

தமிழ்நாட்டில் சினிமா மீதான கவர்ச்சியையும் அது அரசியலுடன் உறவு கொண்டி ருப்பதையும் இப்போதுவரை பிரிக்க முடியவில்லை. காங்கிரஸ் என்கிற ஒரு மக்கள் பேரியக்கம், சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் திராவிட இயக்கத்தால் சினிமா புகழைக் கொண்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, அதற்குஅவர்களுடைய வழியிலேயே பதிலடி கொடுத்து, காங்கிரஸின் செல்வாக்குக் கரைந்துவிடாமல் காப்பாற்றிய ஒரு பன்முக ஆளுமை தமிழ்நாட்டில் வாழ்ந்தார்.
அவர், கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பதவி யையும் அடைய விரும்பாமல், காங்கிரஸின் அருந்தொண்டராக, சுதந்திரத்துக்குப் பிறகும் தன் போராடும் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் களத்திலே ஒரு போராட்டக்காரராக நின்றார்.
சிறந்த பேச்சாளர், சிறந்த பதிப்பாளர், துணிச்சல் மிக்க இதழாசிரியர், திறமையான கதாசிரியர் எனப்படைப்புத் துறையில் தலைசிறந்து விளங்கி னார். தமிழ்நாடு முழுவதும் பயணித்து 15 ஆயிரம் சிவாஜி ரசிகர் மன்றங்களை ஊர் தோறும் தொடங்கி ஒருங்கிணைத்தார்.
அவற்றையெல் லாம் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் என்கிற ஒரே பெரிய அமைப்பாகக் கட்டி யெழுப்பினார். அதன் தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களை அரசியல்மயப்படுத்தினார். அவர் தான் ‘தேசியச் செல்வர்’ சின்ன அண்ணா மலை. அவருக்கு நேற்று 105வது பிறந்த நாள்.
45வது நினைவு நாளும்கூட. பிறந்த நாளே அவர் மறைந்த நாளாகவும் அமைந்தது போலவே, சின்ன அண்ணாமலையின் வாழ்க்கை பல அரிய, சுவாரசியமான திருப்பங்களைக் கொண்டது.
புத்தகக் கடைக்கு வந்த சிவாஜி அப்போது நான் இளைஞன். சின்ன அண்ணாமலை தன்னுடைய தமிழ்ப் பண்ணை பதிப்பகம் மூலம் அழகான வடிவமைப்பில் வெளியிடும் எல்லாப் புத்தகங்களையும் தவறாமல் வாங்கி வாசிப்பேன்.
சென்னை தியாகராயநகர், பனகல் பூங்கா பகுதியில் உள்ள எங்கள் நல்லி ஜவுளிக் கடையின் பக்கத்து மனையிலேயே தமிழ்ப் பண்ணைக் காரியா லயமும் அதன் புத்தகக் கடையும் இருந்தன. என் மீது அளவற்ற பிரியம் வைத்திருந்தார். தமிழ்ப் பண்ணையில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்களை அடிக்கடி காணலாம்.
காமராஜரும் ம.பொ.சியும் இன்னபிற தலைவர்களும் பலமுறை தமிழ்ப் பண்ணைக்கு வந்து சென்றிருக்கிறார்கள். காமராஜரே தமிழ்ப் பண்ணைக்கு வருகை தரும்போது, அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட சிவாஜி கணேசன் வராமல் இருப்பாரா? சிவாஜி வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் திமுதிமுவெனக் கடைக்குள் நுழைந்து புத்தகங்களைப் போட்டிப் போட்டு வாங்கி, சிவாஜியிடம் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டனர். நல்ல வியாபாரம்.
ஒரு முன்னணி சினிமா நட்சத்திரம் புத்தகக் கடைக்கு வரும்போது நடக்கும் அதிசயம், எதிர்பாராத புத்தக விற்பனை! சின்ன அண்ணாமலையை காங்கிரஸின் அருந்தொண்டராகத் தொடக்கம் முதலே நன்கு அறிந்திருந்தார் சிவாஜி கணேசன். சின்ன அண்ணாமலை தான் வாசித்த வற்றிலிருந்து சினிமாவுக்கு ஏற்ற கதைகளை சிவாஜிக்குப் பரிந்துரை செய்துவந்தார். அது அவர்களுடைய நட்பை இன்னும் பலப்படுத்தியது.