Published : 19 Jun 2015 11:40 AM
Last Updated : 19 Jun 2015 11:40 AM

உங்கள் மூக்கு உங்களிடம் இருக்காது!- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு பேட்டி

இருபத்தைந்து வயதே நிரம்பிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நேற்றுவரை விஜய் சேதுபதி, அட்டக்கத்தி ரஞ்சித் என்று கதைப் பட நாயகர்களின் காதல் ஏரியாவை அழகுபடுத்திக்கொண்டிருந்தவர்.

அழுக்கும் கழிவுகளும் என்றாகிப்போன கூவம் ஆற்றுக் கரையோரக் குடிசைப் பகுதிப் பெண்ணாகவே மாறி இந்தப் படத்தில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்? அவரிடம் பேசியதிலிருந்து...

படம் வெளியானதும் உடனடியாக உங்களுக்குப் பாராட்டுகள் குவிந்ததா?

படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. படம் பெரிய வெற்றி. டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால், எனக்கு மட்டும் எந்தப் பாராட்டும் வரவில்லை. நான்தான் நடித்திருக்கிறேனா என்பதே நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஒரு போன் கால்கூட இல்லை. நொந்துபோய் இயக்குநர் மணிகண்டனிடம் “ நீங்கள் சொன்னதுபோலவே ஆகிவிட்டது.

நான் வாஷ் அவுட்தான்” என்று அழாத குறையாகச் சொன்னேன். ஆனால் அவர் “கொஞ்சம் பொறுத்திருங்கள்” என்றார். அதன்பிறகு பேஸ்புக் ட்விட்டர் எல்லாவற்றிலும் ரம்மி, திருடன் போலீஸ் போன்ற எனது சமீபத்திய படங்களில் இருந்த எனது இயல்பான தோற்றத்தையும் காக்கா முட்டையில் எனது தோற்றத்தையும் அருகருகே போட்டு இவர்தானா அவர்!? என்று ரசிகர்கள் பரப்பிய பிறகுதான் பலருக்கும் அடையாளமே தெரிந்தது.

அந்த அளவுக்கு என் தோற்றத்தை அடியோடு மாற்றிவிட்டார் இயக்குநர். தற்போது எனக்கு அனைவரும் தரும் மரியாதை பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இனி நான் வெறும் கமர்ஷியல் கதாநாயகி மட்டுமல்ல.

இயக்குநர் கதை சொன்னபோது இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னாரா?

இல்லை. சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம். அதுவும் பத்து வயதைத் தொட்டு நிற்கும் இரண்டு பையன்களுக்கு என்றால் எந்த ஹீரோயின் ஒத்துக்கொள்வார்? வெற்றிமாறன் - தனுஷ் இருவரும் தயாரிக்கும் படம் என்பதால்தான் நான் ஆடிஷனுக்குச் சென்றேன்.

நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மணிகண்டன் என்னிடம் வெளிப்படையாகப் பேசியது அவர் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையையும் தந்துவிட்டது.

“அடித்தால் இந்தக் கதை சிக்ஸர் அடிக்கும். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் ஃபீல்ட் அவுட் ஆக வேண்டியதுதான். இந்த ரிஸ்க்குக்கு நீங்கள் தயார் என்றால் வாருங்கள். அதேபோல இந்தக் கதை எங்கே நடக்கிறதோ, ஏழை மக்கள் எங்கே வாழ்கிறார்களோ அங்கேதான் படப்பிடிப்பே நடக்கும்.

60 நாட்கள் மிக மோசமான வாழ்விடச் சூழலுக்கு மத்தியில்தான் நீங்கள் நடிக்க வேண்டியிருக்கும். உங்கள் மூக்கு உங்களிடம் இருக்காது” என்றார். இப்படியொரு சவால்தான் எனக்கும் தேவைப்பட்டது.

ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்குப் போய்விட்டாலும், நான் ஏற்கனவே பத்து படங்களைக் கடந்த ஹீரோயின்; கண்டிப்பாக இவர் ஸ்பாட்டில் சீன் போடுவார் என்று நினைத்தாரோ என்னவோ, முதல் இரண்டு மூன்று நாட்கள் எனது சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் சோதனைப் படப்பிடிப்பைத்தான் நடத்திப் பார்த்தார். பிறகுதான் என்னை நம்பினார். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் என்னை வற்புறுத்தவில்லை. மணிகண்டன் கிரேட்.

உங்களை கஷ்டப்படுத்திய காட்சி எது?

அங்கே இருக்கும் மிக மோசமான சூழ்நிலையில் அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். அதன் பிறகு அங்கே எடுக்கப்பட்ட எந்தக் காட்சியும் எனக்குக் கஷ்டமாகத் தெரியவில்லை. என் பிள்ளைகளாக நடித்த சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்க முட்டையும் நடிக்கவே இல்லை. அவர்கள் அவர்களாகவே இருந்தார்கள்.

பாட்டியும் அப்படித்தான். நடிப்பை விரும்பி ஏற்றுக்கொண்ட நானும் அவர்களில் ஒருத்தியாக மாறுவது சவால்தான். பல காட்சிகளில் அந்த நாய்க்குட்டி தூங்குவதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால் காக்கா முட்டை எனக்கொரு நடிப்புப் பள்ளி.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். படத்தில் கூவம் ஆற்றில் இறங்கிச் சென்று எனது மகன்களைத் தேடிச் செல்வதுபோன்ற காட்சியில் நடித்தேன்.

அவ்வளவு நாற்றம். இரண்டு நாள் சரியாகச் சாப்பாடு இறங்கவில்லை. ஆனால் சகதியும் தண்ணீருமாக இருக்கும் அந்த ஆற்றின் ஓரத்தில் சின்னச் சின்னக் குடிசைகளில் மக்கள் வசிக்கிறார்கள். சின்னச் சின்னக் குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். கவலையோடு அங்கு வசித்த பெண்களிடம் பேச்சுக்கொடுத்தபோதுதான் அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கிவிட்டேன்.

மழை மற்றும் பனிக்காலத்தில் மலேரியாவுக்கும் டெங்குவுக்கும் அங்கே குழந்தைகள் செத்துக்கொண்டேதான் இருப்பார்களாம். இத்தனை வருடங்களாக நமது அரசாங்கங்களால் இதை மாற்ற முடியவில்லை என்றால் நாம் வேறு எதை மாற்றிவிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

படத்தில் சென்னை வட்டார வழக்கை நன்றாகப் பேசியிருக்கிறீர்களே எப்படி?

படப்பிடிப்பின்போதும் சென்னைத் தமிழைப் பேசித்தான் நடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் இயக்குநர். படப்பிடிப்பு நடந்த 60 நாட்களும் நான் சென்னைத் தமிழில் பேசியதால்தான் என்னால் டப்பிங் சமயத்திலும் அதைச் சிறப்பாகப் பேச முடிந்தது. தவிர நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் கடினமாக இருக்கவில்லை.

படம் பார்த்து உங்களைப் பாராட்டிய ஹீரோயின்?

குஷ்பூ மேடம்.

உங்களது குடும்பப் பின்னணி பற்றி சொல்லுங்கள்?

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்துதான் வந்திருக்கிறேன். தெலுங்குப் பட உலகில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து பிறகு ஹீரோவானவர் எனது அப்பா ராஜேஷ்.

சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். அம்மா நாகமணி. நல்ல நடனக் கலைஞர். குடும்பத் தலைவி. எனது அத்தை ஸ்ரீ லட்சுமி தெலுங்கில் முத்திரை பதித்த நகைச்சுவை நடிகை. சுமார் 500 படங்களில் நடித்திருக்கிறார்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். வீட்டில் தெலுங்குதான் பேசுவோம். ஆனால், தமிழில் இருக்கும் இனிமை எனக்குப் பிடிக்கும். விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் நடித்திருக்கிறேன். அதில் கலையரசி என்ற பெயரில் தமிழ்ப் பட்டிமன்றப் பேச்சாளராக நடித்திருக்கிறேன். எனது மேடைத் தமிழைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x