

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன். இவரது மகன் புகழ், மு. களஞ்சியம் எழுதி இயக்கும் ‘முந்திரிக் காடு’என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல் அதிகாரியாக நடிக்கிறாராம். இது மண் வாசனை வீசும் படமாக இருக்குமாம்.
குழம்பும் மீரா ஜாஸ்மின்!
பேய்ப் படங்களுக்கு கோலிவுட்டில் மவுசு கூடியிருப்பதால் 2013-ல் மீரா ஜாஸ்மின் நடித்து வெற்றிபெற்ற ‘மிஸ் லேக்கா தரூர் காணுன்னது’ என்ற மலையாளப் படத்தை ‘கண்கள் இரண்டால்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். இந்தப் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடத்துகிறார். காதலனாகிய நாயகன் மீராவின் கண் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். பார்வை வந்ததும் அவரது அருகில் ஓர் உருவம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அது வெறும் உணர்வுதானா அல்லது நிஜமாகவே தன்னை ஒரு ஆவி பின் தொடர்கிறதா என்று குழம்பும் மீரா ஜாஸ்மின் அதனிடமிருந்து தப்பிக்க என்ன செய்தார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதையாம்.
ஷாமிலி பராக்!
‘எதிர் நீச்சல்’ படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் வெற்றி இன்னிங்ஸைத் தொடங்கிவைத்த இளம் இயக்குநர் துரை.செந்தில்குமார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினியின் தங்கை ஷாமிலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாகத் தென்னிந்திய மொழிகளில் நடித்த ஷாமிலி 2009-ல் வெளியான ‘ஓய்’ என்ற தெலுங்குப் படத்தில் சித்தார்த் ஜோடியாகக் கதாநாயகியாக அறிமுகமானார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஷாம்லி தவிர இன்னொரு கதாநாயகியும் இந்தப் படத்தில் உண்டாம்.
ஜூனியர் ஜெஸ்ஸி
மீண்டும் ஒரு உணர்வுபூர்வமான காதல் கதையைக் கையிலெடுத்திருக்கும் கவுதம் மேனன், ‘அச்சம் என்பது மடமையடா' என்று காதல் வாசனை இல்லாமல் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தியாவை பைக்கில் சுற்றும் ஒரு இளைஞனின் காதல் கதையாக விரிய இருக்கிறதாம் இந்தப் படம். அதனால் இதில் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காதாம். இத்தனை எதிர்பார்ப்புகளை இப்போதே எற்படுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர். இதில் சிம்புவின் காதலியாக நடிப்பவர் மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ வடக்கன் செல்ஃபி’ படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன். இவரை ‘ஜூனியர் ஜெஸ்ஸி’ என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்தப் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார் மஞ்சிமா.
அனல் பறக்கும் விவாதம்
அருள்நிதி நடிப்பில் சாந்தகுமார் இயக்கிய ‘மவுனகுரு’ படத்தின் கதையை இந்தியில் கதாநாயகிக்கான கதையாக மாற்றி ‘அகிரா’ என்ற பெயரில் மறுஆக்கம் செய்துமுடித்துவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். சோனாக் ஷி சின்ஹா நடித்திருக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு அஜித் அல்லது விஜயை இயக்க விரும்பினாராம். ஆனால் இருவருமே வேறு வேறு படங்களை அடுத்தடுத்து ஒப்புக்கொண்டிருப்பதால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவைத் தமிழில் அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறாராம் முருகதாஸ்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்கான கதை விவாதம்தான் முருகதாஸ் டீமில் அனல் பறக்கிறது என்கிறார்கள். இந்தப் படத்தில் மாகேஷ்பாபுவுடன் மீண்டும் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்ருதியிடம் பேசியிருக்கிறாராம் முருகதாஸ். அசத்தலான அறிமுகம் தந்தவரின் படத்தில் ஸ்ருதி நடிப்பது விரைவில் உறுதியாகிவிடும் என்கின்றன நம்பகமான வட்டாரங்கள்.