

எஸ்.எஸ்.லெனின்
மதங்கள் எவையாயினும் அவற்றில் பழமைவாதிகள் நிறைந்திருப்பர். அப்படிப்பட்டவர்களின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்தும், தங்களது சுய ஆதாயங்களுக்காக மதத்தை முன்வைத்து அவர்கள் சத்தமின்றிச் சதிராடுவதையும் நெட்பிளிக்ஸின் ‘தி ஃபேமிலி’ தோலுரித்துக் காட்டுகிறது.
மத போதனை, இறைநூல் வாசிப்பு என இளைஞர்களை வசீகரித்து அவர்களைப் படிப்படியாகத் தங்கள் பாதையில் திருப்பும் ‘தி ஃபேமிலி’யின் ரகசியச் செயல்பாடுகளுடன் தொடங்குகிறது இவ்வலைத் தொடர். அப்படியான குழுவில் ‘சகோதர’ராகச் சேர்ந்த ஜெஃப் ஷார்லெட் என்பவர் பின்னாளில் எழுதிய ‘தி ஃபேமிலி’, ‘சி ஸ்ட்ரீட்’ (C Street) ஆகிய இரு நூல்களைத் தழுவி ஆவணத் தொடரின் 5 அத்தியாயங்களும் நகர்கின்றன.
தங்களை ஓர் அமைப்பாகப் பிரகடனம் செய்துகொள்ளாதவர்கள் ‘தி ஃபேமிலி’யை உருவாக்கியவர்கள். அதில் உறுப்பினர்கள், தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என எவரையும் அதிகாரபூர்வமாக அறிவித்துக்கொள்ளாமலேயே, உலகம் முழுக்க செல்வாக்கைப் பரப்பும் மதக் குழுவாக ‘தி ஃபேமிலி’யின் வீச்சு ஆச்சரியமூட்டுகிறது. ஷார்லெட் உட்பட அந்த அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டுப் பின்னர் விலகியவர்கள், புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் பேட்டிகளும் கருத்துகளும் தொடர் நெடுக வருகின்றன. சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளின் மத்தியில் அரிய வீடியோ துணுக்குகள், ஒளிப்படங்கள், குரல் பதிவுகளை உள்ளடக்கிய ஆவணங்கள் தொடருக்கு ஆழமும் சுவாரசியமும் தருகின்றன.
அமெரிக்க செனட்டர்கள், மாகாண கவர்னர்கள் முதல் அதிபர் மாளிகைவரை ‘தி ஃபேமிலி’ அமைப்பின் வேர்கள் நீண்டிருப்பதைப் படிப்படியாக விளக்குகிறார்கள். அமைப்புக்கு ஆதரவானவர்கள் சர்ச்சையில் சிக்கும்போதும் பதவிக்கு ஆபத்து நேரும்போதும் தங்கள் அதிகார அஸ்திரத்தால் அவர்களைக் காப்பாற்றுவதையும் எதிரானவர்களைச் சிக்கல்களில் மாட்டிவிட்டு அவர்களைக் காணாமல்போகச் செய்வதுமான நிழலுலக ரகசியச் செயல்பாடுகளை வர்ணிக்கும் காட்சிகள் திரைப்படங்களுக்கு நிகரானவை.
‘எந்த அளவுக்குக் கண்மறைவாக இருக்கிறோமோ அந்த அளவுக்குச் செல்வாக்காகச் செயல்பட முடியும்’ என்பது ‘குடும்ப அங்கத்தினர்க’ளின் தாரக மந்திரங்களில் முக்கியமானது. சுமார் அரை நூற்றாண்டு காலம் குடும்பத்தின் செயல்பாடுகளைத் தீர்மானித்த டக்ளஸ், பல அமெரிக்க அதிபர்களுக்கு நெருக்கமாக இருந்ததை ஆவணங்கள் வெளிச்சமிடுகின்றன. நேஷனல் பிரேயர் பிரேக்ஃபாஸ்ட் என்ற பெயரில் அப்போதைய அமெரிக்க அதிபர்கள் உட்படச் செல்வாக் கானவர்கள் ஒன்றுகூடும் சந்திப்பும் வெள்ளை மாளிகையின் வாயிலாக ‘குடும்பம்’ தனது அதிகாரத்தைப் பல அயல்நாடுகளிலும் அந்நாட்டு அரசியலில் செலுத்தியதையும் விவரிக்கிறார்கள்.
குடும்ப அங்கத்தினர்களில் பெரும்பாலானோர் தம்மைக் கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதுவதால் அவர்களின் செயல்பாடுகளில் நிறைந்திருக்கும் தீவிரமும் ஓர்மையும் அச்சமூட்டுகின்றன. ‘அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்பைத் தேர்ந்தெடுத்தது கடவுள்’ என்று அவர்கள் நம்புவதையும், கடவுளின் பெயரால் அரசியல் அதிகாரங்கள், ஆயுத தளவாடங்கள், எண்ணெய் வளங்கள், நிதியாதாரங்கள் பரிமாற்றத்தைத் தீர்மானிக்க முற்படுவதையும் இந்தப் பின்னணியிலிருந்தே ஆவணத்தொடர் ஆராய்கிறது.
கூடவே, அண்மைக்காலமாக அமெரிக்காவில் இன, மதவாதங்களுக்கு அதிகரிக்கும் ஆதரவையும் கோடிட்டுக் காட்டுகிறார்கள். தங்களின் வளர்ச்சிக்கு எதிரானதாக ஜனநாயகத்தைக் கருதுவது, முடிந்த அளவு ‘ஜனநாயகத்தை’ அவர்களே தீர்மானிக்க முயல்வது, உலகெங்கும் நிகழ்ந்துவரும் பல அரசியல் மாற்றங்களின் பின்னுள்ள புதிர்களை விடுவிக்க முயல்வது என இந்த ஆவணத்தொடர் அதிரவைக்கிறது.