

அறுபதுகளில் மும்பையை கதிகலங்க வைத்த சைக்கோ கொலைகாரன் ராமன் ராகவ் பற்றிய ஆவணப்படமொன்றை இயக்கி கவனம் பெற்றவர் பாலிவுட்டின் அதிர்வலை சினிமா இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் ராகவன்.
‘ஏக் ஹசீனா தீ’ ‘ஜானி கத்தார்’ போன்ற சிறந்த படங்களை அளித்த ராகவன் ‘ஏஜெண்ட் விநோத்'துக்கு பிறகு இயக்கியிருக்கும் படம். ‘வாள் மறக்கலாம், ஆனால் மரம் மறக்காது’ எனும் அரேபிய பழமொழிதான் படத்தில் காட்டப்படும் முதல் வாசகம். இதுவே படத்தின் ஒருவரிக் கதையைப் பளிச்சென்று சொல்லிவிடுகிறது. அந்த அளவிற்குப் படமும் கூர்மை.
பழிவாங்குதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும் கதாபாத்திரங்களை இயக்குநர் அணுகிய வகையில் சிறப்பான படமாக மாறிவிடுகிறது. படத்தின் ஆரம்பக் காட்சியைத் தவறவிடாதீர்கள் என்று படத்தின் தலைப்புக்கு கீழே துணைத் தலைப்பாகப் போட்டிருக்கிறார்கள். அது உண்மைதான்.
அதைத் தவறவிட்டால் நிச்சயம் படத்துடன் ஒன்ற முடியாது. சமீபத்தில் வெளியான இந்திப் படங்களில் அற்புதமான தொடக்கக் காட்சி என பத்லாபூரின் காட்சியைத் தயங்காமல் சொல்லிவிடலாம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த வங்கிக் கொள்ளைக் காட்சி கொடுக்கும் பதைபதைப்பு நேர்த்தியாக படத்தொகுப்புச் செய்யப்பட்ட காட்சியில்கூட கிடைக்காது.
இதில் கதை நாயகனாய் வருகிறார் வருண் தவான். ஆனால் நவாசுதீன் சித்திக்கைப் பொறுத்தவரை அவருக்கு இவர் வில்லன், இவருக்கு அவர் வில்லன். வயதுக்கு மீறிய வேடமென்றாலும் அதைச் சிறப்பாய் செய்திருக்கிறார் தவான். லியாக்காக வரும் நவாசுதீன் சித்திக் தன்னுடய கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வரும் விதம் அபாரம். சமயங்களில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை.
பாலியியல் தொழிலாளியான இவரது காதலி ஹூமா குரேஷியிடம் லியாக்கின் பார்ட்னரை பற்றி தவான் கேட்குமிடத்தில், தவானின் கண்களைப் பார்க்காமல் குரேஷி ஆடும் ஆட்டமாகட்டும், லியாக்கின் தோல்விக்குப் பிறகு தன்னை இச்சைக்காக வைத்திருப்பவர் கண் முன்னே பேசும் வசனமாகட்டும், நடிப்பென்றே தெரியா வண்ணம் நடித்திருக்கிறார்.
யோகாவுக்கு பதிலாய் வீட்டைத் துடைக்கும் தனியார் டிடெக்டிவ், இரண்டு முறை இதய அறுவைசிகிச்சை, மூன்றுமுறை பதவியுயர்வு பெற்று இன்னமும் நேர்மைக்கும், ஆசைக்குமிடையே அலைபாயும் இன்ஸ்பெக்டர்.
கணவனுக்காக படுக்கையை பகிர தயாராக இருக்கும் ராதிகா அப்தே, செய்த செய்கைக்கும், நிஜத்துக்கும் இடையே ஒடுங்கி நடுக்கும் அவளது கணவன் முன்னாள் கொள்ளைக்காரன் விநய் பதக், நவாசுதீனைப் பின் தொடரும் போலீஸ், பத்து வருடங்களுக்குப் பிறகு பழைய காதலியைத் தேடிப் போகும் விடுதியில் காதலியைக் கேட்க, இது என்ன மராத்தா மந்திர் திரையரங்கா?
(பதினைந்து ஆண்டுகளாக இந்தத் திரையரங்கில் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' இந்தித் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது) என்று கேட்கும் மிக நுட்பமான நகைச்சுவை என நீண்ட நாட்களுக்குப் பின் நம்முள் ஊடாடும் ஒரு நியோ நார் வகைப் படமிது. ஸ்ரீராம் ராகவன் திரும்பவும் வந்துவிட்டார்.