

‘ஓவர் தி டாப்’ என்று அழைக்கப்படும் இணையத் திரையான ஓடிடி, சிறு பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதம் ஆகிவிட்டது. உள்ளடக்கத்தில் தரமும் பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட சிறு முதலீட்டுப் படங்களை ஓடிடி தளங்கள் தயக்கமின்றி வாங்கி நேரடியாக வெளியிட்டு வருகின்றன. அதேநேரம், ‘மாஸ் கதாநாயகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் (40 கோடிக்கு மேல்) படங்களை ஒருபோதும் ஓடிடி தளங்கள் வாங்கி ‘ப்ரிமியர் ரிலீஸ்’ செய்ய முடியாது; அவ்வளவு விலைகொடுத்து வாங்க மாட்டார்கள்’ என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், இது உண்மை அல்ல என்பதை சூர்யா திரையுலகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். சுதா, கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துத் தயாரித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தை அமேசான் தளத்துக்கு விற்றிருக்கிறார்.
இப்போதைக்குத் திரையரங்குகள் திறக்கப்பட மாட்டாது என்ற நடைமுறைச் சிக்கலை உணர்ந்தே, தயாரிப்பாளர் என்ற முறையில் சூர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவரது முடிவுக்குத் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதரவும் திரையரங்கத் தரப்பினர் மத்தியில் பரவலான எதிர்ப்பும் என கோலிவுட் ரணகளமாகிக் கிடக்கிறது. சூர்யாவை வைத்து 5 படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி சூர்யாவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கியிருக்கும் பாரதிராஜா நீண்ட அறிக்கை மூலம் சூர்யாவுக்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவில்தான் இந்த நிலையா என்றால், தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான நானியின் ‘வி’ என்ற பெரிய பட்ஜெட் படம் ஓடிடியில் செப்டம்பர் 5 அன்று ரிலீஸ் ஆகிறது. ஹாலிவுட்டிலோ ஜாம்பவான் நிறுவனமான டிஸ்னி, உலக அளவில் எதிர்பார்க்கப்படும் ‘முலன்’ மெகா பட்ஜெட் படத்தை தயாரித்தது. திரையரங்குகள் திறப்பது தள்ளிப்போவதால் செப்டம்பர் 4 அன்று தனது டிஸ்னி ப்ளஸ் தளத்தில் இந்தப் படத்தைத் துணிந்து வெளியிடுகிறது.
ஏற்கெனவே பார்வையாளர்களிடம் பிரபலமாகிவிட்ட அமேசான், ஜீ5, டிஸ்னி ஹாட் ஸ்டார் போன்றவை சிறு படங்களை அதிகமாக வாங்கினாலும் அவற்றில் சிக்காமல் கோலிவுட்டின் பிரபலத் தயாரிப்பாளர்கள் சிலர் துணிந்து ஓடிடி தளம் தொடங்கி வருகிறார்கள். அவர்களில் சி.வி.குமாரின் ரீகல் டாக்கீஸைத் தொடர்ந்து, தற்போது ‘ஜே.எஸ்.கே.பிரைம் மீடியா’ என்ற பெயரில் பிரபலத் தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஷ்குமார் புதிய ஓடிடி தளம் தொடங்கியிருக்கிறார். அந்தத் தளத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் ‘அண்டாவக் காணோம்’ இன்று நேரடியாக ரிலீஸ் ஆகிறது.