது. இந்தப் படத்துக்குப் பின்னர், ‘தண்ணீர் பஞ்சம்’ பற்றிய எனது பார்வை அடியோடு மாறிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x