Published : 20 Mar 2020 08:37 AM
Last Updated : 20 Mar 2020 08:37 AM

பாம்பே வெல்வெட் 27: நட்சத்திரங்களைத் தனித்துக் காட்டிய இருள்

எஸ்.எஸ்.லெனின்

பாலிவுட்டின் பொற்காலமாக ஐம்பதுகளின் சினிமாக்களைக் குறிப்பிடுவார்கள். அதைத் தொடர்ந்து ஒரு தலைமுறை இடைவெளியில் பாலிவுட்டின் மோசமான காலமும் வந்தது. எண்பதுகளின் இந்தித் திரையுலகம், பாலிவுட்டின் இருண்ட காலமாக அடையாளம் காணப்படுகிறது. அப்போது வெளியான திரைப்படங்களை ரசனை அடிப்படையில் மதிப்பிட்டுத் திரை விமர்சகர்கள் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

வீடியோ கேசட்டுகள் எனப்பட்ட வி.ஹெச்.எஸ். ஒளிநாடாக்கள் எண்பதுகளில் பரவலாக அறிமுகமாயின. வசதியானவர் வீடுகளில் வி.சி.ஆர். சாதனங்களுடனான வீடியோ கேசட்டுகள் அக்காலத்தின் ‘ஹோம் தியேட்டர்’ அனுபவமாக அமைந்துபோயின. தொடர்ந்து நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து அவற்றை வாடகைக்கு விடும் தொழிலும் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு வீடு தேடிவந்து விநியோகிப்பதும் நடந்தது.

பொதுமக்களின் இந்த வீட்டு சினிமா நுகர்வால், திரையரங்குகள் புறக்கணிக்கப்படும் என்ற பீதி பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் உண்டானது. எனவே, இதற்கு வசதியில்லாத, திரையரங்கை வாழ் விக்கும் சாமானியர் களுக்காகப் படங்களை உருவாக்கும் போக்கு அதிகரித்தது. நகர்மயமாதல், புதிய நகரங்களின் கட்டுமானத்துக்காகக் குவிந்த சாமானிய ரசிகர்களுக்காக என்ற பாவனையுடன் திரைப்படங்கள் உருவாயின.

விளைவாக, அவற்றில் மசாலா உள்ளடக்கம் அதிகரித்தது. சண்டை, ஆர்ப்பாட்ட இசைக்கு முக்கியத்துவம் தரும் அப்படிப் பட்ட படங்களின் வெற்றி, அதே போன்ற புதிய திரைப்படங்களை ஊக்குவித்தது. அறுபது, எழுபது களில் கொடிகட்டிப் பறந்த பிரபல சினிமா நிறுவனங்கள் தேக்கம் கண்டது இன்னொரு காரணமானது. அவற்றின் இடத்தை, பம்பாயில் சிறிதும் பெரிதுமாகத் தலையெடுத்த தாதாக்களின் முதலீட்டுடன் புதிய தயாரிப்பாளர்கள் ஆக்கிரமித்தார்கள். இப்படியான அப்பட்டமான மசாலா பட நிறுவனங்களின் நுழைவும் அவர்களது லாப வெறியும் ரசிகர்களிடம் மலிவான ரசனையைத் தூண்டிவிட்டது.

ஆக்ரோஷமும் அதிரடி இசையும்

அப்படியாக வெளியான திரைப் படங்களில் வன்முறை, பாலியல் நோக்கிலான திணிப்புகள் இருந்தன. ஜிதேந்திராவின் ‘மேரி ஆவாஸ் சுனோ’ (1981), அமிதாப்பின் ‘இன்குலாப்’ (1984) போன்ற படங்களில் முன்னெப்போதும் இல்லாத வன்முறை புகுந்தது. சன்னி தியோலின் பல திரைப்படங்கள் மிகையான புஜபல பராக்கிரமம் பேசின. இசையும் பாடலுமாக ரசிகர்களைச் சொக்கவைத்த ‘தேஸாப்’ (1988) திரைப்படத்தில்கூட, காதல் கதையைக் குருதியில் தோய்த்திருந்தார்கள்.

தேசத்தின் நெருக்கடி காலத்துக்குப் பின்னரும் அது குறித்த கசப்பு தொடர்ந்ததில் பெரும்பாலான படங்களின் வில்லன்கள் அரசியல் வாதிகளாகவும், அதிகார மட்டத் தினராகவும் தோன்றினார்கள். வன்முறைக்கு அடுத்தபடியாக ஆர்ப்பாட்டமான இசைப்போக்கு இடம்பிடித்தது. பப்பி லஹரி போன்ற இசையமைப்பாளர்கள் ஒரே மாதிரியான இசைக்கோவைகளை இரக்கமின்றிப் பரப்பினார்கள்.

அடிதடித் திரைப்படங்களின் பின்னணி இசை, ரசிகர்களது செவிப்பறைகளின் உறுதியைச் சோதித்தன. இந்தியாவின் ‘எல்விஸ் பிரஸ்லி’யாகத் தன்னை முன்னிறுத்திய மிதுன் சக்ரவர்த்தி, பப்பி லஹரியின் உதவியால் இளைஞர்களை ஆட்டுவித்தார். பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி பாணியிலான ஜிதேந்திராவின் ‘ஹிம்மத்வாலா’ (1983) நடனமும் பிரபலமானது.

தெலுங்கின் தாக்கம்

பாலிவுட்டின் இருண்ட காலமாக வர்ணிக்கப்படும் அத்தகைய திரைப்படங்களும் அக்காலச் சூழலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன என்பதே உண்மை. இங்கே ‘சகலகலா வல்லவன்’ படத்தைத் திரை விமர் சகர்கள் திட்டித் தீர்த்தாலும், அதன் வணிக வெற்றியும், ரசிக ஈர்ப்பும் அசுரப் பாய்ச்சலுடன் இருந்ததை இதனுடன் ஒப்பிடலாம். ஒரு திரைப் படம் வெற்றிபெற்றால் அதை அப்படியே நகலெடுத்த ‘ஃபார்முலா’ திரைப்படங்கள் பாலிவுட்டில் படையெடுத்தன.

பாட்டு, சண்டை, பலாத்காரம் என ஒரே சுழலில் சிக்கிக்கொண்டதும் நடந்தன. மிதுன் சக்ரவர்த்தியின் உடுப்பும் இடுப்பசைவுகளும் இந்தியாவுக்கு வெளியேயும் அவருக்கு புகழ் தந்தது. ராஜ்கபூருக்குப் பின்னர் ரஷ்ய ரசிகர்களால் அவர் அதிகம் கொண்டாடப்பட்டார். பாலிவுட்டின் புதிய போக்குக்கு, பல தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் தாக்கம் கணிசமாக இருந்ததையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

அந்த வரிசையில் ‘ஹிம்மத்வாலா’ போன்ற படங்கள் வெற்றியடைய, அதே போன்ற திரைப்படங்கள் மழைக் காளான்களாக முளைத்தன. தெலுங்கு இயக்குநரான டி.ராமராவ் போன்றவர்கள் தென்னகத்தின் வெற்றித் திரைப்படங்களை பாலிவுட் பாணிக்கு மறுஆக்கம் செய்வதில் முனைப்பாக இருந்தனர். அவர்களால், மிதுன் சக்ரவர்த்தியும் ஜிதேந்திராவும் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைக் கையில் வைத்திருந்தனர்.

இருளில் ஒளிவீசிய நட்சத்திரங்கள்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் எக்காலத்திலும் நினைவிலாடும் வெற்றித் திரைப் படங்களும் எண்பதுகளில் பிறந்தன. இந்தியாவின் அரசியல், அதிகார மையங்களைச் செல்லரித்த லஞ்ச லாவண்யத்தை நகைச்சுவையில் முன்வைத்த ‘ஜானே பி தோ யாரொ’ (1983), முப்பது வயதுக்கு முன்பே 65 வயது முதியவராக அனுபம் கெர் நடித்த ‘சாரன்ஸ்’ (1984), ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் நடிப்பில் பெண்ணியக் குரலாக வெளியான ‘அர்த்’, நசீருதின் ஷா நடித்த ‘மாசூம்’ போன்ற திரைப்படங்கள் முன்மாதிரியாக வெளிவந்தன.

ஜாக்கி ஷெராஃப் (‘ஹீரோ’), சஞ்சய் தத் (‘ராக்கி’), அமிர்கான் (‘கயாமத் சே கயாமத் தக்’), சல்மான்கான் (‘மைனே பியார் கியா’) எனப் பின்னாளைய பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் எண்பதுகளில் அடியெடுத்து வைத்தனர். அனில் கபூர், நசீருதின் ஷா, சன்னி தியோல் போன்றவர்கள் தங்களுக்கெனத் தனி பாணியிலான திரைப்படங்களில் வலம் வந்தார்கள். தேவி, மாதுரி தீட்ஷித், ஜூஹி சாவ்லா, ரேகா, பாக்யஸ்ரீ போன்ற தேவதைகள் ரசிகர்களின் கனவுகளுக்குப் பொன் முலாம் பூசினார்கள். அனில் கபூரின் ‘தேஸாப்’, மிதுன் சக்ரவர்த்தியின் ‘டிஸ்கோ டான்ஸர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தேசத்தின் இந்தி பேசாத மாநிலங்களிலும் பெரிய வெற்றியைப்பெற்றன.

எண்பதுகளின் பாலிவுட் போக்குகளை, சமகாலத்தின் திரை ஆளுமைகள் வாயிலாக அடுத்து வரும் வாரங்களில் இன்னும் அணுக்கமாகப் பார்க்க இருக்கிறோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தமிழில் தடம் பதித்த கையோடு, தங்களது பாலிவுட் பரிசோதனைகளை எண்பதுகளில் தொடங்கினர். அவற்றில் ரஜினியின் திரைப்படங்கள் அப்போதைய பாலிவுட் மசாலாக்களில் ஐக்கியமானதும், கமலின் படங்கள் அவற்றுக்கு எதிர்த் திசையில் அமைந்ததும் நடந்தன.

‘சட்டம் ஒரு இருட்டறை’ யின் இந்தி ஆக்கமான ‘அந்தா கானூன்’ மூலமாக ரஜினிகாந்த் பாலிவுட்டில் நுழைந்தார். தொடர்ந்து ‘தாய்வீடு’ (‘ஜீத் ஹமாரி’), ‘மூன்று முகம்’ (‘ஜான் ஜானி ஜனார்த்தன்’) எனத் தனது தமிழ்த் திரைப்படங்களின் இந்தி ஆக்கங்களில் ரஜினி தோன்றினார். கூடவே அவரது இந்திப் படங்கள், ‘மேரி அதாலத்’ (‘வீட்டுக்கு ஒரு நல்லவன்’),‘பக்வான் தாதா’ (‘அக்னி கரங்கள்’), ‘அஸ்லி நக்லி’ (‘தாயின் மீது சபதம்’), ‘தமாசா’ (‘ஏழைத் தோழன்’) எனத் தமிழிலும் மொழியாக்கம் கண்டன.

தெலுங்கு ‘மரோ சரித்ரா’வின் இந்தி ஆக்கமான ‘ஏக் துஜெ கே லியே’ மூலமாக கமல்ஹாசன் இந்தியில் கால்பதித்தார். தொடர்ந்து ‘யா தோ கமால் ஹோ கயா’ (‘சட்டம் என் கையில்’), ‘ஜாரா ஸி ஜிந்தகி’ (‘வறுமையின் நிறம் சிவப்பு’), ‘சத்மா’ (‘மூன்றாம் பிறை’), ’ஏக் நை பஹேலி’ (‘அபூர்வ ராகங்கள்’), ‘கரிஷ்மா’ (‘டிக் டிக் டிக்’) போன்ற தமிழின் இந்திப் பதிப்புகளிலும், ‘சனம் தேரி கசம்’, ‘ராஜ் திலக்’, ‘யாட்கர்’, ‘சாகர்’, ‘தேக்கா பியார் துமாரா’ போன்ற நேரடி இந்திப் படங்களிலும் கமல் தோன்றினார்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x