

நமக்கு மத்தியில் நடமாடும் கதாபாத்திரங்களை ஜிகினா தூவிப் பரிமாறுவதில் கெட்டிக்கார இயக்குநர் தருண்கோபி. “வெற்றிக்கான சூத்திரம் விறுவிறுப்பான திரைக்கதைதானே தவிர டிவிடி பார்த்து உருவாக்கும் கதைகளில் இல்லை. உறவுகளுக்கு மத்தியில் ரத்தமும் சதையுமாக ஓராயிரம் கதைகள் கிடக்கின்றன..” என்று நக்கலுடன் பேசும் இவர், விஷால், சிம்பு இருவரையும் இயக்கிய பின், ராசு. மதுரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற `மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் மூலம் நாயகனாகக் களம் இறங்கினார். தற்போது `திமிரு’ படத்தின் இரண்டாம் பாகத்தை `வெறி’என்ற தலைப்பில் நடித்து, இயக்கிவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக தூக்கி நிறுத்திய படங்களில் `திமிரு’ படத்துக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இப்போது `திமிரு’ இரண்டாம் பாகம் என்று வரும்போது விஷாலை வைத்து யோசிக்கவில்லையா?
`திமிரு’ படத்தின் கதையில் கணேஷ் என்ற மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்தார் விஷால். ஈஸ்வரியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியால் அவருக்குப் பிரச்சினை வந்தது. அதைப் புத்திசாலித்தனமாகவும் துணிச்சலாகவும் எதிர்கொண்டார். டாக்டர் படிப்பையும் முடித்து ரீமாசென்னைத் திருமணம் செய்துகொண்டு சென்னையில் செட்டில் ஆகிவிடுவதுபோல் கதை முடிந்துவிட்டது.
ஆனால் தனது சவாலில் ஜெயிக்க முடியாத ஈஸ்வரி கேரக்டர் மீது ரசிகர்களுக்குக் கோபம் இருந்தாலும் அவர் விஷாலுடன் இணையாமல் போய்விட்டாரே என்று ரசிகர்கள் ஏங்கினார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் விஷாலுக்கு இணையாக வெற்றி பெற்றது. இரண்டாம் பாகத்தில் அந்த ஈஸ்வரியின் உறவுகளைப் பற்றிய மண்வாசனைக் கதையாக இதை எழுதியிருக்கிறேன்.
இதிலும் காதலும் மோதலும்தான் களம். திமிரு படத்தை போலவே இந்தப் படத்திலும் விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, உசிலம்பட்டி ஆகிய நான்கு ஊர்களில் கதை நடக்கிறது. நான்கு முக்கிய உறவுகளுக்குள் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் நாற்பது பாட்டிகளும் ஒரு தாத்தாவும் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்கி நடித்து வருகிறேன். என்னுடன் ரமணா இன்னொரு நாயகனாக நடிக்கிறார். எனக்கு ஜோடியாகக் `காதல்’ சந்தியா நடித்துவருகிறார்.
படத்துக்கு ஏன் இப்படியொரு தலைப்பை வைத்தீர்கள்?
`வெறி’ என்பதை குரூரமான உணர்வு என்பதுபோல் நமக்கு ஊட்டி விட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெரிய லட்சியத்தை மனதில் சுமந்துகொண்டு அதை வென்றெடுக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உத்வேகம்தான் வெறி. காந்தியை நிறவேற்றுமை கருதி ரயிலிலிருந்து வெளியே பிடித்துத் தள்ளினான் ஒரு வெள்ளைக்காரன். தென்னாப் பிரிக்காவில் தீண்டாமை தன்னை தீண்டியதைக் கண்டு அவர் அங்கேயே கொதித்தெழவில்லை.
தாயகம் திரும்பியதும் அகிம்சை என்ற ஆயுதத்தை தேசம் முழுவதும் வெறிகொண்டு பரப்பி, வெள்ளையர்களை விரட்டியடித்தார். அதனால் தேசத் தந்தை ஆனார். அவர் தேசத் தந்தை ஆனதற்கு அகிம்சைமீது அவர் வைத்த வெறிதான் காரணம். அப்படிப்பட்டவரை சுட்டுக் கொன்றான் கோட்சே. அவனை இயக்கியது அடிப்படைவாதம் மீதான அவனது வெறி.
இந்தப் படத்தின் கதாநாயகன் காந்தியா? கோட்சேவா? அவனது வெறி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படைக் கதை. கதாநாயகனையும் உறவுகளின் அணுகுமுறையையும் வைத்தே இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். தலைப்புதான் இப்படி இருக்கிறதே தவிர `யூ’ சான்றிதழ் கிடைக்கும் மென்மையான கதை இது.
`மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உடனுக்குடன் நீங்கள் படங்களில் நடிக்கவில்லையே?
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சகோதர பாசத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத கடைக்குட்டி பரமானாக நடித்திருந்தேன். அந்தப் படம் சின்ன கிராமம் வரை என்னை அறிமுகப்படுத்திவிட்டது. என்னைப் பார்க்கும் ரசிகர்கள் இன்றும் “ பரமா..” என்று ஓடிவந்து கையைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
ரசிகர்களின் இந்த அன்பை எக்காரணம் கொண்டும் நான் இழக்க விரும்பவில்லை. அதனால் நல்ல கதையை எழுதி முடிக்கும்வரை படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.
இதற்குமுன் நீங்கள் இயக்கி நடித்த ’பேச்சியக்கா மருமகன்’ படத்தின் சாயலில் ஒரு படம் வெளியாகிவிட்டதால் அதன் வெளியீட்டை நிறுத்திவிட்டதாகச் செய்திகள் வெளியானதே?
நோ கமெண்ட்ஸ். ஆனால் எனது சில உணர்வுகளை வலியுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தப் படத்தின் வியாபாரத்துக்காக நிறைய பிரைவேட் காட்சிகள் திரையிட்டோம். படம் வியாபாரம் நடந்துகொண்டிருந்தபோது இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையில் மன வருத்தம் வந்துவிட்டது. ஒரு மாமியாருக்கும் மருமகனுக்குமான சண்டையும் பாசமும் நிறைந்த உறவைப் பேசிய அந்தக் கதையை உருவி அப்படியே உறவு முறைகளை மாற்றிப் படமெடுத்துவிட்டார்கள்.
மருமகனாக நானும் மாமியாராக ஊர்வசியும் நடித்திருந்தோம். என்னைப் போல் வாழ்க்கையிலிருந்து கதையை உருவாக்குகிறவன் கால்நடையாக நடந்து செல்கிறான். கதையைத் திருடுகிறவன் காரில் செல்கிறான். இதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் நிலைமை.