அகதிகள் முகாமா, உயிரியல் பூங்காவா?- இயக்குநர் சத்யசிவா சிறப்பு பேட்டி

அகதிகள் முகாமா, உயிரியல் பூங்காவா?- இயக்குநர் சத்யசிவா சிறப்பு பேட்டி
Updated on
2 min read

தமிழகத்தில் தஞ்சம் புகுந்து வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளின் புகலிடச் சிக்கல்களைப் பேச வருகிறது ‘சிவப்பு’ திரைப்படம். கழுகு, சவாலே சமாளி ஆகிய படங்களை இயக்கிய சத்யசிவாவிடமிருந்து இந்த மாறுபட்ட முயற்சி எப்படி? அவரிடமே கேட்டோம்…

காதல், நகைச்சுவைக் கதைகளை இயக்கிவிட்டு ஒரு சீரியஸ் பிரச்சினையை எடுத்துக் கொண்டது எதனால்?

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததுதான் சினிமா என்று நாம் சொல்லிக்கொண்டாலும் உண்மைகள் சொல்லப்படும்போது மட்டும்தான் அது மக்களை அதிகமாகப் பாதிக்கிறது. தவிர நம் கண் முன்னால் அழுதுகொண்டிருக்கும் உண்மைகளை சினிமாவுக்கு எடுத்துவராவிட்டால் நம்மை இயக்குநராக அங்கீகரித்த மக்களுக்கு வேறு எப்படிக் கைம்மாறு செய்ய முடியும்?

இலங்கைப் பிரச்சினையைப் படமாக்க முடியாத சூழல்தான் இங்கே இருந்தது. இப்போது காலம் கனிந்துவிட்டது என்று சொல்லலாமா?

எனக்கு முன் பல இயக்குநர்கள், ஒரு கதாபாத்திரம், சில காட்சிகள், இலைமறை காயாக இந்தப் பிரச்சினையைப் பேசுவது என்று தங்கள் உணர்வுகளைப் பதிவுசெய்து வந்திருக்கிறார்கள். ஆனால் பிரச்சினையை முழுமையாக நேரடியாகப் பேசத் தயங்கி அவர்கள் இதைக் கைவிட்டதற்கான காரணங்கள் நியாயமானவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

காரணம் இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்குள் நொந்து நூலாகிவிட்டேன். அவ்வளவு போராட்டம். அவ்வளவு பிரச்சினைகள். எல்லோரையும்போல வணிகத் திரைப்படம் எடுத்துவிட்டுப் போயிருக்கலாமே, ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தோம் என்று நினைக்க வைத்துவிட்டார்கள். மக்களுக்கு முன்பே படத்தைப் பற்றி முடிவு செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களால்தான் இங்கே அதிகப் பிரச்சினை.

ராஜ்கிரண்தான் இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமா?

ஐந்து முக்கியக் கதாபாத்திரங்களில் அவருடையது முதன்மையானது. இதற்கு முன் இப்படியொரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை. நிஜ வாழ்க்கையில் இந்தப் பிரச்சினையை ராஜ்கிரண் எப்படிப் பார்ப்பாரோ அப்படித்தான் அவரது கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறேன்.

இந்தக் கதையை அவரிடம் சொல்லி முடித்ததும் ஒரு மணிநேரம் என்னிடம் பேசினார். அவர் என்னிடம் பேசிய விஷயங்களை வைத்து அவரது கதாபாத்திரத்தை மேலும் வலுவானதாக மாற்றினேன். தன் வாழ்நாளில் மிக முக்கியமான படம் இது என்று கூறி முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். இரக்கமும் கோபமும் கொண்ட ‘கோனார்’ என்ற கட்டிட மேஸ்திரியாக வருகிறார்.

படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான நேரத்தில் தயாரிப்பாளர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். படம் வெளிவருமா என்ற கேள்வி வந்தபோது நானே இதை வெளியிடுகிறேன் என்று ராஜ்கிரண் முன்வந்தார். ஆனால் படத்தைப் பார்த்த தேசிகன் என்ற விநியோகஸ்தர் முந்திக்கொண்டு படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் கதை என்ன?

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் தவிப்பும் போராட்டமும்தான் கதை. நம்பிக்கையுடன் அடைக்கலம் தேடி வந்த இடத்தில் கிடைக்காத சுதந்திரமும் புறக்கணிப்பும் அவர்களை இங்கிருந்து எப்படித் துரத்துகிறது என்பது கதையின் முக்கிய அங்கம். அவர்களை அரவணைப்பதுபோல் நாம் எப்படிக் கைவிட்டோம் என்பதையும் படம் பேசும். இத்தனை வலியான வாழ்க்கைக்கு மத்தியில் இந்த மண்ணிலேயே இழந்த வாழ்க்கை கிடைத்துவிடாதா என ஏங்கும் ஒரு காதலும் கதையை நகர்த்துகிறது.

ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லும் முகவர்களால் ஏமாற்றப்பட்டு, அகதிகள் முகாமுக்கும் திரும்ப முடியாமல், ஊருக்குள்ளும் வாழ முடியால் ராஜ்கிரணிடம் அடைக்கலமாகும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக, நாயகி கதாபாத்திரத்தில் ரூபா மஞ்சரி நடித்திருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா ராஜ்கிரணின் உதவியாளராக வருகிறார். நீதிபதியாகக் கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடித்திருக்கிறார். செல்வா ஒரு ஒரு பக்கா அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அவருக்கு இது நல்ல ரீ எண்ட்ரியாக இருக்கும்.

தமிழக அரசு இலங்கை அகதிகளின் நல்வாழ்வுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும்போது ஏன் அவர்கள் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லத் துடிக்கிறார்கள்?

திரைக்கதை எழுதும் முன் இதே கேள்வியை ஆஸ்திரேலியா செல்ல முயன்று பிடிபட்ட இலங்கை அகதிகள் பலரிடம் கேட்டேன். “வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உட்படப் பல்வேறு உயிரினங்களைக் கூண்டுகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். நல்ல உணவு கொடுக்கிறார்கள். ஆனால் அவற்றின் உண்மையான வீடு அவை வாழ்ந்த காடுதான். எங்களுக்கு இங்கே குடியுரிமை கேட்கிறோம். முழுமையான சுதந்திரம் கேட்கிறோம்.

ஆனால் இரண்டுமே இங்கே மறுக்கப்படுகின்றன. ஆறு மணிக்குமேல் முகாமுக்கு வந்துவிட வேண்டும் என்கிறார்கள். நாங்களும் தமிழர்கள்தானே, தமிழ்தானே பேசுகிறோம்? பிறகு எங்களை ஏன் கொட்டடிகளில் அடைக்கிறீர்கள்? முகாம்களை மறுவாழ்வு தருபவையாக எங்களால் உணர முடியவில்லை. அப்படியிருக்கும்போது எங்களுக்கான நிரந்த முகவரியைத் தேடிச் செல்வதில் தவறில்லைதானே?” என்று என்னிடம் கேட்டார்கள். அதில் எத்தனை நியாயம் இருக்கிறது என்று பாருங்கள்.

சத்யசிவா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in