ஷங்கர் - ராஜமௌலி: ஒரு மில்லியன் டாலர் கேள்வி!

ஷங்கர் - ராஜமௌலி: ஒரு மில்லியன் டாலர் கேள்வி!
Updated on
1 min read

இந்திய வணிக சினிமாவின் இதயம் துடிப்பது பாலிவுட்டில்தான் என்ற உலகின் எண்ணத்தை மாற்றிக்காட்டியது எந்திரன். மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தியர்களால் படம் தயாரிக்க முடியும் என்று உரக்கச் சொன்ன படம் மட்டுமல்ல அது; இனம், மொழி கடந்து உலகம் முழுவதும் வாழும் சினிமா ரசிகர்களால் ரசிக்கத் தக்க ஒரு கதையை எங்களாலும் விறுவிறுப்பான படமாக எடுக்க முடியும் என்று காட்டிய படமும் கூட.

அப்படிப்பட்ட எந்திரனுக்குப் பிறகு அதைவிடப் பெரிய பிரம்மாண்டத்தை முதல்முறையாக தெலுங்குப் பட உலகம் முயற்சித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரபலமான தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘பாகுபலி’யின் பட்ஜெட்டை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் 250 கோடி என்று வெளியான தகவல்களைப் படத் தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை.

அதேபோல தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபீஸைப் பொருத்தவரை எந்திரன் திரைப்படமே உச்சபட்ச வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் எந்திரனின் வசூல் சாதனையை பாகுபலி தமிழ்நாட்டில் முறியடிக்குமா என்பது தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. இதே கேள்வியை திரையரங்கு வட்டாரங்களில் கேட்டபோது “கண்டிப்பாக எந்திரன் வசூலை இந்தப் படம் மிஞ்சும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு டிக்கெட் முன்பதிவுகளே சாட்சி” என்கிறார்கள்.

தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய நட்சத்திரங்களும் இந்த படத்தின் வெளியீட்டை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவு செய்யும் கருத்துகளிலிருந்தே இது தெரிகிறது.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமாகிய பி.சி. ராம் தனது சமூக வலைத்தளத்தில் பாகுபலி' படம் குறித்து “முன்னோடியான பிரம்மாண்டப் படங்களில் கண்டிப்பாக பாகுபலிக்கும் முக்கிய இடம் இருக்கிறது. இதுபோன்ற படங்கள் எதிர்காலத்தில் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. படத்தின் ரிலீஸ் தினத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். பி.சி. ராமின் இந்த கருத்துக்கு ‘பாகுபலி படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஷங்கருடன் தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கும் ஒளிப்பதிவாளர்  ராம் வெளிப்படையாக இப்படி பதிவிட்டிருப்பது ஆரோக்கியமான ஒன்று. அதேபோல் ஷங்கர் பற்றி ராஜாமௌலியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “ஷங்கர் ஒப்பிட முடியாத உயரத்தில் இருக்கும் முன்னோடி” என்று மௌலி குறிப்பிட்டிருப்பதும் வளரும் சினிமா கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in